வெள்ளி, 11 செப்டம்பர், 2015

P 131 காப்பிய இலக்கியம் (கூறு 3)

அ) திருவிளயாடல் புராணம்
மதுரையிலும் பாண்டிய நாட்டின் வேறு சில ஊர்களிலும் சிவபெருமான் நிகழ்த்திய 64 அற்புதங்களைத் தொகுத்துக்கூறுவதால் இந்நூல் திருவிளையாடல் புராணம் எனப் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பரஞ்சோதி முனிவர் என்பவராவார். இவருக்கு முன்பே இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல்களைத் தொகுத்து வழங்கியவர் பெரும்பற்றப்புலியூர் நம்பி என்பவராவார். இவரது திருவிளையாடல்  புராணம் வேம்பத்தூரார் திருவிளையாடல் புராணம் என்ற பெயரால் வழங்கிவருகிறது.
சிறப்புகள்:  மதுரைக் காண்டம், கூடல் காண்டம், திருவாலவாய்க் காண்டம் என்னும் மூன்று காண்டங்களையும் 65 படலங்களியும் 3363 விருத்தங்களையும் கொண்டமைந்துள்ளது. பெருங்காப்பிய பண்பு மிக்கது. சைவசித்தாந்த கருத்துகள், இசைக்குறிப்புகள், பல்வகை அணிகலன்கள், நவரத்தினங்களின் நீர்மை, சோதிடக்குறிப்பு, குதிரைகளின் இலக்கணம் போன்ற செய்திகளை கதை ஓட்டத்தின் வாயிலாக வழங்கியுள்ளது.
3. திருவாலவாய்க் காண்டம்
52. தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம்
மன்னவர் மன்னன் வங்கிய சூடா மணிமாறன்
தென்னவ ராகித் திகிரி யுருட்டுந் தென்கூடல்
முன்னவ ரன்னங் கண்டறி யாத முடிக்கேற்பப்*
பன்மலர் நல்கு நந்தனம் வைக்கும் பணிபூண்டான்.
வேந்தர் வேந்தனாகிய வங்கிய சூடாமணி பாண்டியன், சுந்தர பாண்டிய ஆகி ஆடிசிச்சக்கரத்தினை செலுத்திய, தென்தியிலுள்ள நான்மாடக் கூடலில் எழுந்தருளிய
சோமசுந்தரக் கடவுளின், பிரமனாகிய அன்னப்பறவை காணாத திருமுடிக்குப் பொருந்த, பல மலர்களைக்கொடுக்கும், திருநந்தவனம் வைத்தலாகிய திருப்பணியை மேற்கொண்டான்.
முண்டக மென்கடி நீலமு தற்பல முப்போதும்
எண்டிசை யுங்கம ழும்படி நந்தன மெங்குந்தேன்
உண்டிசை வண்டு படிந்துமு ரன்றிட வுண்டாக்கி
வண்டிமிர் சண்பக நந்தன முந்தனி வைத்தானால்.
தாமரையும் மெல்லிய மணமுள்ள நீலோற்பலமுமாகிய இவை முதலிய பல மலரும், மூன்றுகாலத்தும் எட்டுத் திக்குகளிலும் மணங்கமழுமாறு, திருநந்தவனத்தினை, எங்கும் தேனில் படிந்து அதனைப் பருகி வண்டுகள் இசைபாடும் வண்ணம் உருவாக்கி, வண்டுகள் ஒலிக்கும் சண்பக நந்தவனமும், தனியே வைத்தான்.
அன்னவி யன்பொழின் மாமது ரேச ரடித்தாழ்வோன்
பொன்னவிர் சண்பக மாலைபு னைந்த புதுக்கோலம்
தன்னைவி யந்திவர் சண்பக சுந்தரர் தாமென்னா
முன்னரி றைஞ்சின னிம்பம ணிந்த முடித்தென்னன்.
அந்தப் பரந்த சோலை சூழ்ந்த மதுரையில் எழுந்தருளிய சோமசுந்தரக் கடவுளின்,
அடியை வணங்குவோனாகிய, வேப்ப மலர் மாலை சூடிய முடியையுடைய
அப்பாண்டியன், பொன்போல விளங்கும் சண்பகமாலை அணிந்த புதிய
கோலத்தைக் கண்டு வியப்புற்று, இவர் சண்பக சுந்தரர் என்று கூறித் திருமுன் வணங்கினன்.
அன்னதொர் நாமம் பெற்றன ரின்று மணிக்கூடன்
முன்னவ ரந்தத் தாமம வர்க்கு முடிக்கேற்றும்
இன்னதொர் நீராற் சண்பக மாற னென்றேபேர்
மன்னிவி ளங்கினன் வங்கிய சூடா மணிதானும்.
அழகிய கூடலில் எழுந்தருளிய முதல்வராகிய சோமசுந்தரக்கடவுள், இதுபோதும் அந்த ஒரு திருநாமத்தைப் பெற்றார்; அந்தச் சண்பக மாலைகளை, அவரது திருமுடிக்கு சூட்டி ஏற்றும் இத்தன்மையால். வங்கிய சூடாமணி என்னும் பாண்டியனும். சண்பகப் பாண்டியன் எனப் பெயரெய்தி விளங்கினன்.

பொங்கரி னுழைந்து வாவி புகுந்துபங் கயந்து ழாவிப்
பைங்கடி மயிலை முல்லை மல்லிகைப் பந்தர் தாவிக்
கொங்கலர் மணங்கூட் டுண்டு குளிர்ந்துமெல் லென்று தென்றல்
அங்கங்கே கலைக டேரு மறிவன்போ லியங்கு மன்றே.
தென்றல் காற்று, பல இடங்களிலும் சென்று நூல்களை ஆராய்ந்து அறியும் அறிவுடை மாணவன் போல, சோலையில் நுழைந்து, தடாகத்தில் புகுந்து, தாமரையை அளாவி, பசிய மணமுள்ள இருவாட்சியும் முல்லையும் மல்லிகையுமாகிய இவற்றின் பந்தரிலே தாவி, மகரந்தத்தையுடைய மலர்களின் மணங்களைக் கவர்ந்து. குளிர்ந்து மெதுவாய், உலாவும்.
தாமரை களாஞ்சி தாங்கத் தண்குயின் முழவ மேங்க
மாமரு தமருங் கிள்ளை மங்கல மியம்பத் தும்பி
காமர மிசைப்ப முள்வாய் கைதை*வா ளெடுப்ப வேனிற்
கோமகன் மகுடஞ் சூடி யிருப்பதக் குளிர்பூஞ் சோலை.
தாமரை காளாஞ்சி தாங்கவும், குளிர்ந்த குயில் முழவம் ஒலிக்கவும், பெரிய மருதமரத்தில் இருக்குங் கிளி, மங்கலங் கூறவும், வண்டுகள் இசைப்பாட்டுப் பாடவும், முட்களையுடைய தாழை வாளை ஏந்தவும், வேனிற்காலத்திற்குரிய மன்மதன் முடிசூடி வீற்றிருக்கப்பெறுவது, அந்தக் குளிர்ந்த பூஞ்சோலை.
இவ்விள வேனிற் காலத் தின்னுயிர்த் துணைவி யோடும்
செவ்விய செங்கோ னேமிச் செண்பக மாற னோர்நாள்
கைவினை வல்லோன் செய்த கதிர்விடு காந்தக் குன்றில்
வெவ்விய வேடை நீப்பா னிருந்தனன் வேறு வைகி.
இந்த இளவேனிற் காலத்தில் ஒருநாள், சிற்பநூல் வல்லோன் செய்த, ஒளிவிடும் சந்திரகாந்தக் கல்லாலாகிய செய்குன்றின்கண், கொடிய வெப்பத்தைப்
போக்கும் பொருட்டு, திருந்திய செங்கோலையும் ஆணிஅச்சக்கரத்தினையும் உடைய செண்பகமாறன், தனது இனிய உயிர்போலும் இருக்கும் மனைவியோடும், வேறாகத் தங்கி இருந்தனன்.
வெவ்விய வேலான் வீசும் வாசமோந்* தீது வேறு
திவ்விய வாச மாக விருந்தது தென்றல் காவில்
வௌவிய வாச மன்று காலுக்கும் வாச மில்லை
எவ்வியல் வாச மேயோ விதுவென வெண்ணங் கொள்வான்.
கொடிய வேற்படையினையுடைய செண்பக மாறன், அங்ஙனம் வீசிய மணத்தை
உயிர்த்து, இது வேறு தெய்வத் தன்மை பொருந்திய மணமாக இருந்தது; தென்றல் சோலையில் கவர்ந்த மணம் அன்று; காற்றுக்கும் இயல்பாக மணமில்லை (ஆயின்) இம்மணம் எதன்கண் பொருந்திய மணமோ என்று, எண்ணுவானாகினான்.
திரும்பித்தன் றேவி தன்னை நோக்கினான் றேவி யைம்பால்
இரும்பித்தை வாச மாகி யிருந்தது கண்டிவ் வாசஞ்
சுரும்பிற்குந் தெரியா தென்னாச் சூழ்ந்திறும் பூது கொண்டீ
தரும்பித்தைக் கியல்போ செய்கை யோவென வையங் கொண்டான்.
திரும்பித் தனது மனைவியைப் பார்த்தான் செண்பக மாறன்; (அந்தமணம்) தேவியின் ஐந்து பகுப்பாக முடிக்கப்படும் பெருமை பொருந்திய கூந்தலின் மணமாயிருத்தலைக் கண்டு. இம்மணம் வண்டிற்கும் தெரியாது என்று எண்ணி, வியப்புற்று, இம்மணமானது அரிய கூந்தலுக்கு இயற்கையோ (அன்றிச்) செயற்கையோ என்று ஐயுற்றான்.
ஐயுறு கருத்தை யாவ ராயினு மறிந்து பாடல்
செய்யுந ரவர்க்கே யின்ன வாயிரஞ் செம்பொ னென்றக்
கையுறை வேலா னீந்த பொற்கிழி கைக்கொண் டேகி
மெய்யுணர் புலவர் முன்னாத் தூக்கினர் வினைசெய் மாக்கள்.
யான் ஐயுற்ற கருத்தினை உணர்ந்து, செய்யுள் இயற்றிப் பாடுகின்றவர்
யாவராயிருந்தாலும், அவருக்கே இந்த ஆயிரம் செம்பொன் அடங்கிய முடிப்பு உரியதென்று கூறி, அந்த வேற்படை ஏந்திய கையினனாகிய சண்பகமாறன் கொடுத்த பொன்முடிப்பை, ஏவலாளர் பெற்றுச் சென்று, உண்மையை உணர்ந்த சங்கப் புலவர்
இருக்கை முன்னே கட்டித் தொங்கவிட்டனர்.
அந்த வேலையில் ஆதி சைவரில்
வந்த மாணவன் மணஞ்செய் வேட்கையான்
முந்தை யாச்சிம முயலும் பெற்றியான்
தந்தை தாயிலான் றருமி யென்றுளான்.
அப்பொழுது, ஆதி சைவ மரபில் வந்த மாணவனும், தந்தையும் தாயும் இல்லாதவனும், பிரமச்சரிய நிலையில் வழுவாது ஒழுகுந் தன்மையனும் ஆகிய, தருமி என்ற பெயருள்ள ஒருவன், மணஞ்செய்யும் விருப்புடையவனாய்.

நெடிய வேதநூ னிறைய வாகமம்
முடிய வோதிய முறையி னிற்கெனும்*
வடுவி லில்லற வாழ்க்கை யின்றிநின்
அடிய ருச்சனைக் கருக னாவனோ.
உயர்ந்த மறை நூல்கள் முற்றவும், ஆகமங்கள் முற்றவும், ஓதி அறிந்த முறையில் நிற்பேன் எனினும், குற்றமில்லாத இல்லற வாழ்க்கை இல்லாமல், தேவரீரின் திருவடியை
அருச்சிப்பதற்கு உரியன் ஆவனோ (ஆகேன்).
ஐய யாவையு மறிதி யேகொலாம்
வையை நாடவன் மனக்க ருத்துணர்ந்
துய்ய வோர்கவி யுரைத்தெ னக்கருள்
செய்ய வேண்டுமென் றிரந்து செப்பினான்.
ஐயனே, நீ யாவற்றையும் அறிவாயன்றே, வையை நாட்டை உடைய பாண்டியனது உள்ளக் கருத்தை ஓர்ந்து, யான் உய்திபெற, ஒரு கவிபாடி, எனக்கு அருள் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கூறினான்.
தென்ன வன்குல தெய்வ மாகிய
மன்னர் கொங்குதேர் வாழ்க்கை யின்றமிழ்
சொன்ன லம்பெறச் சொல்லி நல்கினார்
இன்ன றீர்ந்தவ னிறைஞ்சி வாங்கினான்.
பாண்டியன் குலதெய்வமாகிய, சுந்தர பாண்டியர், கொங்குதேர் வாழ்க்கை என்னும் முதலையுடைய இனிய தமிழ்ப் பாடலை, சொல்லழகு நிரம்பப் பாடித் தருமிக்கு தந்தருளினார்; துன்பம் நீங்கி அத்தருமி என்பவன் (அதனை) வணங்கி
வாங்கினான்.
கல்வி யாளர்தங் கையி னீட்டினான்
வல்லை யாவரும் வாங்கி வாசியாச்
சொல்லின் செல்வமும் பொருளுந் தூக்கியே
நல்ல நல்லவென் றுவகை நண்ணினார்.
புலவர் கையில் (அத்திருப் பாசுரத்தைக்) கொடுத்தான்; விரைந்து வாங்கி, அனைவரும் அதனைப் படித்து, சொல்வளத்தையும் பொருள் வளத்தையும் சீர் தூக்கி (அவை) மிகவும் நல்லன என்று கூறி, மகிழ்ச்சி யுற்றனர்.
உணர்ந்த கேள்வியா ரிவரொ டொல்லைபோய்ப்
புணர்ந்த வாயிரம் பொன்னு மின்றமிழ்
கொணர்ந்த வேதியன் கொள்க வின்றென
மணந்த தாரினான் மகிழ்ந்து நல்கினான்.
உண்மை யுணர்ந்த கேள்வி வல்லாராகிய இப்புலவரோடும், விரைந்து சென்று, பொருந்திய ஆயிரம் பொன்னையும், இனிய பாடலைக் கொண்டுவந்த வேதியன் இப்பொழுதே பெறத் தகுதியானவன் என்று, மணம் வீசும் மாலையையணிந்த பாண்டியன், மகிழ்ந்து அளித்தான்.
வேந்த னேவலால் விபுதர் தம்மொடும்
போந்து மீண்டவைப் புறம்பு தூங்கிய
ஆய்ந்த பொற்கிழி யறுக்கு நம்பியை
நேர்ந்து கீரனில் லெனவி லக்கினான்.
பாண்டியன் ஏவலினால், புலவரோடும் திரும்பிச் சென்று, கழகத்தின் வெளியில் தொங்கிய, சிறந்த பொன் முடிப்பை அறுக்கும் அத்தருமியை, நக்கீரன் எதிர்ந்து அறுக்காதே நில் என்று தடுத்தான்.
உலர்ந்த நெஞ்சுகொண் டொதுங்கி நாயகன்
நலந்த ருங்கழ னண்ணி னானவன்
மலர்ந்த பாடல்கொண் டறிஞர் வைகிடத்
தலர்ந்த சிந்தைகொண் டடைந்த மைந்தனே.
முன்பு இறைவன் திருவாய் மலர்ந்தருளிய திருப்பாசுரத்தைப் பெற்றுக்கொண்டு,
சங்கப்புலவர் இருக்கும் இடத்திற்கு, மகிழ்ந்த உள்ளத்தோடு சென்ற அத்தருமி என்பான் இப்போது, வாடிய மனத்துடன் நடந்து, இறைவனது, நன்மையைத் தருந் திருவடியை அடைந்தனன்.
செய்யுள் கொண்டுபோய்த் திருமுன் வைத்துளப்
பையுள் கொண்டவப் பனவ னென்னைநீ
மையுண் கண்டவிவ் வழுவு பாடலைக்
கையு ணல்கினாய் கதியி லேற்கெனா.
உள்ளத்தில் கவலை கொண்ட அம்மறையோன், திருப்பாசுரத்தைக் கொண்டுபோய்த் திருமுன் வைத்து, கருமை பொருந்திய திருமிடற்றை உடையவனே, நீ குற்றமுள்ள இப்பாடலை, ஒரு பற்று மற்ற எனக்குக் கையில் அளித்தருளினையே அது என்னை என்று கூறி.
எந்தையிவ் விகழ்ச்சி நின்ன தல்லதை யெனக்கியா தென்னாச்
சிந்தைநோ யுழந்து சைவச் சிறுவனின் றிரங்க யார்க்கும்
பந்தமும் வீடும் வேதப் பனுவலும் பயனு மான
சுந்தர விடங்க னங்கோர் புலவனாய்த் தோற்றஞ் செய்தான்.
எமது தந்தையே, இந்த நிந்தை நின்னைச் சார்ந்ததல்லது, எனக்கு இதில் ஒன்றும் இல்லை கூறி, அவ் வாதிசைவ மாணவன், மனக்கவலையால் வருந்தி நின்று இரங்க, அனைவருக்கும் பந்தமும் வீடும், மறைநூலும் அதன் பயனுமாகிய, சோமசுந்தரக் கடவுள், அங்கு ஒரு புலவனாகத் தோற்றுவானாயினன்.
ஆரவை குறுகி நேர்நின் றங்கிருந் தவரை நோக்கி
யாரைநங் கவிக்குக் குற்ற மியம்பினா ரென்னா முன்னங்
கீரனஞ் சாது நானே கிளத்தினே னென்றா னின்ற
சீரணி புலவன் குற்றம் யாதெனத் தேராக் கீரன்.
புலவர் நிறைந்த அவையினைச் சார்ந்து, எதிர் நின்று, அங்கிருந்த புலவர்களைப் பார்த்து, எமது கவிக்குக் குற்றம் கூறினவர் யார் என்று கேட்பதற்கு முன்னரே, நக்கீரன் சிறிதும் அஞ்சாது நானே குற்றங் கூறினேன் என்றனன், அதனைக் கேட்டு நிலைபெற்ற புகழ்வாய்ந்த புலவன், குற்றம் யாதென்று வினவ, தெளியாத நக்கீரன்.
சொற்குற்ற மின்று வேறு பொருட்குற்ற மென்றான் றூய
பொற்குற்ற வேணி யண்ணல் பொருட்குற்ற மென்னை யென்றான்
தற்குற்றம் வருவ தோரான் புனைமலர்ச் சார்பா லன்றி
அற்குற்ற குழற்கு நாற்ற மில்லையே யென்றா னையன்.
சொற்குற்ற மில்லை; வேறே பொருளின் குற்றமென்று கூறினான்; தூயபொன்னை யொத்த சடையையுடைய இறைவன், பொருட்குற்றம் என்னை என்று வினவினன் தனக்குக் குற்றம்
வருவதை அறியாத கீரன், அணிந்த மலர்ச்சார்பினாலல்லாமல், இருளை ஒத்த கூந்தலுக்கு, இயற்கையாக மணம் இல்லை என்று கூறினான்; இறைவன்.
பங்கய முகமென் கொங்கைப் பதுமினி குழலோ வென்ன
அங்கது மனைத்தே யென்றா னாலவா யுடையான் றெய்வ
மங்கையர் குழலோ வென்ன வன்னது மந்தாரத்தின்
கொங்கல ரளைந்து நாறுங் கொள்கையாற் செய்கைத் தென்றான்.
தாமரை மலர்போன்ற முகத்தையும் மெல்லிய கொங்கையையுமுடைய
பதுமினி கூந்தலோ என்று வினவ, அக்கூந்தலும் அத் தன்மைத்தே எனக் கூறினான்; திருவாலவாயுடைய இறைவன் தேவமகளிரின் கூந்தலோ என்று வினவ, அக்கூந்தலும்,
மந்தாரத்தின் மணமுடைய மலர்களைக் கலந்து மணங்கமழும் தன்மையினால்,
செயற்கை மணமுடையதே என்று கூறினான்.
பரவிநீ வழிபட் டேத்தும் பரஞ்சுடர் திருக்கா ளத்தி
அரவுநீர்ச் சடையார் பாகத் தமர்ந்தஞா னப்பூங் கோதை
இரவினீர்ங் குழலு மற்றோ வெனவஃது மற்றேயென்னா
வெருவிலான் சலமே முற்றச் சாதித்தான் விளைவு நோக்கான்.
நீ துதித்து வழிபட்டு வணங்கும், பரஞ்சோதியாகிய, திருக்காளத்தியிற் கோயில் கொண்டருளிய பாம்பையும் கங்கையையும் அணிந்த சடையையுடைய இறைவரது, பாகத்து அமர்ந்த இடப்பாகத்தில் எழுந்தருளிய ஞானப் பூங்கோதையின்,
இருளை யொத்த தண்ணிய கூந்தலும் அத்தன்மைத்தோவென்று வினவ, அக்கூந்தலும் அத்தன்மையை உடையதே என்று, சிறிதும் அஞ்சாது, மேல் வருவதை அறியாமல் தம் கருத்தையே சாதித்தான்.
கற்றைவார் சடையா னெற்றிக் கண்ணினைச் சிறிதே காட்டப்
பற்றுவா னின்னு மஞ்சா னும்பரார் பதிபோ லாகம்
முற்றுநீர் கண்ணா னாலு மொழிந்ததும் பாடல் குற்றங்
குற்றமே யென்றான் றன்பா லாகிய குற்றந் தேரான்.
திரண்ட நீண்ட சடையை உடைய இறைவன், நெற்றிக்கண்னைச் சிறிது திறந்து காட்ட, அதனாற் பற்றப்படுவானாகியும், இன்னும் அஞ்சாதவனாய், கூறிய உமது செய்யுள் குற்ற முடையதே என்று கூறினன்; தன்னிடத்துள்ள குற்றத்தை அறியாத கீரன்.
தேய்ந்த நாண்மதிக் கண்ணியா னுதல்விழிச் செந்தீப்
பாய்ந்த வெம்மையிற் பொறாதுபொற் பங்கயத் தடத்துள்
ஆய்ந்த நாவலன் போய்விழுந் தாழ்ந்தன னவனைக்
காய்ந்த நாவல னிம்மெனத் திருவுருக் கரந்தான்.
குறைந்த பிறைமதியாகிய கண்ணியை உடைய இறைவனது, நெற்றிக் கண்ணின் செந்தழல் பற்றிய வெப்பத்தால், பொறுக்கலாற்றாது, நூல்களை ஆராய்ந்தறிந்த நாவல்லோனாகிய நக்கீரன் சென்று பொற்றாமரைக் குளத்தில் சென்று விழுந்து அழுந்தினன்; அவனைச் சினந்து ஒறுத்த புலவனாகிய சோமசுந்தரக் கடவுள், விரைந்து தனது திருவுருவை
மறைத்தருளினான்.
இருணி றைந்த மிடற்றடி கேளினி யிப்பிழை
கருணை செய்து பொறுத்தரு ளென்று கபிலனும்
பரண னும்முத லாகிய பாவலர் யாவருஞ்
சரண மென்று விழுந்திரந் தாரடி சாரவே.
இருள் நிரம்பிய திருமிடற்றினை உடைய பெரியோய், இனி அருள் புரிந்து, இக்குற்றத்தைப் பொறுக்கக் கடவை என்று, கபிலனும் பரணனு முதலான புலவர் அனைவரும், அடைக்கலமென்று திருவடியிற் பொருந்த வீழ்ந்து, குறை யிரந்து வேண்டினர்.
அனற்கணா னோக்கி னான்பின் னருட்கணா னோக்க வாழ்ந்த
புனற்கணே கிடந்த கீரன் பொறிபுலன் கரணமெல்லாங்
கனற்கணார் தமவே யாகக் கருணைமா கடலி லாழ்ந்து
வினைக்கணே யெடுத்த யாக்கை வேறிலன் புருவமானான்.
முன் அழற் கண்ணால் நோக்கிய இறைவன், பின் அருள் விழியால் நோக்கி அருள, ஆழமாகிய நீரின் கண்ணே கிடந்த நக்கீரன், பொறியும் புலனும் கரணமுமாகிய அனைத்தும், நெற்றிக்கண்ணினை உடைய அவ் இறைவருடையவேயாக, அருளென்னும் பெரிய கடலில் அழுந்தி, வினையினா லெடுத்த உடல், அழிதலில்லாத அன்பு வடிவமானான்.
கைதந்து கரையே றிட்ட கருணையங் கடலைத் தாழ்ந்து
மைதந்த கயற்க ணாளை வந்தித்துத் தீங்கு நன்கு
செய்தந்தோர்க் கிகலு மன்புஞ் செய்தமை பொருளாச் செய்யுட்
பெய்தந்து பாடு கின்றான் பிரானருள் நாடு கின்றான்.
கை கொடுத்துக் கரையேற்றிய அழகிய கருணைக்கடலாகிய சோமசுந்தரக் கடவுளை வணங்கி, மையெழுதிய கயல்போலுங் கண்களையுடைய அங்கயற்கண்ணம்மையையும் வணங்கி, தீமையும் நன்மையும் புரிந்தவர்க்கு, சினத்தையும் அருளையும் செய்தமையே செய்யுளிலமைத்து இறைவன் திருவருளை நாடும் நக்கீரன், பாடுவானாயினன்.
கற்ற கீரனுங் கலைஞருங் கழகமண் டபத்தில்
உற்ற வாடகக் கிழியறுத் தந்தணற் குதவிக்
கொற்ற வேந்தனும் வரிசைகள் சிலசெயக் கொடுப்பித்
தற்ற நீங்கிய கல்வியின் செல்வரா யமர்ந்தார்.
பல கலைகளையுங் கற்ற நக்கீரனும் புலவர்களும், சங்க மண்டபத்தின் முன்தூக்கிய, பொன் முடிப்பை அறுத்துத் தருமி என்னும் மறையவனுக்குக் கொடுத்து, வெற்றி வேந்தனாகிய சண்பகமாறனும் சில வரிசைகள் செய்யுமாறு கொடுப்பித்து, குற்றம் நீங்கிய கல்விச் செல்வராக இருந்தனர்.

ஆ) பெரியபுராணம்
சைவ சமயத்தைச் சேர்ந்த 63 அடியவர்களான நாயன்மார்களின் புனித வரலாற்றைத் தொகுத்துக்கூறுகிறது இந்நூல். இதனை இயற்றியவர் குன்றத்தூர் சேக்கிழார் ஆவார். இது சைவ சமயத் தோத்திர இலக்கியமான பன்னிரு திருமுறைகளுள் பனிரெண்டாவதாக வைகப்பெற்ற பெருமைக்குரியது. 2 காண்டங்களையும் 13 சருக்கங்களையும் 4286 விருத்தப்பாக்களையும் கொண்டுள்ளது. தமிழ் மரபுக்கு ஏற்ற காப்பியமாக இதனைப் படைக்க விரும்பிய சேக்கிழார் அதற்கிணங்க காப்பியத் தலைவராக சுந்தரமூர்த்தி நாயனாரை அமைத்துகொண்டார். சுந்தரர் வரலாற்றுடன் தொடங்கிப் பின் அவரால் திருட்தொண்டர் தொகையினுள் பாடப்பட்ட நாயன்மார்களின் திறம் பாடி இறுதியில் சுந்தரர் வரலாற்றுடனே முடிக்கிறார் சேக்கிழார்.
சிறப்புகள்: பக்தி நெரியில் சாதி, மத வேறுபாடுகளுக்கு இடம் இல்லை என்றும், நாயன்மார்களின் வரலாறுகளின் வழி வாழ்வியல் அறங்களை எடுத்துரைப்பதிலும், சைவ சமயக் கருத்துக்களை இனிதுணரும் வகையில் எடுத்தோதிய தன்மையிலும் இந்நூல் சிறப்புற்றிருக்கிறது. காவியச் சுவை, இயற்கை எழில், உவமை அழகு, சொல் நயம், பொருள் வளம், அணி நலம், ஆற்றொழுக்கான நடை போன்றவை அமையப் பெற்ற அரிய பௌவல் இது.
5. திரு நின்ற சருக்கம்
5. 4. காரைக்கால் அம்மையார் புராணம்
மானம் மிகு தருமத்தின் வழி நின்று வாய்மையினில்
ஊனம் இல் சீர்ப் பெரு வணிகர் குடி துவன்றி ஓங்கு பதி
கூனல் வளை திரை சுமந்து கொண்டு ஏறி மண்டு கழிக்
கானல் மிசை உலவு வளம் பெருகு திருக் காரைக்கால்.
வளைவுகளை உடைய சங்குகளைக் கடல் அலைகள் சுமந்து எடுத்துக்கொண்டு மேல் ஏறி அடுத்து நிறைந்த கழிக்கானல்களில் உலவுகின்ற, வளம் பெருக உள்ள திருக்காரைக்கால் என்ற ஊர்; மானம் மிகும் தருமநெறியில் ஒழுகிவாய்மையினின்றும் குறைவுபடாத சிறப்புடைய; பெரு வணிகர்களின் குடிகள் நெருங்கிவிளங்கும் பதியாகும்.
வங்கம் மலி கடல் காரைக்காலின் கண் வாழ் வணிகர்
தங்கள் குலத் தலைவனார் தனதத்தனார் தவத்தால்
அங்கு அவர் பால் திரு மடந்தை அவதரித்தாள் என வந்து
பொங்கிய பேர் அழகு மிகப் புனிதவதியார் பிறந்தார்.
கலங்கள் மலிந்த கடற்கரையில் உள்ள காரைக்கால் நகரில் வாழும் வணிகர்குலத் தலைவராகிய தனதத்தனாரது தவத்தினாலே; அவ்விடத்தில் அவரிடத்தில் திருமடந்தை அவதரித்தனள் என்னும்படி; பொங்கிய பேரழகு மிகும்படி புனிதவதியார்வந்து பிறந்தருளினார்.
நல்ல என உறுப்பு நூலவர் உரைக்கும் நலம் நிரம்பி
மல்கு பெரு வனப்பு மீக் கூர வரு மாட்சியினால்
இல் இகவாப் பருவத்தில் இவர்கள் மரபினுக்கு ஏற்கும்
தொல் குலத்து வணிகர் மகள் பேசுதற்குத் தொடங்குவார்.
உடற்கூற்று நூல் வல்லவர்கள்; இவையிவை நல்லன என்று எடுத்துக் கூறும் நலங்கள் எல்லாம் நிரம்பப் பெற்று; பொருந்திய பேரழகு மேன்மேல் மிகப் பெருக வருகின்ற மாண்பினாலே; வீட்டினின்றும் வெளியே செல்லலாகாத பருவம் வர; இவர்களது மரபுக்குப் பொருந்தும் பழங்குடியில் வந்த வணிகர்கள் பெண்பேசத் தொடங்குவாராகுவர்
அளி மிடை தார்த் தன தத்தன் அணி மாடத்து உள் புகுந்து
தெளிதரு நூல் விதி வழியே செயல் முறைமை செய்து அமைத்துத்
தளிர் அடி மென் நகை மயிலைத் தாது அவிழ் தார்க் காளைக்குக்
களி மகிழ் சுற்றம் போற்றக் கல்யாணம் செய்தார்கள்.
(அவ்வாறு பதி புகுந்தவர்கள்) வண்டுகள் மொய்க்கும் மாலையை அணிந்த தனதத்தனது அழகு பொருந்திய மாடத்தினுள்ளே சேர்ந்து; தெளிவினைத் தரும் நூல்களின் விதித்த படியே மணத்தின்முன் செய்யத்தக்க சமாவர்த்தனம் முதலிய சடங்குகளை எல்லாம் செய்து முடித்து; தளிர்போன்ற திருவடிகளையும் மென்மை பொருந்திய நகையினையும் மயில்போன்ற சாயலினையும் உடைய புனிதவதி அம்மையாரை மாலையணிந்த காளை போன்ற பரமதத்தனுக்குச் சுற்றத்தார் போற்றும்படி கலியாணம் செய்வித்தார்கள்.
ஆங்கு அவன் தன் இல் வாழ்க்கை அருந்துணையாய் அமர்கின்ற
பூம் குழலார் அவர் தாமும் பொரு விடையார் திருவடிக் கீழ்
ஓங்கிய அன்பு உறு காதல் ஒழிவு இன்றி மிகப் பெருகப்
பாங்கில் வரும் மனை அறத்தின் பண்பு வழாமையில் பயில்வார்.
அந்த மனையகத்தில் அவனுடைய அருமை பெற்ற இல்வாழ்க்கைத் துணைவியாய் அமர்கின்ற பூங்குழலாராகிய புனிதவதியம்மையாரும்; பொரு விடையினையுடைய சிவபெருமானது திருவடிகளின்கீழ் மிகுந்த அன்பு பொருந்திய காதல் இடையறாமல் மேன்மேலும் பெருகும்படி; ஒழுங்கில் வரும் இல்லறத்தின் பண்பு பிறழாமற் பயின்று வருவாராகினார்
நம்பர் அடியார் அணைந்தால் நல்ல திரு அமுது அளித்தும்
செம் பொன்னும் நவ மணியும் செழும் துகிலும் முதல் ஆன
தம் பரிவினால் அவர்க்குத் தகுதியின் வேண்டுவ கொடுத்தும்
உம்பர் பிரான் திருவடிக் கீழ் உணர்வு மிக ஒழுகும் நாள்.
சிவனடியார்கள் வந்தார்களாகில்; நல்ல திருவமுதினை அளித்தும்; செம்பொன்னும், நவமணிகளும், செழுமையாகிய துகில்களும் என்ற இவை முதலாயினவற்றைக் கொடுத்தும்; தேவதேவராகிய சிவபெருமான் திருவடியின்கீழ் வைத்த உணர்வு மேன்மேற் பெருகும்படி ஒழுகி வருகின்ற நாளிலே;
பாங்கு உடைய நெறியின் கண் பயில் பரம தத்தனுக்கு
மாங் கனிகள் ஓர் இரண்டு வந்து அணைந்தார் சிலர் கொடுப்ப
ஆங்கு அவை தான் முன் வாங்கி அவர் வேண்டும் குறை அளித்தே
ஈங்கு இவற்றை இல்லத்துக்கு கொடுக்க என இயம்பினான்.
தன் அளவில் கொண்ட ஒழுக்க நெயியில் பயில்கின்ற பரமதத்தனிடம் வந்தணைந்த சிலர்அவனுக்கு இரண்டு மாங்கனிகள் கொடுக்க, அவ்விடத்தில் அவற்றை வாங்கிக்கொண்டு, அவர்கள் வேண்டி வந்த காரியங்களை முடித்துக் கொடுத்தே, "இங்கு இக்கனிகளை வீட்டில் கொண்டுபோய்க் கொடுக்க" என்று சொன்னான்.
கணவன் தான் வர விடுத்த கனி இரண்டும் கைக் கொண்டு
மணம் மலியும் மலர்க் கூந்தல் மாதனார் வைத்து அதன்பின்
பண அரவம் புனைந்து அருளும் பரமனார் திருத் தொண்டர்
உணவின் மிகு வேட்கை யினால் ஒருவர் மனையுள் புகுந்தார்.
கணவன் அனுப்பிய இரண்டு கனிகளையும் கையில் பெற்றுக்கொண்டு மணம் பொருந்திய மலர்க்கூந்தலினை உடைய அம்மையார் இல்லத்தில் வைத்ததன் பின்பு; படத்தினை உடைய பாம்புகளை அணிந்தருளும் சிவபெருமான் திருத்தொண்டர் உணவில் மிக்க விருப்புடயரான ஒருவர் வீட்டினுள்ளே வந்தார்.
வேதங்கள் மொழிந்த பிரான் மெய்த் தொண்டர் நிலை கண்டு
நாதன் தன் அடியாரைப் பசி தீர்ப்பேன் என நண்ணிப்
பாதங்கள் விளக்க நீர் முன் அளித்துப் பரிகலம் வைத்து
ஏதம் தீர் நல் விருந்தா இன் அடிசில் ஊட்டுவார்.
வேதங்களைச் சொல்லியருளிய பெருமானுடைய மெய்த்தொண்டரது மிகப் பசித்த நிலையினைக் கண்டு, "சிவனடியாரை விரைவாகப் பசி தீர்த்து அமுதளிப்பேன்" என்று சென்று முன்னர்ப் பாதம் விளக்கும் பொருட்டு நீர் அளித்துப் பரிகலம் திருத்தியிட்டுக் குற்றந்தீர்க்கும் நல்ல விருந்தாகக் கொண்டு இனிய உணவினை கொடுப்பாராகினார் புனிதவதியார்.
இல் ஆளன் வைக்க எனத்தம் பக்கல் முன் இருந்த
நல்ல நறு மாங்கனிகள் இரண்டினில் ஒன்றைக் கொண்டு
வல் விரைந்து வந்து அணைந்து படைத்து மனம் மகிழ்ச்சியினால்
அல்லல் தீர்ப்பவர் அடியார் தமை அமுது செய்வித்தார்.
தம் கணவன் ‘இவற்றை வைக்க’ என்று அனுப்பிவைத்த நல்ல இனிய பழங்கள் இரண்டில் ஒன்றைக் கொண்டு, மிகவும் விரைந்து வந்து சேர்ந்து, இலையில் பரிமாறி, உள்ள மகிழ்ச்சியுடனும் துன்பம் துடைக்கும் இறைவரின் அடியாரை உணவு உண்ணச் செய்தார்.
மற்று அவர் தாம் போயின பின் மனைப் பதியாகிய வணிகன்
உற்ற பெரும் பகலின் கண் ஓங்கிய பேர் இல் எய்திப்
பொற்பு உற முன் நீர் ஆடிப் புகுந்து அடிசில் புரிந்து அயிலக்
கற்புடைய மடவாரும் கடப் பாட்டில் ஊட்டுவார்.
மற்று அத்தொண்டர் போன பின்; மனையின் உடையவானகிய பரமதத்தன் நண்பகலில் மிகப் பெரியதாகிய அவ்வீட்டில் வந்து சேர்ந்து முன் அழகு பொருந்தக் குளித்து வந்து உணவினை விரும்பி உண்ண; கற்புடைய மனைவியாராகிய அம்மையாரும் தமது மனைக் கடமை முறைப்படி கணவனுக்கு உணவு பரிமாறினார்.
இன் அடிசில் கறிகள் உடன் எய்தும் முறை இட்டு அதன்பின்
மன்னிய சீர்க் கணவன் தான் மனை இடை முன் வைப்பித்த
நல் மதுர மாங்கனியில் இருந்த அதனை நறுங்கூந்தல்
அன்னம் அனையார் தாமும் கொடு வந்து கலந்து அளித்தார்.
இனிய திருவமுதினைக் கறி வகைகளுடன் பொருந்தும் முறையில் வைத்ததன் பின்பு; பொருந்திய சிறப்புடைய கணவன்தான் முன்பு வீட்டிற்கு அனுப்பி வைப்பித்தபடி உள்ள நல்ல சுவை பொருந்திய மாங்கனிகளில் எஞ்சி நின்ற ஒன்றை; நறுமணம் பொருந்திய கூந்தலினையுடைய அம்மையாரும் கொண்டுவந்து கணவனுக்கு அளித்தனர்.
மனைவியார் தாம் படைத்த மதுரம் மிக வாய்த்த கனி
தனை நுகர்ந்த இனிய சுவை ஆராமைத் தார் வணிகன்
இனையது ஒரு பழம் இன்னும் உளது அதனை இடுக என
அனையது தாம் கொண்டு வர அணைவார் போல் அங்கு அகன்றார்.
மனைவியார்தாம் கொடுவந்து கலத்தில் அளித்த மிக்க மதுரம் வாய்ந்த அந்த மாங்கனியினை உண்டதன் சுவையினால் ஆசை நிரம்பப் பெறாமையால்; மாலை அணிந்த வணிகனாகிய பரமதத்தன்; இதனைப்போன்ற பழம் இன்னொன்று உள்ளதே; அதனையும் இடுக என்று சொல்ல; அதனைத் தாம் கொண்டுவரச் செல்வார்போல அங்கு நின்றும் நீங்கினார்
அம் மருங்கு நின்று அயர்வார் அரும் கனிக்கு அங்கு என்செய்வார்
மெய்ம் மறந்து நினைந்து உற்ற இடத்து உதவும் விடையவர் தாள்
தம் மனம் கொண்டு உணர்தலுமே அவர் அருளால் தாழ் குழலார்
கைம் மருங்கு வந்து இருந்த அதிமதுரக் கனி ஒன்று.
அந்தப் பக்கத்தில் நின்று மனந்தளர்ந்த புனிதவதியார்; பின்னை அரிய கனியைப் பெறுவதற்கு என்ன செய்வார்?; தம்மையும் மறந்து நினைந்து, அல்லல் உற்ற விடத்தில் வந்து உதவியருளும் விடையவராகிய சிவபெருமான் திருவடிகளைத் தமது மனத்தில் முற்றும் உறவைத்து உணர்வினிற் பொருந்தவைத்தவுடனே; அவரது திருவருளினாலே; தாழும் கூந்தலினையுடைய அம்மையாரது திருக்கையினிடத்து அதிமதுரக் கனி ஒன்று வந்து பொருந்தியிருந்தது.
மற்று அதனைக் கொடு வந்து மகிழ்ந்து இடலும் அயின்று அதனில்
உற்ற சுவை அமுதினும் மேற் பட உளதாயிட இது தான்
முன் தரு மாங் கனி அன்று மூ உலகில் பெறற்கு அரிதால்
பெற்றது வேறு எங்கு என்று பெய் வளையார் தமைக் கேட்டான்.
அவ்வாறு வந்திருந்த அக்கனியைக் கொண்டு வந்து மகிழ்ச்சியுடன் புனிதவதியார் தம் கணவனிடம் கொடுத்ததும்; அதனை உண்டு; அக்கனியில் பொருந்திய சுவையானது அமுதத்தினும் மேலாக உள்ளதாகவே; இது முன்பு தந்த மாங்கனி அன்று; மூவுலகிலும் பெறுதற்கரிதாகும்; இதனை எங்கிருந்து பெற்றாய்?" என்று (வணிகன்) அம்மையாரைக் கேட்டனன்.
ஈசன் அருள் எனக் கேட்ட இல் இறைவன் அது தெளியான்
வாச மலர்த் திரு அனையார் தமை நோக்கி மற்று இது தான்
தேசு உடைய சடைப் பெருமான் திரு வருளேல் இன்னமும் ஓர்
ஆசு இல் கனி அவன் அருளால் அழைத்து அளிப்பாய் என மொழிந்தான்.
"ஈசன் அருளாலே இக்கனியை பெற்றேன்" என்று அம்மையார்சொல்லக் கேட்ட இல்லத்துக்கு உடையவனாகிய வணிகன்; அதன் உண்மையில் மனத்தெளிவு பெறாதவனாகி; மணம் பொருந்திய மலரில் எழுந்தருளிய திருவினை ஒத்த அம்மையாரைநோக்கி; மற்று இந்தக் கனி ஒளிபொருந்திய சடையினையுடைய சிவபெருமானது திருவருளால் பெறப்பட்டது என்பது உண்மையாயின் இன்னமும் ஒரு குற்றமற்ற இது போன்ற கனி ஒன்றினை அவர்அருளால் பெற்று அளிப்பாயாக!" என்று சொன்னான்.
பாங்கு அகன்று மனைவியார் பணி அணிவார் தமைப் பரவி
ஈங்கு இது அளித்த அருளீரேல் என் உரை பொய் ஆம் என்ன
மாங்கனி ஒன்று அருளால் வந்து எய்துதலும் மற்று அதனை
ஆங்கு அவன் கைக் கொடுதலுமே அதிசயித்து வாங்கினான்.
அங்கு நின்றும் அம்மையார் நீங்கிச் சென்று, பாம்புகளை அணியும் பெருமானைத் துதித்து, "இப்போதுஇன்னொரு கனியை அளித்தருள் செய்யவில்லை என்றால் என்சொல் பொய்யாகும்" என்று வேண்ட; ஒரு மாம்பழம் திருவருளால் அவரது கையில் வந்து அமைந்தது. அக்கனியை அவ்விடத்தில் அவ்வணிகன் கையில் கொடுத்தார் புனிதவதியார் அவன் அதிசயப்பட்டு அதனை வாங்கினான்.
வணிகனும் தன் கைப் புக்க மாங்கனி பின்னைக் காணான்
தணிவுஅரும் பயம் மேல்கொள்ள உள்ளமும் தடுமாறு எய்தி
அணி குழல் அவரை வேறு ஓர் அணங்கு எனக் கருதி நீங்கும்
துணிவு கொண்டு எவர்க்கும் சொல்லான் தொடர்வின்றி ஒழுகு நாளில்.
கனியினை வாங்கிய் வணிகனும் தனது கையில் பெற்ற மாங்கனியினைப் பின்பு காணாதவ னாயினான்; தணியாத பயம் மேற்கொள்ளவே மனம் தடுமாறி; அழகிய கூந்தலுடைய அம்மையாரை மானுடரல்லாத வேறு ஒரு தெய்வம் என்று எண்ணி; அவரை விட்டு நீங்கிவிட வேண்டும் என்ற துணிவு கொண்டு; இதனை எவரிடமும் சொல்லாதவனாய் அம்மையாரிடம் தொடர்பு இல்லாமல் சென்றுவிட்டான்.
அப் பதி தன்னில் ஏறி அலகில் பல் பொருள்கள் ஆக்கும்
ஒப்பு இல் மா நிதியம் எல்லாம் ஒருவழிப் பெருக உய்த்து
மெய்ப் புகழ் விளங்கும் அவ்வூர் விரும்ப ஓர் வணிகன் பெற்ற
செப்ப அரும் கன்னி தன்னைத் திருமலி வதுவை செய்தான்.
அந்த நகரத்தில் ஏறிச்சென்று தான் கொணர்ந்த அளவில்லாத பலவகைப் பொருள்களால் ஆக்கிய ஒப்பற்ற பெருநிதியங்களை எல்லாம் ஒரு வழியாகச் சேர்ந்து மேன்மேலும் சேமஞ்செய்து, மெய்ப்புகழ் விளங்கும் அந்த ஊரார் விரும்பும்படி ஒரு வணிகன் பெற்ற அழகிய கன்னியைச் செல்வம் பெருகக் கலியாணம் செய்தான்.
முருகு அலர் சோலை மூதூர் அதன் முதல் வணிகரோடும்
இரு நிதிக் கிழவன் என்ன எய்திய திருவின் மிக்குப்
பொரு கடல் கலங்கள் போக்கும் புகழினான் மனைவி தன்பால்
பெருகு ஒளி விளக்குப் போல் ஓர் பெண்கொடி அரிதின் பெற்றான்.
வாசம் வீசுகின்ற சோலைகளையுடைய பழமையாகிய அவ்வூரில் முதன்மை தங்கிய பெரு வணிகர்களுடன் கூடிக், குபேரன்போலப் பொருந்திய செல்வத்தால் மிகுந்த அலைகள் பொரும் கடலில் கப்பல்களைச் செலுத்தி வாணிபம் செய்யும் புகழ்படைத்த அவ்வணிகன் தன் மனைவியிடமாக ஒளி பெருகும் விளக்குப்போல ஒரு பெண் மகவை அருமையாகப் பெற்றனன்.
மட மகள் தன்னைப் பெற்று மங்கலம் பேணித் தான் முன்பு
உடன் உறைவு அஞ்சி நீத்த ஒரு பெரு மனைவி யாரைத்
தொடர்வு அற நினைந்து தெய்வத் தொழு குலம் என்றே கொண்டு
கடன் அமைத்து அவர் தம் நாமம் காதல் செய் மகவை இட்டான்.
மடமகள்...பேணி - பெண் மகவைப் பெற்று அதற்குப் பேரிடும் மங்கலச்சடங்கு செய்ய எண்ணி; தான் முன்பு...கொண்டு - தான் முன்பு உடன் வாழ்தலை அஞ்சி நீத்துவிட்டு வந்த ஒப்பற்ற பெருமனைவியாரை இல்லறத் தொடர்பு அற நினைந்து தெய்வத்தன்மை வாய்ந்த தொழுதற்குரிய பொருளாவர் என்றே துணிவு கொண்டு; கடன் அமைத்து - உரிய சடங்குகளைச் செய்து; அவர்...இட்டான். அவரது "புனிதவதியார்" என்ற பெயரைத் தன்னால் விரும்பப்பட்ட மகவுக்குச் சூட்டினான்.
சில பகல் கடந்து சென்று செந்தமிழ்த் திருநாடு எய்தி
மலர் புகழ்ப் பரம தத்தன் மா நகர் மருங்கு வந்து
குல முதல் மனைவியாரைக் கொண்டு வந்து அணைந்த தன்மை
தொலைவு இல் சீர்க் கணவனார்க்குச் சொல்லி முன் செல்ல விட்டார்.
சில நாட்கள் கடந்து போய்ச், செந்தமிழ் நாடாகிய பாண்டி நாட்டிற் சேர்ந்து, மலர் புகழினையுடைய பரமதத்தனிருந்த பட்டினத்தின் பக்கம் வந்து, குலமுதல் மனைவியாரைக் கொண்டுவந்து தாம் அணைந்துள்ள செய்திகளையெல்லாந் தொலைவில்லாத சீர்க் கணவனறியும்படி முன்னே சொல்லியனுப்பினர்.
தானும் அம் மனைவி யோடும் தளர் நடை மகவி னோடும்
மான் இளம் பிணை போல் நின்ற மனைவியார் அடியில் தாழ்ந்தே
யான் உமது அருளால் வாழ்வேன் இவ் இளம் குழவி தானும்
பான்மையால் உமது நாமம் என்று முன் பணிந்து வீழ்ந்தான்.
வணிகன் தானும் அந்த மனைவியோடும் தளர்நடைப் பருவத்தில் உள்ள பெண் மகவினோடும் மானின் இளம் பிணைபோல் நின்றமனைவியாருடைய அடிகளில் வணங்கி ‘நான் உமது அருளினால் வாழ்வேன்; இந்த இளங்குழவிக்கும் அப்பான்மைபற்றி உமது திருநாமத்தையே சூட்டி யிருக்கின்றேன்" என்று சொல்லி அவர் முன்பு பணிந்து நிலமுற வீழ்ந்தனன்.
மற்று அவர் தம்மை நோக்கி மானுடம் இவர் தாம் அல்லர்
நற் பெருந்தெய்வம் ஆதல் நான் அறிந்து அகன்ற பின்பு
பெற்ற இம் மகவு தன்னைப் பேர் இட்டேன் ஆதலாலே
பொன் பதம் பணிந்தேன் நீரும் போற்றுதல் செய்மின் என்றான்.
(வணிகன்) மற்றும் அவ்வாறு வினவிய சுற்றத்தாரைப் பார்த்து, "இவர் தாம் மானுடப் பிறவியல்லர்; நற்பெருந் தெய்வமேயாவர்; அவ்வாறு தெய்வமாதலை நான் அறிந்து அவரை நீங்கி வந்த பின்பு பெற்ற இம்மகவுக்கு அவர் பெயரை இட்டேன்; ஆதலாலே அவருடைய பொற்பாதங்களை வணங்கினேன்; அதுபோலவே நீவிரும் போற்றுங்கள்" என்று சொன்னான்.
ஈங்கிவன் குறித்த கொள்கை இது இனி இவனுக்காகத்
தாங்கிய வனப்புநின்ற தசைப்பொதி கழித்து இங்கு உன்பால்
ஆங்குநின் தாள்கள் போற்றும் பேய்வடிவு அடியேனுக்குப்
பாங்குற வேண்டும் என்று பரமர்தாள் பரவி நின்றார். 
இங்கு இவ்வணிகன் உட்கொண்டு குறி வைத்த கொள்கை யிதுவாகும்; இனிமேல்; இவன் பொருட்டுத் தாங்கிக்கொண்டு நின்ற அழகு நிற்றற்கு இடமாகிய தசை பொதிந்த சுமையினை இங்குக் கழித்துவிட்டு; உன்னிடம் அவ்வுலகத்தில் நின்பாதங்களைப் போற்றுகின்ற பேய்வடிவத்தை அடியேனுக்கு நற்பாங்கு பொருந்த அருளவேண்டும்; என்று வேண்டிப் பரமருடைய திருவடிகளைத் துதித்து நின்றனர
ஆன அப்பொழுது மன்றுள் ஆடுவார் அருளினாலே
மேல் நெறி உணர்வு கூர வேண்டிற்றே பெறுவார் மெய்யில்
ஊன் அடை வனப்பை எல்லாம் உதறி என்பு உடம்பே ஆக
வானமும் மண்ணும் எல்லாம் வணங்கும் பேய் வடிவம் ஆனார்.
இவ்வாறு பரவி நின்றாராயின அப்பொழுது, அம்பலத்தில் அருநட்டம் ஆடுகின்ற இறைவரது திருவருளினாலே, மேலாகிய நெறிதரும் உணர்வு மிகுதலாலே; தாம் வேண்டிய அதனையே பெறுவாராகி; உடம்பில் தசையும் அதனை இடமாகக்கொண்டு அடைந்த அழகுகளும் ஆகிய இவை எல்லாவற்றையும் உதறி, எலும்புக்கூடாகிய
உற் பவித்து எழுந்த ஞானத்து ஒருமையின் உமை கோன் தன்னை
அற் புதத் திரு அந்தாதி அப்பொழுது அருளிச் செய்வார்
பொற்புடைச் செய்ய பாத புண்ட ரீகங்கள் போற்றும்
நற் கணத்தினில் ஒன்று ஆனேன் நான் என்று நயந்து பாடி.
உள்ளே தோன்றி மேல் எழுந்த ஒருப்பட்ட ஞானத்தினாலே; உமைபங்கராகிய சிவபெருமானைத் துதித்து அற்புதத் திருவந்தாதியினை அப்பொழுதே அருளிச் செய்வாராகி; அழகியசிவந்த பாததாமரைகளைப் போற்றுகின்ற நல்ல சிவபூத கணங்களுள் நானும் ஒன்றாயினேன்" என்று விரும்பிப் பாடி,
ஆய்ந்த சீர் இரட்டை மாலை அந்தாதி எடுத்துப் பாடி
ஏய்ந்த பேர் உணர்வு பொங்க எயில் ஒரு மூன்றும் முன்நாள்
காய்ந்தவர் இருந்த வெள்ளிக் கைலை மால் வரையை நண்ண
வாய்ந்த பேர் அருள் முன் கூர வழி படும் வழியால் வந்தார்.
 (அதன்மேல்) ஆய்ந்த சீருடைய இரட்டை மணிமாலையினையும் அந்தாதித் தொடையாக எடுத்துப் பாடிப், (பின்னர்); பொருந்திய பேருணர்வு மேன்மேலும் பொங்கி எழுதலால்; மதில்களையுடைய மூன்று புரங்களையும் முன்னாளில் எரித்தவராகிய சிவபெருமான் எழுந்தருளியிருந்த பெரிய கயிலாய மலையினைச் சென்றடையும் பொருட்டு வாய்ந்த பேரருள் முன்னே கூடுதலால்; வழிபடுகின்ற வழிக்கொண்டு வந்தனர்.

தலையினால் நடந்து சென்று சங்கரன் இருந்த வெள்ளி
மலையின் மேல் ஏறும் போது மகிழ்ச்சியால் அன்பு பொங்கக்
கலை இளம் திங்கள் கண்ணிக் கண் நுதல் ஒரு பாகத்துச்
சிலை நுதல் இமய வல்லி திருக் கண் நோக்கு உற்றது அன்றே.
தலையினால் நடந்துபோய்ச் சங்கரன் எழுந்தருளியிருந்த வெள்ளிமலையாகிய கயிலைமலையின் மேலே ஏறும்போது; மகிழ்ச்சிமீக்கூர்தலினால் அன்பு மேன்மேல் அதிகரிக்க; ஒரு கலையுடன் நின்ற இளமை பொருந்திய பிறைச் சந்திரனாகிய கண்ணியை அணிந்த கண்ணுதலின் ஒரு பாகத்தில் அமர்ந்த வில்லைப்போன்ற நெற்றியினை உடைய பார்வதியம்மையாரது திருக்கண் பார்வையப்போதே பொருந்தியது.
வரும் இவள் நம்மைப் பேணும் அம்மை காண் உமையே மற்று இப்
பெருமை சேர் வடிவம் வேண்டிப் பெற்றனள் என்று பின்றை
அருகு வந்து அணைய நோக்கி அம்மையே என்னும் செம்மை
ஒரு மொழி உலகம் எல்லாம் உய்யவே அருளிச் செய்தார்.
"உமையே! (நீ சொல்லிய அவ்வாறு) வரும் இவள் நம்மைப் பேணுகின்ற அம்மையே யாவள்; மற்றும், இந்தப் பேய்வடிவாகிய பெருமைசேர் வடிவத்தையும் நம்மிடம் வேண்டிப் பெற்றுக்கொண்டனள்" என்று சொல்லியதுடன், பின்பு அம்மையார் பக்கத்தில் வந்து அணையவே, அவரை நோக்கி "நம் அம்மையே!" என்கின்ற செம்மைதரும் ஒப்பற்ற ஒருமொழியினை உலகமெல்லாம் உய்யும்பொருட்டே அருளிச் செய்தார்.
அங்கணன் அம்மையே என்று அருள் செய அப்பா என்று
பங்கயச் செம் பொன் பாதம் பணிந்து வீழ்ந்து எழுந்தார் தம்மைச்
சங்க வெண் குழையினாரும் தாம் எதிர் நோக்கி நம்பால்
இங்கு வேண்டுவது என் என்ன இறைஞ்சி நின்று இயம்பு கின்றார்.
இறைவர் "அம்மையே!" என்று அருளிச் செய்ய; "அப்பா!" என்று ஆர்வம்படச் சொல்லிக்கொண்டு தாமரைபோன்ற அழகிய பொன்போன்ற பதங்களில் பணிந்து வீழ்ந்து எழுந்து நின்ற அவரை; சங்கினாலாகிய வெள்ளிய குழையை அணிந்த சிவபெருமானும் எதிர்நோக்கி; இங்கு நம்மிடம் நீ வேண்டும் வரம் என்னை? " என்று அருள; பணிந்து நின்று சொல்வாராகி,


இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க என்றார்.

என்றும் கெடுதலில்லாத இன்ப அன்பினை வேண்டிக்கொண்டு, பின்னும் வேண்டுவாராய்; "இனிப் பிறவாதிருக்கும் வரம் வேண்டும்; ஆனால் மீண்டும் பிறவி உளதாயின் உன்னை என்றும் மறவாதிருக்கும் வரம் வேண்டும்; அறவா! மேலும் வேண்டுவது தேவரீர் அருட்கூத்து ஆடுகின்றபோது மகிழ்ச்சியுடன் பாடிக்கொண்டு உமது திருவடியின் கீழே இருக்கும் பேறு ஆகும்" என்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக