வெள்ளி, 11 செப்டம்பர், 2015

P 131 காப்பிய இலக்கியம் (கூறு 1)

அ) சிலப்பதிகாரம்
பெயர்க்காரணம்: சிலப்பதிகாரம் என்பது சிலம்பின் காரணமாக எழுந்த கதை எனப்பொருள்படும். சிலம்பு என்பது மகளிர் காலில் அணியும் ஒரு அணிகலன். காப்பியத் தலைவியான கண்ணகியின் சிலம்பு இக்கதையில் முக்கியமான இடத்தினை வகிப்பதால் இதன் ஆசிரியர் இக்காப்பியத்திற்குச் சிலப்பதிகாரம் எனப் பெயரிட்டுள்ளார்.
இயற்றியவர்: இதனை இயற்றியவர் சேர வேந்தன் செங்குட்டுவனின் தம்பியான இளங்கோவடிகள்.
சிறப்புகள்: தமிழில் எழுதப்பட்ட காப்பியங்களில் பழமையானது; தமிழில் தோன்றிய ஐம்பெரும் காப்பியங்களுள் (சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி) முதலாவதாக அமைவது; சோழ நாடு, பாண்டிய நாடு,
சேர நாடு ஆகிய மூன்று நாடுகளிலும் கதை நிகழ்கிறது; மூவேந்தரும் குறிக்கப்பெற்றுள்ளனர்; புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்னும் மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் கொண்டமைந்துள்ளது. இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் இலங்கும் வகையில் அமைந்துள்ளது. ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதும்’,  ‘உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்’ ‘ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் என்பதூஉம்’ என்னும் மூன்று உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு எழுந்துள்ளது.
அந்திமாலைச் சிறப்புச்செய் காதை: புகார்க் காண்டத்தின்கண் அமைந்த பத்து காதைகளுள் நான்காவதாக அமைந்துள்ளது ‘அந்திமாலைச் சிறப்புச்செய் காதை’. திங்கள், ஞாயிறு, புகார் நகரம் ஆகியவற்றை வாழ்த்தித் தொடங்கும் மங்கலவாழ்த்துப் பாடல் என்னும் முதல் காதையில் கோவலன் கண்ணகியின் திருமண நிகழ்வு சொல்லப்பட்டுள்ளது. இரண்டாவதான மனையறம்படுத்த காதையில் புதுமணத்தம்பதியரான கோவலனையும் கன்ணகியையும் அவர்களது பெற்றோர் தனி மனையில் இருக்கச் செய்த செய்தியும் தம்பதியர் இருவரும் இனிதே இல்லறம் நடத்திய செய்தியும் கூறப்பட்டுள்ளது. மூன்றாவதான அரங்கேற்றுக் காதையில் மாதவியின் சிறப்பும் அவளது நாட்டிய அரங்கேற்றம் புகார் நகரில் நிகழ்ந்த சிறப்பும் மாதவிக்குச் சோழ மன்னன், ‘தலைக்கோல்’ பட்டமும் பசும்பொன் மாலையையும் பரிசளித்த செய்தியும் அம்மாலையைக் கோவலன் வாங்கி மாதவியை அடைந்ததும் குற்றமற்ற கண்ணகியை மறந்து, விடுதலறியா விருப்புடன் மாதவியுடனே தங்கிய செய்தியும் சொல்லப்பட்டுள்ளன. அரங்கேற்றக் காதையைத் தொடர்ந்து அமையும் அந்திமாலைச் சிறப்புச் செய் காதையில் மாலைப் பொழுதில் தென்றல் வீச, நிலவொளியில் கணவனைப் பிரியா மகளிர் கூடிக்களித்தனர். கணவனைப் பிரிந்திருந்தோர் துன்பமுற்றிருந்தனர். கோவலனும் மாதவியும் நெடுநிலா முற்றத்திலிருந்து நிலவொளியினையும் தென்றலையும் ரசித்திருந்தனர். மாதவி காற்சிலம்பு ஒலிக்க ஆடினாள், பாடினாள், ஊடினாள் பின்னர்க் கூடினாள் கோவலன் இன்பமுடன் இருந்தான். ஆனால் மறுபுறம் கண்ணகியின் காலில் சிலம்பு இல்லை, நெற்றியில் திலகம் இல்லை, கூந்தலில் எண்ணை இல்லை, முகத்தில் சிரிப்பு இல்லை இவ்வாறு புணர்ந்தோர் இன்புற பிரிந்தோர் துன்புற இரவு கழிந்ததான நிகழ்வுகள் குறிக்கப்பட்டுள்ளன.
புகார்க் காண்டம்
4. அந்திமாலைச் சிறப்புச் செய் காதை
மாலைப் பொழுதின் வரவு
விரி கதிர் பரப்பி, உலகம் முழுது ஆண்ட
ஒரு தனித் திகிரி உரவோன் காணேன்;
அம் கண் வானத்து, அணி நிலா விரிக்கும்
திங்கள் அம் செல்வன் யாண்டு உளன்கொல்?’ என,
திசை முகம் பசந்து, செம் மலர்க் கண்கள்
முழு நீர் வார, முழு மெயும் பனித்து,
திரை நீர் ஆடை இரு நில மடந்தை
அரைசு கெடுத்து, அலம்வரும் அல்லல்காலை
விரிந்த கதிர்களைப் பரப்பி, உலகம் அனைத்தையும் ஆண்ட, ஒப்பற்ற தனிச்சக்கரத்தையுடைய தேரையுடையவனான வலிமை மிக்க என் கணவனை (சூரியனை) காணேன்; அழகிய இடத்தையுடைய வானிலே, அழகிய நிலாக்கதிர்களை விரிக்கும், திங்களாகிய செல்வன் எவ்விடத்துள்ளானோ; என்று, திசையாகிய தன்முகம் பசலை படர, செவ்விய மலராகிய கண்கள் முழுதும் நீர்சிந்த, உடல் முழுதும் நடுங்க, கடலைஆடை யாக உடைய பெரிய நிலமகள். தன் கணவனைக் காணாது நெஞ்சு கலங்குகின்ற அந்தி நேரத்தில்.
கறை கெழு குடிகள் கை தலை வைப்ப,
அறைபோகு குடிகளொடு ஒரு திறம் பற்றி,
வலம்படு தானை மன்னர் இல்வழி,
புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின்,
தாழ் துணை துறந்தோர் தனித் துயர் எய்த;
காதலர்ப் புணர்ந்தோர் களி மகிழ்வு எய்த;
குழல் வளர் முல்லையில் கோவலர் - தம்மொடு
மழலைத் தும்பி வாய் வைத்து ஊத;
அறுகால் குறும்பு எறிந்து, அரும்பு பொதி வாசம்
சிறுகால் செல்வன் மறுகில் தூற்ற;
எல் வளை மகளிர் மணி விளக்கு எடுப்ப,
மல்லல் மூதூர் மாலை வந்து இறுத்தென
தம் அரசர்க்கு வரி செலுத்தும் கடமை உணர்ந்த குடிகள் துயரம் கொள்ள, அங்ஙனம் வரி செலுத்தாது உட்பூசல் செய்யும் குடிகளுடன் நட்புகொண்டு, வெற்றியைத் தரும் படை வேந்தர் இல்லாத நேரம் அறிந்து அவர் நாடெல்லாம் கெடும்படி நலமெல்லாம் கவர்ந்து தம் படையுடன் புதிதாக வந்து தங்கிய குறுநில மன்னர் போல மாலைப் பொழுது வந்தது.
தம் மனத்தில் தங்கிய கணவரைப் பிரிந்த மகளிர் மிக்க துயர் அடைய தம் கணவருடன் கூடியிருக்கும் மகளிர் மிக்க மகிழ்ச்சி பெற மூங்கில் குழலில் கோவலரும் வளரும் முல்லையில் வண்டுகளும் வாய் வைத்து ஊத, குறும்பு செய்யும் வண்டினங்களை ஓட்டி அரும்புகளில் உள்ள மணத்தை முகந்து கொண்டு தென்றலாகிய செல்வன் தெருவெல்லாம் பரப்ப ஒளி மிக்க வளையலை அணிந்த மகளிர் அழகிய விளக்குகளை ஏற்ற வளமார்ந்த மூதூரில் மாலைப் பொழுது வந்தது.
நிலா - முற்றத்தில் கோவலனும் மாதவியும் களித்திருத்தல்
இளையர் ஆயினும் பகை அரசு கடியும்,
செரு மாண் தென்னர் குலமுதல் ஆகலின்
அந்தி வானத்து, வெண் பிறை தோன்றி,
புன்கண் மாலைக் குறும்பு எறிந்து ஓட்டி,
பான்மையின் திரியாது பால் கதிர் பரப்பி,
மீன் - அரசு ஆண்ட வெள்ளி விளக்கத்து
தாம் இளம் பருவத்தினராயினும் பகையரசரை வென்று வாகை சூடிப் போரில் மாட்சிமையுடன் திகழும் பாண்டியர் குல முதல்வன் ஆதலின் திங்கட் செல்வன் அந்தி பொழுதில் செவ்வானத்தின்கண் வெள்ளிய பிறையாகத் தோன்றி வருத்தத்தைத் தரும் மாலையின் குறும்பினை ஓட்டி தன் பண்பில் சிறிதும் பிறழாமல் பால் போன்ற வெள்ளிய கதிர்களை விரித்து விண்மீன்கள் அடங்கிய வானத்தை ஆள அத்திங்கட் செல்வன் வந்தான். அவன் வருகையால் உலகம் ஒளிபெற்றுத்திகழ்ந்தது.
இல் வளர் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த
பல் பூஞ் சேக்கைப் பள்ளியுள் பொலிந்து,
செந் துகிர்க் கோவை சென்று ஏந்து அல்குல்
அம் துகில் மேகலை அசைந்தன வருந்த
நிலவுப் பயன் கொள்ளும் நெடு நிலா - முற்றத்து -
கலவியும் புலவியும் காதலற்கு அளித்து, ஆங்கு;
ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரி,
கோலம் கொண்ட மாதவி அன்றியும்
அப்போது மாதவியும் கோவலனும் வீட்டிடத்தே வளரும் முல்லை மல்லிகை ஆகிய மலர்களுடன் வேறு பல பூக்களும் பரப்பிய மலர்ப்படுக்கையில் பொலிவுடன் இருந்தனர். மாதவி, தனது அல்குலின் மேல் விளங்கும் ஆடையின்மீது சூழ்ந்த பவள வடமாகிய மேகலை அசைந்து ஒலிக்க நிலவின் பயனை அனுபவித்தற்குரிய உயர்ந்த நிலா முற்றத்திலே தன் காதலனுடன் கூடியும் ஊடியும் இன்பம் அளித்தாள். அவள் விருப்பம் மிகுந்த நெஞ்சத்துடன் கோவலனை எதிர் ஏற்றுத்தழுவினாள். அத்தழுவலால் ஒப்பனை குலைய, அதனை மீண்டும் திருத்தி கோவலனுடன் மீண்டும் மீண்டும் கூடி அவனுக்கு இன்பம் அளித்தாள், தானும் இன்பம் நுகர்ந்தாள்.
காதலரைக் கூடிய மகளிரின் களி மகிழ்வு
குட திசை மருங்கின் வெள் அயிர் - தன்னொடும்
குண திசை மருங்கின் கார் அகில் துறந்து;
வடமலைப் பிறந்த வான் கேழ் வட்டத்து,
தென்மலைப் பிறந்த சந்தனம் மறுக;
தாமரைக் கொழு முறி, தாதுபடு செழு மலர்,
காமரு குவளை, கழுநீர் மா மலர்,
பைந் தளிர்ப் படலை; பரூஉக் காழ் ஆரம்;
சுந்தரச் சுண்ணத் துகளொடும் அளைஇச்
சிந்துபு பரிந்த செழும் பூஞ் சேக்கை,
மந்த - மாருதத்து மயங்கினர் மலிந்து, ஆங்கு,
ஆவியங் கொழுநர் அகலத்து ஒடுங்கி,
காவி அம் கண்ணார் களித் துயில் எய்த
மேல்திசை நாடுகளிலிருந்து வந்த வெண்மை நிறம் பொருந்திய அயிர் என்னும் பொருளுடன், கீழ் திசை நாடுகளிலிருந்து வந்த கரிய அகில் முதலியவற்றுடன் புகைக்கும் நறுமணப் புகையை மகளிர் துறந்தனர். வடதிசையில் உள்ள இமயமலையிலிருந்து கண்டுவந்த ஒளி மிக்க வட்டக் கல்லில் தென் திசையில் உள்ள பொதியை மலையிலிருந்து கொண்டுவந்த சந்தனக் கட்டையை அரைத்து அச்சந்தனத்தை உடலில் பூசிக் கொண்டனர். அம்மகளிர் தாமரையின் இளந்தளிரையும் மகரந்தத்துடன் கூடிய அதன் செழு மலரையும் விருப்பத்தைத் தரும் குவளை மலரையும், சிறந்த கழுநீர் மலரையும், மலர்களும் இலைகளும் விரவித்தொடுத்த படலை மாலையையும் பெரிய முத்து மாலையையும் சூடிக்கொண்டனர். நீலோற்பல மலரை ஒத்த கண்களை உடைய அவர்கள் அழகிய சுன்ணப் பொடியுடன் கலந்து கிடந்த செழும் பூவணை மீது இளந்தென்றல் காதல் மயக்கம் கொண்டு தம் உயிர் போன்ற கணவருடைய மார்பைத் தழுவி அவ்வின்பக் களிப்பில் ஆழ்ந்து தியில் கொண்டனர்.
கணவனைப் பிரிந்து வாழும் கண்ணகியின் துயர நிலை
அம் செஞ் சீறடி அணி சிலம்பு ஒழிய,
மென் துகில் அல்குல் மேகலை நீங்க,
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்,
மங்கல அணியின் பிறிது அணி மகிழாள்,
கொடுங் குழை துறந்து வடிந்து வீழ் காதினள்,
திங்கள் வாள் முகம் சிறு வியர்ப் பிரிய,
செங் கயல் நெடுங் கண் அஞ்சனம் மறப்ப,
பவள வாள் நுதல் திலகம் இழப்ப,
தவள வாள் நகை கோவலன் இழப்ப,
மை இருங் கூந்தல் நெய் அணி மறப்ப,
கையறு நெஞ்சத்துக் கண்ணகி அன்றியும்
கண்ணகியின் அழகிய, சிவந்த சிறிய பாதங்கள் அணியும் சிலம்புகளை இழ்ந்தன; மெந்துகில் உடுத்திய அல்குலிடத்திலிருந்து மேகலையும் நீங்கியது. அவள் கொங்கை முன்றிலில் குங்குமம் எழுதவில்லை; மங்கல அணியைத் தவிர பிற அணிகலன்களை அணிந்துகொள்ள விரும்பவில்லை; அவளது காதுகள் வளைவான குண்டலத்தை துறந்து தாழ்ந்தன; திங்கள் போன்ற ஒளி முகத்தில் கணவனைக் கூடும்போது தோன்றும் சிறு வியர்வையும் நீங்கியுள்ளது. சிவந்த கயல் மீனைப் போன்று நீண்ட கண்கள் மையினை மறந்தன; பவலம் போல் ஒளிவிடும் நெற்றி திலகம் இழந்தது. அவளது சுடர்மிகு புன்சிரிப்பைக் கோவலன் இழந்தான். அவளது மிகக்கரிய கூந்தல் நெய் அணிதலை மறந்தது. கணவனைப் பிரிந்த கண்ணகி இவ்வாறு சயலற்று வருந்தினாள்.

காதலரைப் பிரிந்த மாதர்களுடைய நிலை
காதலர்ப் பிரிந்த மாதர் நோதக,
ஊது உலைக் குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி,
வேனில் - பள்ளி மேவாது கழிந்து,
கூதிர்ப் பள்ளிக் குறுங்கண் அடைத்து, மலயத்து ஆரமும் மணி முத்து ஆரமும்
அலர் முலை ஆகத்து அடையாது வருந்த,
தாழிக் குவளையொடு தண் செங்கழுநீர்
வீழ் பூஞ் சேக்கை மேவாது கழிய,
துணை புணர் அன்னத் தூவியின் செறித்த
இணை அணை மேம்படத் திருந்து துயில் பெறாஅது,
உடைப் பெரும் கொழுநரோடு ஊடல் காலத்து
இடைக் குமிழ் எறிந்து, கடைக் குழை ஓட்டி,
கலங்கா உள்ளம் கலங்க, கடை சிவந்து
விலங்கி நிமிர் நெடுங் கண் புலம்பு, முத்து உறைப்ப
தம் கணவரைப் பிரிந்த மகளிர், ஊதும் துருத்தியின் நெருப்பு முனை போல வெய்துயிர்த்து ஒடுங்கினர்; இளவேனிற் காலத்துக்குரிய நிலா முற்றத்தே செல்லாது விலகினர். கூதிர்க் காலத்திற்குரிய இடைநிலை மாடத்தே சென்று தங்கினர்; தென்றல் காற்றும் நிலவொளியும் புகாதவாறு சிறிய வழிகளையும் சாளரங்களையும் மூடினர்; பொதியைமலைச் சந்தனத்தையும் அழகிய முத்து மாலையையும் மார்பில் அடையப்பெறாது வருந்தினர். தாழியில் மலர்ந்த குவளை மலரையும் குளிர்ச்சியான செங்கழுநீர் மலரையும் தாம் விரும்பிய படுக்கையில் பெறாது வருந்தினர் தன் ஆண் அன்னத்தைப் பிரியாது புணர்ந்த பெண் அன்னம் உதிர்த்த இறகை திணித்து செய்யப்பட்டதும் இருவர் சேர்ந்து படுக்கும் வண்ணம் உள்ளதுமான பஞ்சணை மீது படுத்த போதும் களிதுயில் இன்றி வருந்தினர். தம் கணவருடன் முன்னர் ஊடிய காலத்து இடை நின்ற மூக்கைத் தாக்கி கடை நின்ற குண்டலங்களை வீசியெறிந்து அக்கணவர் தம் கலங்காத உள்ளமும் கலங்குமாறு குறுக்கிட்டுப் பிறழும் நீண்ட கண்கள் இப்போது பிரிவென்னும் தனிமைத் துயரால் கண்ணீர்த் துளிகளைச் சிந்தின.
வைகறை வரையில் காமன் திரிதல்
அன்னம் மெல் நடை - நல் நீர்ப் பொய்கை -
ஆம்பல் நாறும் தேம் பொதி நறு விரைத்
தாமரைச் செவ் வாய், தண் அறல் கூந்தல்;
பாண் வாய் வண்டு நோதிறம் பாட,
காண்வரு குவளைக் கண்மலர் விழிப்ப;
புள் வாய் முரசமொடு, பொறி மயிர் வாரணத்து
முள் வாய்ச் சங்கம் முறை முறை ஆர்ப்ப;
உரவுநீர்ப் பரப்பின் ஊர் துயில் எடுப்பி,
இரவுத் தலைபெயரும் வைகறைகாறும் -
அரை இருள் யாமத்தும் பகலும் துஞ்சார்,
விரை மலர் வாளியொடு கருப்பு வில் ஏந்தி,
மகர வெல் கொடி மைந்தன், திரிதர -
நகரம் காவல் நனி சிறந்தது - என்
.
அன்னம் மெதுவாக நடக்க, ஆம்பல் மணம் வீச தேன் மிக்க நறுமணமுடைய சிவந்த வாயையும் குளிர்ச்சி பொருந்திய கருமணலாகிய கூந்தலையும் உடைய நல்ல நீர்மிக்க பொய்கை என்னும் மடவாள் கண் விழிக்க, பண் பாடும் வண்டினங்கள் பள்ளியெழுச்சி பாடும் அழகு வாய்ந்த குவளையாகிய கண்மலர் விரியும். பறவைகளின் ஒலியாகிய முரசுடன் புள்ளிகள் மிக்க சிறகையுடைய கோழிச்சேவலும் முள் போன்ற கூரிய வாயையுடைய சங்கும் தத்தம் முறைக்கேற்ப அடுத்தட்த்து ஒலிக்கும், கடல் போன்ற பரப்பையுடைய புகார் நகரை இவையெல்லாம் ஒன்று சேர்ந்து தியில் எழச்செய்யும். இரவு நீங்கும் வைகறையாகிய அந்நேரம் வரையிலும், இருள் மிக்க நள்ளிரவிலும் ஒரு நொடிப்பொழுதும் துயிலாதவனாய் மணம் மிக்க மலராகிய அம்பையும் கரும்பாகிய வில்லையும் ஏந்தி மகரமாகிய வெற்றிக்கொடியினையுடைய மன்மதன் திரிந்துகொண்டிருந்தலால் அந்நகரில் மன்மதனின் ஆட்சி மிகவும் சிறந்து விளங்கியது.
வெண்பா
கூடினார்பால் நிழல் ஆய், கூடார்பால் வெய்யது ஆய்,
காவலன் வெண்குடை போல் காட்டிற்றே - கூடிய
மாதவிக்கும், கண்ணகிக்கும், வான் ஊர் மதி விரிந்து
போது அவிழ்க்கும் கங்குல் - பொழுது.
நட்பாகிச் சேர்ந்தவர்க்கு நிழலாகவும், பகையாகிச் சேராதவருக்கு வெய்யதாகவும் விளங்கும் சோழ மன்னனின் வெண்கொற்றக் குடைபோல் திகழ்ந்தது திங்கள். வானத்திலே ஊர்ந்து செல்லும் அத்திங்களானது தனது கதிர்களை விரித்து மலர்களை மலரச் செய்யும் இராப்பொழுதில், கோவலனைக் கூடிய மாதவிக்கு இன்பத்தையும், அவனைப் பிரிந்த கண்ணகிக்கு துன்பத்தையும் அளித்தது.
ஆ) மணிமேகலை
சிலப்பதிகார கதை மாந்தர்களான கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த பெண்ணான மணிமேகலையின் கதையைக் கூறும் காப்பியம் இது. இதன் காரணமாகவே சிலப்பதிகாரத்தினையும் மணிமேகலையையும் இரட்டைக் காப்பியங்கள் என்று வழங்குவர். இதற்கு மணிமேகலைத்துறவு என்ற பெயரும் உள்ளது. இளங்கோவடிகளுக்கும் சேர வேந்தன் செங்குட்டுவனுக்கும் கோவலன் கண்ணகியின் கதையினை எடுத்துக்கூறிய மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்னும் புத்தமதத் துறவியே இக்காப்பித்தை இயற்றியவர் ஆவார்.
சிறப்புகள்: மணிமேகலை தமிழில் தோன்றிய முழுமையான சமூக மறுமலர்ச்சிக் காப்பியமாகத் திகழ்கிறது. பெண் என்பவள் தனித்து வாழும் ஆற்றல் அற்றவள் எனவே அவள் ஆன்மிக வாழ்வுக்கும் சமூக வாழ்வில் தலைமை ஏற்கவும் தகுதியற்றவள் என்ற பழமையான புரையோடிய சிந்தனையை மணிமேகலை உடைத்தெறிந்துள்ளது. மது ஒழிப்பு, சாதி ஒழிப்பு, சிறை ஒழிப்பு, பரத்தை ஒழிப்பு, கொலை, களவு ஒழிப்பு போன்றவற்றைச் சொல்லும் காப்பியம். தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம். எளிய இனிய உரையாடல்களையும் இயல்பான வருணனைகளையும் கொண்ட இனிய காப்பியம்.

13 ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை
கற்பு நெறி பிறழ்ந்த சாலி
மாபெரும் பாத்திரம் மடக்கொடிக்கு அருளிய
ஆபுத் திரன்திறம் அணியிழை கேளாய்:
வார ணாசிஓர் மறைஓம் பாளன்
ஆரண உவாத்தி அபஞ்சிகன் என்போன்
பார்ப்பனி சாலி காப்புக்கடை கழிந்து
கொண்டோன் பிழைத்த தண்டம் அஞ்சித்
தென்திசைக் குமரி ஆடிய வருவோள்
சூல்முதிர் பருவத்துத் துஞ்சுஇருள் இயவிடை
ஈன்ற குழவிக்கு இரங்காள் ஆகித்
தோன்றாத் துடவையின் இட்டனள் நீங்க
பெருமை பொருந்திய அமுத சுரபியினை உனக்குக் கிடைக்கக் காரணமாக இருந்த  ஆபுத்திரன் வரலாற்றைக் கூறுகிறேன் கேள் என அறவண அடிகள் கூறத்தொடங்கினார்.  காசியில் வேதம் ஓதும் அந்தணன் ஒருவன் இருந்தான் அவன் பெயர் அபஞ்சிகன். அவன் மனைவி சாலி. அவள் கற்பு நெறியிலிருந்து தவறினாள். அதனால் ஏற்பட இருக்கும் தண்டனைக்குப் பயந்து, தென் திசையில் இருக்கும் குமரிக்கு நீராட வந்தாள். அப்படி வந்தவள் யாவரும் உறங்கும் இருள் மிகுந்த இரவில் சூல் முதிர்ந்த பருவத்தில், பெற்ற குழந்தையிடம் சிறிதும் இரக்கம் கொள்ளாமல் ஒரு தோட்டத்தில் அக்குழந்தையை இட்டுச் சென்றாள்.
பசு ஆபுத்திரனுக்குப் பால் ஊட்டியது
தாய்இல் தூவாக் குழவித்துயர் கேட்டுஓர்
ஆவந்து அணைந்துஆங்கு அதன்துயர் தீர
நாவான் நக்கி நன் பால் ஊட்டி
போகாது எழு நாள் புறங்காத்து ஓம்ப 
 பால் உண்ணாது பசியினால் அழும் தாயற்ற குழந்தையின் அழுகை ஒலியைக் கேட்டு ஒரு பசு அங்கே வந்தது. குழந்தையின் துயர் தீருமாறு நாவினால் நக்கிக் கொடுத்துத் தனது இனிய பாலை அதற்கு ஊட்டியது. ஏழு நாள் வரை அக்குழந்தையை விட்டு நீங்காது பாலூட்டிப் பாதுகாத்து வந்தது.
என் மகன் என இளம்பூதி ஆபுத்திரனைக் கையில் எடுத்தது
வயனங்கோட்டில் ஓர் மறை ஓம்பாளன்
இயவிடை வருவோன் இளம்பூதி என்போன்
குழவி ஏங்கிய கூக் குரல் கேட்டுக்
கழுமிய துன்பமொடு கண்ணீர் உகுத்து ஆங்கு
"ஆ மகன் அல்லன் என் மகன்" என்றே
காதலி தன்னொடு கைதொழுது எடுத்து
வயனங்கோடு என்னும் ஊரிலுள்ள ஓர் அந்தணன் அந்த வழியே தன் மனைவியுடன் வந்தான். இளம்பூதி என்னும் பெயருடைய அவன் ஏங்கித்தவிக்கும்  குழந்தையின் அழுகை ஒலி கேட்டு, மிக்கத் துன்பத்துடன் கண்ணீர் சொரிந்தான்.  ‘இக்குழந்தை பசுவின் மகன் அல்லன்; என் மகன்’ எனக் கூறித் தனக்கு மகப்பேறு அளித்த இறைவனைக் கைகுவித்து வணங்கி தன் மனைவியுடன் அக்குழந்தையை அன்புடன் எடுத்தான்.
இளம்பூதி ஆபுத்திரனுடன் தனது ஊர் சென்றடைதல்
"நம்பி பிறந்தான் பொலிக நம் கிளை!" என
தம் பதிப் பெயர்ந்து தமரொடும் கூடி
மார்பிடை முந்நூல் வனையாமுன்னர்
நாவிடை நல் நூல் நன்கனம் நவிற்றி
ஓத்து உடை அந்தணர்க்கு ஒப்பவை எல்லாம் 
நாத் தொலைவு இன்றி நன்கனம் அறிந்த பின் 
மகன் பிறந்தான் நம் கிளை இனிச் சிறப்புறும் எனக் கருதித் தன் ஊர் சென்று உறவினர்களுடன் கூடிக் களித்தான். மார்பில் முந்நூல் அணிதற்கு முன்னரே நாவினால் வேதங்களை நன்கு பயிற்றுவித்தான் இளம்பூதி. அச்சிறுவனும் மரை ஓதும் அந்தணர்க்குப் பொருந்துவன அனைத்தையும் சொல் வன்மை குன்றாமல் நன்கு எடுத்துரைப்பதில் வல்லவனானான்.
பசுவிற்காக இரங்கிய சிறுவன்
அப் பதி தன்னுள் ஓர் அந்தணன் மனைவயின்
புக்கோன் ஆங்குப் புலை சூழ் வேள்வியில்
குரூஉத் தொடை மாலை கோட்டிடைச் சுற்றி
வெரூஉப் பகை அஞ்சி வெய்து உயிர்த்துப் புலம்பிக்
கொலை நவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி
வலையிடைப் பட்ட மானே போன்று ஆங்கு
அஞ்சி நின்று அழைக்கும் ஆத் துயர் கண்டு
நெஞ்சு நடுக்குற்று நெடுங் கணீர் உகுத்து
"கள்ள வினையின் கடுந் துயர் பாழ்பட 
ஒரு நாள் அச்சிறுவன் அவ்வூரிலுள்ள ஓர் அந்தணன் வீட்டிற்குச் சென்றான். அங்கு ஊன் உன்ணுதலைக் கருதும் வேள்விச் சலையைக் கண்டான். அங்கே ஒரு பசு, அழகிய நிறம் பொருந்திய மாலை கொம்பிலே சுற்றப்பட்டு அச்சத்தைத் தரும் பகைக்குப் பயந்து பெருமூச்சுவிட்டு வருந்தி நின்றது. அதனைக் கண்ட அச்சிறுவன் நடுங்கிக் கண்ணீர் சொறிந்து துன்புற்றான்.
ஆபுத்திரன் பசுவைக் கவர்ந்து செல்லுதல்
நள் இருள் கொண்டு நடக்குவன்" என்னும்
உள்ளம் கரந்து ஆங்கு ஒரு புடை ஒதுங்கி
அல்லிடை ஆக் கொண்டு அப் பதி அகன்றோன்
கல் அதர் அத்தம் கடவாநின்றுழி
அடர்க் குறு மாக்களொடு அந்தணர் எல்லாம்
இந்தப் பசுவின் கொடுந்துயர் தொலைய நள்ளிரவில் இதனைத் திருடிச் சென்றுக் காப்பாத்துவேன் என்னும் எண்ணத்துடன் அங்கே ஒரு புறம் ஒதுங்கி இருந்தான்.  நள்ளிரவு வர, தான் நினைத்தவாறு அப்பசுவை கவர்ந்துகொண்டு அவ்வூரை விட்டு அகன்றான்.
ஆபுத்திரனை அந்தணர்கள் துன்புறுத்துதல்
கடத்திடை ஆவொடு கையகப்படுத்தி
"ஆ கொண்டு இந்த ஆர் இடைக் கழிய
நீ மகன் அல்லாய் நிகழ்ந்ததை உரையாய்
புலைச் சிறு மகனே! போக்கப்படுதி" என்று
அலைக் கோல் அதனால் அறைந்தனர் கேட்ப 
அவ்வாறு அவன் அவ்வூரை விட்டு நீங்கிச் செல்லும் போது, தவறு செய்வோரைத் தாக்கி வருத்தும் மக்களுடன் சேர்ந்து வந்த அந்தணர்கள் பசுவுடன் சேர்த்து அவனைப் பிடித்துக்கொண்டனர். ‘பசுவைத் திருடிக்கொண்டு இந்த கடிஅமான வழியில் செல்லும் நீ நன் மகனே அல்ல நீச மகனே, நிகழ்ந்ததைக் கூறு அப்படிக்கூறினால் தண்டனையிலிருந்து தப்புவாய்’ என்று கூறித் துன்புறுத்தும் கோலால் அடித்துதுன்புறுத்தினர்.
ஆபுத்திரன் அந்தணர்களிடம் வினாவுதல்
ஆட்டி நின்று அலைக்கும் அந்தணர் உவாத்தியைக்
கோட்டினில் குத்திக் குடர் புய்த்துறுத்துக்
காட்டிடை நல் ஆக் கதழ்ந்து கிளர்ந்து ஓட
ஆபுத்திரன் தான் ஆங்கு அவர்க்கு உரைப்போன்
"நோவன செய்யன்மின் நொடிவன கேண்மின்
விடு நில மருங்கில் படு புல் ஆர்ந்து
நெடு நில மருங்கின் மக்கட்கு எல்லாம்
பிறந்த நாள் தொட்டும் சிறந்த தன் தீம் பால்
அறம் தரு நெஞ்சோடு அருள் சுரந்து ஊட்டும்
இதனொடு வந்த செற்றம் என்னை
முது மறை அந்தணிர்! முன்னியது உரைமோ?" 
அப்படி அச்சிறுவனை அடித்துத் துன்புறுத்தும் பார்ப்பனரின் உவாத்தியைக் கொம்பினால் குத்திக் குடலைப் பிடுங்கிக் கொண்டு காட்டினுள் விரைந்து ஓடியது அந்த நல்ல பசு. பின் ஆபுத்திரன் அங்குள்ள அந்தணர்களை நோக்கி பிற உயிர் வருந்தும்படியான எச்செயலையும் செய்யாதீர், நான் கூறுவதைக் கேளுங்கள், மேய்ச்சல் நிலத்தில் உள்ள புல்லை மேய்ந்து இந்த பெரிய உலகத்திலுள்ள மக்களுக்கெல்லாம் அவர்கள் பிறந்தது முதல் சிறந்த தன் இனிய பாலினை அறம் பொருந்திய உள்ளத்தோடும் அருளோடும் ஊட்டும் இந்தப் பசுவினிடம் உங்களுக்கு ஏன் இந்தக் கோபம்? பழமையான வேதங்களை ஓதும் அந்தணர்களே உமது கருத்தினை உரைப்பீராக’ என்றான்.
அந்தணர்கள் ஆபுத்திரனை இகழ்தல்
"பொன் அணி நேமி வலம் கொள் சக்கரக் கை
மன் உயிர் முதல்வன் மகன் எமக்கு அருளிய
அரு மறை நல் நூல் அறியாது இகழ்ந்தனை
தெருமரல் உள்ளத்துச் சிறியை நீ அவ்
ஆ மகன் ஆதற்கு ஒத்தனை அறியாய்
நீ மகன் அல்லாய் கேள்" என இகழ்தலும் 
பொன்னாலான அழகிய வட்டத்தினை உடைய சக்கரப் படையைக் கையில் ந்ந்ந்தியவனான திருமால். அவன் அனைத்து உயிர்களுக்கும் முதல்வன். அத்திருமால் மகனான பிரமன் எங்களுக்கு அருளிய அரிய வேதநூல் பொருளை அறியாமல் பழித்து உரைத்தாய். சுழலும் நெஞ்சத்தினையுடைய சிறுவனே, நீ அனதப் பசுவின் மகனாக இருப்பதற்கே தகுதி உடையவன். அறிவில்லாதவனே நீ நல்ல பார்ப்பானுடைய மகன் அல்ல. இதனைக் கேள் என அந்தணர்கள் அவனை இகழ்ந்தனர்.
அந்தணர்களின் இகழ்ச்சிக்கு ஆபுத்திரனின் மறுமொழி
"ஆன் மகன் அசலன் மான் மகன் சிருங்கி
புலி மகன் விரிஞ்சி புரையோர் போற்றும்
நரி மகன் அல்லனோ கேசகம்பளன் 
ஈங்கு இவர் நும் குலத்து இருடி கணங்கள் என்று
ஓங்கு உயர் பெருஞ் சிறப்பு உரைத்தலும் உண்டால்
ஆவொடு வந்த அழி குலம் உண்டோ
நான்மறை மாக்காள் நல் நூல் அகத்து?" என 
அந்தணர்களது இகழ்ச்சியைக் கேட்ட ஆபுத்திரன், ‘அசல முனிவன் ஒரு பசுவின் மகன்; சிருங்கி முனிவன் ஒரு மானின் மகன்; விரிஞ்சி முனிவன் ஒரு புலியின் மகன், சான்றோர் போற்றும் கேசகம்பாள முனிவன் ஒரு நரியின் மகன் இவர்களெல்லாம் உங்கள் குலத்துதில் தோன்றிய முனிவர்கள் என்று உயர்வாகப் போற்றுதல் உண்டு. ஆதலால் நான் மறையில் வல்லவர்களே உங்கள் வேதங்களில் பசுவால் வந்த இழிகுலம் என்று ஏதேனும் உண்டோ?’ என்று வினவினான்.
அந்தணன் ஒருவன் ஆபுத்திரனின் பிறப்பு பற்றி கூறுதல்
ஆங்கு அவர் தம்முள் ஓர் அந்தணன் உரைக்கும்
"ஈங்கு இவன் தன் பிறப்பு யான் அறிகுவன்" என
"நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள்
வடமொழியாட்டி மறை முறை எய்தி
குமரி பாதம் கொள்கையின் வணங்கி
தமரின் தீர்ந்த சாலி என்போள் தனை
'யாது நின் ஊர்? ஈங்கு என் வரவு?' என
மா மறையாட்டி வரு திறம் உரைக்கும்
'வாரணாசி ஓர் மா மறை முதல்வன்
ஆரண உவாத்தி அரும் பெறல் மனைவி யான்
பார்ப்பார்க்கு ஒவ்வாப் பண்பின் ஒழுகி
காப்புக் கடைகழிந்து கணவனை இகழ்ந்தேன்
எறி பயம் உடைமையின் இரியல் மாக்களொடு
தெற்கண் குமரி ஆடிய வருவேன்
பொன் தேர்ச் செழியன் கொற்கை அம் பேர் ஊர்க்
காவதம் கடந்து கோவலர் இருக்கையின்
ஈன்ற குழவிக்கு இரங்கேனாகித்
தோன்றாத் துடவையின் இட்டனன் போந்தேன்
செல் கதி உண்டோ தீவினையேற்கு?' என்று
அல்லல் உற்று அழுத அவள் மகன் ஈங்கு இவன் 
சொல்லுதல் தேற்றேன் சொல் பயம் இன்மையின்
புல்லல் ஓம்பன்மின் புலை மகன் இவன்" என 
 அப்போது அங்கிருந்த அந்தனருள் ஒருவன், ‘இவனது பிறப்பினைப் பற்றி நான் அறிவேன்’ எனக் கூறத்தொடங்கினான். தன் உறவினர்களை விட்டுப் பிரிந்து வழி நடையால் வருத்தமுற்று இளைத்த உடலுடன் கூடிய ஒரு பார்ப்பனப் பெண், வேத விதிப்படி சென்று குமரித்தெய்வத்தின் திருவடிகளை முறையாகத் தொழுது வந்து கொண்டிருந்தாள். அவள் பெயர் சாலி. அவளிடம் ‘உனது ஊர் எது? நீ இங்கு வந்த காரணம் யாது எனக் கேட்டேன்’ அவள் தனது வரலாற்றைக் கூறினாள். ‘வாரணாசி நகரட்த்திலே உள்ள வேதம் ஓதுவிக்கும் உவாத்தியாகிய அந்தணன் ஒருவனின் பெறற்கரிய மனைவி நான். அந்தணர்க்குத் த்காத நெறியில் நடந்துகொண்டேன். கற்பாகிய மேலான ஒழுக்கத்திலிருந்து தவறினேன். கணவனை இகழ்ந்தேன். இத்தவற்றிற்குத் தண்டனை கிடைக்குமே என்ற அச்சத்துடன் தெந்திசைக் குமரியில் நீராட வந்தேன். அப்படி வரும்போது பொன் தேரினையுடைய பாண்டியனின் கொற்கையில் ஒரு காவத தூரம் வந்த போது ஆயர்களது இருப்பிடத்தை அடைந்தேன். அங்கே ஒரு மகனை ஈன்றெடுத்தேன். அந்தக் குழந்தைக்குச் சிறிதும் இரங்காது, அதனைக் கண் காணாத ஒரு தோட்டத்தில் போட்டு விட்டு வந்தேன். இத்தகைய தீவினையை உடைய எனக்கு நற்கதியும் உண்டோ?’ என்று துன்புற்று அழுத சாலியின் மகன் இவன். நான் கூறுவதால் ஒரு பயனும் ஏற்படாது எனக் கருதி இதுவரை இதனை வெளியில் சொல்லாமலிருந்தேன். இவன் இழிந்த மகன் இவனைத் திண்டாது விலகிச் செல்வீர் என்றான்.
ஆபுத்திரன் சிரிப்பு
ஆபுத்திரன் பின்பு அமர் நகை செய்து
"மா மறை மாக்கள் வரும் குலம் கேண்மோ
முது மறை முதல்வன் முன்னர்த் தோன்றிய
கடவுள் கணிகை காதல் அம் சிறுவர்
அரு மறை முதல்வர் அந்தணர் இருவரும் 
புரி நூல் மார்பீர்! பொய் உரை ஆமோ?
சாலிக்கு உண்டோ தவறு?' என உரைத்து
நான்மறை மாக்களை நகுவனன் நிற்ப 
அது கேட்ட ஆபுத்திரன் சிறிது சிரித்தான். பெரிய வேதங்களை உணர்ந்த அந்தணர்கள் தோன்றிய மரபினைக் கேளுங்கள். வேத முனிவனாகிய பிரமனுக்குத் தெய்வ கன்னிகையான திலோத்தமையிடம் பிறந்த அன்புப் பிள்ளைகள் அன்றோ அரிய மறை முதல்வர் எனப் போற்றப்படும் இரு முனிவர்களான வசிட்டரும் அகத்தியரும். முப்புரி நூல் பூண்ட மார்பினை உடைய அந்த்ணர்களே இது பொய்யா? இது உண்மையாயின் சாலியிடம் மட்டும் நேர்ந்த குற்ற என்ன எனக் கூறி அந்தணர்கலைப் பார்த்து இகழ்ச்சியுடன் சிரித்து நின்றான்.
ஆபுத்திரன் அடைந்த துயரம்
"ஓதல் அந்தணர்க்கு ஒவ்வான்" என்றே
தாதை பூதியும் தன் மனை கடிதர
"ஆ கவர் கள்வன்" என்று அந்தணர் உறைதரும்
கிராமம் எங்கணும் கடிஞையில் கல் இட
மிக்க செல்வத்து விளங்கியோர் வாழும்
தக்கண மதுரை தான் சென்று எய்திச்
மறை ஓதும் அந்தணர் குடிக்கு இவன் பொருத்தமற்றவன் என்று அவன் வளர்ப்புத் தந்தையான இளம்பூதி அவனைத் தனது வீட்ட்டிலிருந்து வெளியேற்றினான். பசுவைத் திருடிய கள்வன் இவன் என்று கூறி அந்தணர் வாழும் ஊர்களிலெல்லாம் இவனது பிச்சைப் பாத்திரத்தில் சோறிடாமல் கற்களைப் போட்டனர். அதன் பின் அவன் செல்வம் மிக்கவர் வாழும் தென் மதுரையை அடைந்தான்.
ஆபுத்திரனின் அருள் உள்ளம்
சிந்தா விளக்கின் செழுங் கலை நியமத்து
அந்தில் முன்றில் அம்பலப் பீடிகைத்
தங்கினன் வதிந்து அத் தக்கணப் பேர் ஊர்
ஐயக் கடிஞை கையின் ஏந்தி
மை அறு சிறப்பின் மனைதொறும் மறுகி
'காணார் கேளார் கால் முடப்பட்டோர்
பேணுநர் இல்லோர் பிணி நடுக்குற்றோர்
யாவரும் வருக' என்று இசைத்து உடன் ஊட்டி
உண்டு ஒழி மிச்சில் உண்டு ஓடு தலை மடுத்து
கண்படைகொள்ளும் காவலன் தான் என்

அடைந்து, சிந்தாதேவியின் அழகிய கோயிலின் வாயிலிடத்தே உள்ள பீடிகை உடைய அம்பலத்தில் தஙியிருந்தான். அவன் அம்மதுரை நகரிடத்தே பிச்சைப் பாத்திரத்தைக் கையில் ஏந்தி குற்றமற்ற சிறப்பினை உடைய வீடுகள் தோறும் சுற்றி அலைந்து உணவினைப் பெறுவான். அவ்வாறு பெற்ற உணைவினைக் கண்ணற்றவர், கேட்கும் திறனற்றவர், கால் முடம்பட்டோர், ஆதரிப்போர் இல்லாதோர், நோயால் துன்புற்றவர் ஆகிய அனைவரும் வாருங்கள் எனக் கூறி அழைத்து அவர்களுக்கு முதலில் உணவு தருவான். பின் எஞ்சியவற்றைத் தான் உண்டு, அந்த பிச்சைப் பாத்திரத்தினையே தலைக்கு அணையாக வைத்துக்கொண்டு உறங்குவான் அறம் காத்தலையுடைய ஆபுத்திரன்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக