வெள்ளி, 11 செப்டம்பர், 2015

புறநானூறுத் திணை, துறைகள்: உழிஞைத் திணையை முன்னிறுத்தி ஒரு குறிப்பு

தமிழ் இலக்கிய மரபின் தொடக்கப் புள்ளியாகப் பாட்டும் தொகையும் என அமைந்த சங்கச் செவ்வியல் பாடல்களின் தொகுப்பு விளங்குகிறது. தனிநிலைச் செய்யுள்களாகப் புலவர்கள் பலரால் பாடப்பட்ட சங்கப் பாடல்கள் பொருண்மை, அடியளவு, பாவகை என்ற அளவைகளின்வழிப் பகுக்கப்பட்டு எட்டுத் தொகை என்றும் பத்துப்பாட்டு என்றும் தொகுக்கப்பட்டன. சங்கப் பாடல்கள் தொகைகளாகத் தொகுக்கப்பட்ட காலத்தில்தான் அவைகளுக்கான திணை, துறை, கூற்று, பாடினோர், பாடப்பட்டோர் முதலிய விளக்கங்கள் குறிக்கப்பட்டன. தொகுப்பு காலத்தில் குறிக்கப்பட்ட இவ்விளக்கங்களின் பாற்பட்டும் அதனைவிட்டு விலகாமலுமே சங்கத் தொகை நூல்களுக்கு எழுந்த உரைகளும் அமைந்துள்ளன. எனினும் தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் அகத்திணையியலுக்கும் புறத்திணையியலுக்கும் உரை எழுதியுள்ள உரையாசிரியர்கள், அகத்திணைகளையையும் புறத்திணைகளையையும் விளக்குமிடத்து அவைகளுக்கு உதாரணமாகச் சில சங்கப் பாடல்களை எடுத்துக்காட்டியுள்ளனர். தொல்காப்பிய உரையில் குறிப்பிட்ட ஒரு திணைக்கு உரியதாகக் காட்டப்படும் ஒரு பாடல், சங்கத் தொகுப்பில் வேறு திணைக்கு உரியதாகக் குறிக்கப்பட்டிருக்கும். குறிப்பாகப் புறநானூற்றுத் தொகுப்பில் உழிஞைத் திணைக்கு உரியதாக எந்த ஒரு பாடலும் இடம்பெறவில்லை. ஆனால் தொல்காப்பியப் புறத்திணையியல் உரையில், உழிஞைத் திணையை விளக்குமிடத்து அத்திணைக்கு உரியனவாகப் பன்னிரண்டு புறநானூற்றுப் பாடல்கள் உரையாசிரியர்களால் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. (இளம்பூரணர் தனியே நான்கு பாடல்கள், நச்சினார்க்கினியர் தனியே ஐந்து பாடல்கள், இருவரும் பொதுவாக மூன்று பாடல்கள்) தொல்காப்பிய உரைகளில் உழிஞைத் திணைக்கு உரியனவாகக் காட்டப்பட்ட இப்புறநானூற்றுப் பாடல்களின் அடிப்படையில் புறநானூற்றுத் திணை, துறை விளக்கங்களைப்பற்றி சில குறிப்புகளை முன்வைக்கிறது இக்கட்டுரை.
புறநானூறு: தொகுப்பு, உரை, மேற்கோள்
சங்கத் தொகை நூல்களுள் காலத்தால் மிகவும் பழமையான பாடல்களக் கொண்ட நூலாகப் புறநானூறு விளங்குகிறது. கி.மு. 300 முதல் கி.பி. 250 வரையிலான காலப்பரப்பில் தோன்றிய இப்பாடல்கள் ஏறக்குறைய கி.பி. 5 அல்லது கி.பி. 6 ஆம் நூற்றாண்டளவில் தொகுக்கப் பட்டிருக்கும் என்பது பொதுவான கருத்து. இதனைத் தொகுத்தவர், தொகுப்பித்தவர் யார் என்பது தெரியவில்லை. இந்த நூலக்குப் பெயர் அறியப்படாத பழைய உரை ஒன்றும் கிடத்துள்ளது (266 பாடல் வரை மட்டும்). எளிய நடையில் அமந்த இவ்வுரை தொகுப்பு காலத்தில் குறிக்கப்பெற்ற திணை, துறை விளக்கங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. தொல்காப்பியத்திற்கு உரை செய்த இளம்பூரணர், நச்சினார்க்கினியர் இருவரும் புறத்திணையியலில் மட்டும் ஏறக்குறைய 80 இடங்களில் புறநானூற்றுப் பாடல்களை மேற்கோளாக எடுத்தாண்டுள்ளனர். இவற்றுள் ‘வஞ்சினக் காஞ்சி’ உள்ளிட்ட ஒரு சில துறைகள் தவிர ஏனைய துறைகளுக்கு மேற்கோள்களாக எடுத்துக்காட்டிய பாடல்கள் புறநானூற்றுத் தொகுப்பில் வேறு திணை, துறைகளுக்கு உரியனவாகக் குறிக்கப்பட்டுள்ளன.
ஒரு செய்யுள் இரு திணைகள்
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியதாக அமந்த புறநானூறு 36 ஆம் பாடல், தொல்காப்பிய உரையினுள் இளம்பூரணர், நச்சினார்க்கினியர் இருவராலும் உழிஞைத் திணையின் உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பு என்னும் பகுதியை விளக்க மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது.
இப்பாடலில் சோழ மன்னன் கருவூரை முற்றுகையிட்டிருந்த செய்தி குறிக்கப்பட்டுள்ளது. இதன்வழி இப்பாடலை இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் உழிஞைத் திணையாகக் கொண்டுள்ளனர். ‘அவன் (சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்) கருவூரை முற்றியிருந்தானை ஆலத்தூர் கிழார் பாடியது.’ என்றவாறு பாடலின்கீழ் அமைந்துள்ள பாடினோர் பாடப்பட்டோர் விளக்கத்தில் உள்ள ‘முற்றியிருந்தானை’ என்ற குறிப்பும் இதனை உருதிப்படுத்துகிறது.
புறநூனூற்றுத் தொகுப்பில் இப்பாடலின் திணை வஞ்சி என்றும் துறை துணை வஞ்சி என்றும் குறிக்கப்பட்டுள்ளது. ‘மேற்சென்றானைச் சந்து செய்து மீட்டலின் இது துணை வஞ்சி யாயிற்று’ (புறம். 36, உரை) என்றவாறு புறநானூற்றின் பழைய உரை இப்பாடல் துணை வஞ்சி துறையில் அமைக்கப்பட்டதற்கான கரணத்தை விளக்குகிறது. துணை வஞ்சி என்னும் துறையை வஞ்சித் திணையின் துறைகளுள் ஒன்றாகத் தொல்காப்பியமோ, புறப்பொருள் வெண்பாமாலையோ குறிக்கவில்லை. இளம்பூரணரே துணை வஞ்சியை, வஞ்சித் திணைக்கு உரிய துறைகளுள் ஒன்றாக இணைத்துள்ளார். எனினும் துணை வஞ்சி என்னும் துறைக்கு இளம்பூரணர் தரும் விளக்கம் இப்பாடலின் கருத்திற்குப் பொருந்தி வருவதாகத் தெரியவில்லை. இளம்பூரணரின் விளக்கம் தவிர்த்த வேறு மூலங்களில் இத்துறைபற்றிய விளக்கங்கள் கிடைக்காததால் இப்பாடல் துணை வஞ்சி என்னும் துறைக்குரிய இலக்கணத்துடன் பொருந்தி வந்துள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை.
பிற செய்யுள்கள்
மேற்சொன்னவை போக புறநானூற்றின் 37, 44, 77 ஆம் பாடல்கள் இளம்பூரணரால் உழிஞைத் திணையாகக் குறிக்கப்பட்டுள்ளன. ஆனால் புறநானூற்றுத் தொகுப்பில் இம்மூன்று பாடல்களும் வாகைத் திணை - அரச வாகை துறை என்பதாகக் குறிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 77 ஆம் பாடலில்
            குடுமி களைந்தநுதல் வேம்பி னொண்டளிர்
            நெடுங்கொடி யுழிஞை பவரொடு மிலைந்து . . .                (புறம். 77: 2, 3)
என்ற அடிகள் - தலையில் வேம்பின் தளிரை உழிஞையொடு இணைத்து அணிந்து - என்னும் பொருள்பட அமைந்துள்ளன. இக்குறிப்பும் இதனை உழிஞைத் திணையாகக் கொள்வதற்கு அரணாகின்றது. 271 ஆம் பாடலும் இளம்பூரணரால் உழிஞைத் திணைக்கு உரியதாகக் காட்டப்பட்டுள்ளது., புறநானூற்றில் அது நொச்சித் திணை - செருவிடை வீழ்தல் துறை என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
புறநானூற்றின் 42 ஆம் பாடலும் 109 ஆம் பாடலும் இளம்பூரணர், நச்சினார்க்கினியர் இருவராலும் உழிஞைத் திணைக்கு உரியனவாக எடுத்துக்காட்டப் பட்டுள்ளன. ஆனால் புறநானூற்றில் இவை முறையே வாகை - அரச வாகை என்றும் நொச்சி - மகண் மறுத்தல் என்றும் குறிக்கப்பட்டுள்ளன.
நச்சினார்க்கினியர், புறநானூற்றின் 203, 272, 284, 305, 332 ஆகிய பாடல்களை உழிஞைத் திணைக்கு உரியனவாகக் காட்டியுள்ளார். ஆனால் புறநானூற்றில் இவை முறையே பாடாண்டிணை - பரிசிற்றுறை என்றும் நொச்சி - செருவிடை வீழ்தல் என்றும் தும்பை - பாடாண் பாட்டு என்றும் வாகை - பார்ப்பன வாகை என்றும் வாகை - மூதின் முல்லை என்றும் குறிக்கப்பட்டுள்ளன.
திணை துறை விளக்கங்கள் மூடிய சட்டங்கள் அல்ல
சங்கப் பாடல்களுக்குக் குறிக்கப்பட்டுள்ள திணை, துறை விளக்கங்கள் எந்தப் பின்புலத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளன என்பதுபற்றி ஒரு தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை. கைக்கிளை, பெருந்திணை ஆகிய இரண்டு திணைகளும் அகப்பொருளுக்கு உரியனவாகத் தொல்காப்பியரால் சுட்டப்பட்டுள்ளன. இதற்கிணங்க இத்திணையில் அமைந்த பாடல்கள் சில கலித்தொகையில்  இடம்பெற்றுள்ளள்ளன. அதே வேளையில் இவற்றைப் புறப்பொருள் திணைகளாகப் புறப்பொருள் வெண்பாமாலை வகைப்படுத்தியுள்ளது.  அதற்குத் தகுந்தாற்போல் கைக்கிளையும் பெருந்திணையும் புறநானூற்றில் புறப்பொருள் திணைகளாகவே குறிக்கப்பட்டுள்ளன. மற்றொன்று புறநானூற்றில் குறிக்கப்பட்ட துணை வஞ்சி என்னும் துறை தொல்காப்பியத்திலோ புறப்பொருள் வெண்பாமாலையிலோ இடம்பெறவில்லை.
சங்கப் பாடல்களுக்குத் திணை, துறை முதலியவற்றை வகுத்தோர் அவற்றைத் தொல்காப்பியத் திணை வகைப்பாட்டிலிருந்து மேலும் விரிவுபடுத்தி வகைப்படுத்த முற்பட்டுள்ளமை மேற்கண்ட இடங்களின்வழிப் புலனாகிறது. சங்கப் பாடல்களுக்குத் திணை, துறை வகுக்கப்பட்ட காலத்தில் திணை, துறை வகைப்பாட்டுச் சிந்தனையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. இம்மாற்றம் அல்லது விரிவு ஏற்படுத்திய தாக்கங்களை இத்தொகுப்பு முயற்சிகளுக்குப்பின் தோற்றம்பெற்ற நம்பி அகப்பொருள், புறப்பொருள் வெண்பாமாலை உள்ளிட்ட பொருள் இலக்கண நூல்களுள் காணமுடிகிறது. திணை, துறை விளக்கங்கள் குறிக்கப்பட்ட காலத்தில் தமிழ் புலமை உலகில் உருவாகியிருந்த திணை, துறை சார்ந்த சிந்தனை மரபு என்பது தொல்காப்பியத்திற்கும் அதன் பின்னர் தோன்றிய பொருள் இலக்கணங்களுக்கும் ஒரு பாலமாக அமைந்திருந்தது எனச் சொல்வதும் பொருந்தும்.
சங்கப்  பாடல்களின் பழமையைக் கருத்தில்கொண்டு அவற்றிற்குத் தொல்காப்பிய இலக்கணத்திலிருந்து விலகுவதாகத் திணை, துறை வகுத்தது பொருந்தாது என்னும் கருத்தும் முன்வைக்கப்பட்டது. நச்சினார்க்கினியர் முதலில் இவ்விவாதத்தைத் துவக்கி வத்தார். ‘தத்தம் புது நூல் வழிகளால் புறநானூற்றுக்குத் துறை கூறினாரேனும் அகத்தியமும் தொல்காப்பியமுமே தொகைகளுக்கு நூலகலின் அவர் சூத்திரப் பொருளாகத் துறை கூறவேண்டு மென்றறிக’ (தொல். பொருள். 90, ந்ச்சர். ப. 411) என்றவாறு தொல்காப்பியப் புறத்திணையியலில் அவர் எழுதியுள்ள உரை, தொல்காப்பியமே புறநானூற்றிக்கு உரிய இலக்கணம் என்பதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.
வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை உள்ளிட்டவை தொல்காப்பியக் கருத்திற்கிணங்க தனிநிலை போர்கள் என்றும் மாறாகப் புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுவதற்கு இணங்க  ஒரே போரின் வெவ்வேறு நிலைகள் அல்ல என்றும் தக்க காரணங்கள் காட்டி, புறப்பொருள் வெண்பாமலையின் திணைக் கோட்பாடு புறநானூற்றிற்குப் பொருந்தாது என்று விளக்கியுள்ளார் தமிழண்ணல் (2009: 137-139). நச்சினார்க்கினியர் முதலானோர் சங்கப் பாடல்களுக்குத் தொல்காப்பியத்தையே இலக்கணமாகக் கொள்கின்றனர். இந்நிலையில் தொல்காப்பியத்திலிருந்து விலகிச் சங்கப் பாடல்களுக்கு வரயறுக்கப்பட்ட திணை, துறைகளது பொருத்தப்பாட்டின்மீது கேள்வி எழுகிறது.
சங்கப் பாடல்களுக்குத் தொகுப்பு காலத்தில் குறிக்கப்பட்ட திணை, துறை விளக்கங்கள் அக்காலகட்டத்தில் தமிழ் புலமை உலகில் நிலவிவந்த இலக்கிய வாசிப்பு முறையினை விளக்குவதாகக் கொள்ளமுடியும். பொது நிலையில் ஒரு இலக்கியப் படைப்பு என்பது அதனை அணுகுபவரின் மன நிலைக்கும் அறிவு நிலைக்கும் எற்ப பொருள்படும் தன்மையைக் கொண்டது. இந்த அடிப்படையில், சங்கப் பாடல்களுக்கு வழங்கப்பட்ட திணை, துறை விளக்கங்களைத் திணை, துறை குறிக்கப்பட்ட காலத்தில் நிலவிவந்த புலமை நிலைக்கும் வாசிப்பு முறைக்கும் ஏற்ப அமைக்கப்பட்டுள்ளவையாக கொள்ளமுடியும்.
சங்கத் தொகை நூல்களில் குறிப்பாகப் புறநானூற்றில் சில பாடல்களுக்குத் திணைகளும் சில பாடல்களுக்குத் துறைகளும் சிலவற்றிற்கு இரண்டும் எழுதப்பட்டிருக்கவில்லை. சில பாடல்களுக்கு இரண்டு துறைகள் குறிக்கப்பட்டுள்ளன. இவை, குறிப்பிட்ட ஒரு பாடலுக்கு குறிக்கப்பெற்ற திணை, துறை விளக்கங்கள் முடிந்த முடிபல்ல என்பதையும் திணை, துறை விளக்கங்கள் குறிப்பிட்ட அந்த பாடல் வெளிப்படுத்தும் பொருளின் ஒரு பரிமாணம் மட்டுமே என்பதையும் விளக்கிநிற்கின்றன.
திணை, துறை, கூற்று விளக்கங்கள் சங்கப் பாடல்களை அணுகுவதற்கு மிக மிக இன்றியமையாதவையே. இவ்விளக்கங்கள் இல்லையேல் சில சங்கப் பாடல்கள் ஒரு சிறிதும் விளங்குவதில்லை. அதே வேளையில் திணை, துறை விளக்கங்கள் அப்பாடல்கள் வெளிப்படுத்தும் பொருள்களைக் கட்டுப்படுத்துவதும் இல்லை. திணை, துறை விளக்கங்களைத் தாண்டியும் சங்கப் பாடல் ஒன்றிற்கு வேறு பொருளைக் கற்பிக்க முடியும். குறிப்பாகப் புறநானூற்றின் திணை, துறை விளக்கங்களுக்கு இக்கருத்து மிகவும் பொருந்தும்.
துணை நூற்பட்டியல்
·கோபாலையர், தி. வே., அரணமுறுவல் ந. (ப-ர்), 2003. தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம், தமிழ்மண் பதிப்பகம், சென்னை.
·கோபாலையர், தி. வே., அரணமுறுவல் ந. (ப-ர்), 2003. தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியம், தமிழ்மண் பதிப்பகம், சென்னை.
·சஞ்சீவி, ந., டாக்டர், 1973. சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணைகள்,  சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
·சதீஷ். அ. 2008. சங்க இலக்கிய உரைகள்,  அடையாளம், திருச்சி.
·சாமிநாதையர், உ. வே., டாக்டர், (ப-ர்) 1956. எட்டுத் தொகையுள் எட்டாவதாகிய புறநானூறு மூலமும் உரையும், . . . , சென்னை.
·துரைசாமிப் பிள்ளை சு. ஔவை, (ப-ர்), 2002 (மறுபதிப்பு). புறநானூறு, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
·பாலசுப்பிரமணியம், கு. வெ. (மொ-ர்), 2009. சங்க மரபு, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.

·மருதநாயகம், ப., 2004. புதுப் பார்வைகளில் புறநானூறு, காவ்யா, சென்னை.
முனைவர் அ. செந்தில்நாராயணன் (உதவிப்பேராசிரியர்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக