ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

கீழடியை நோக்கி

                    இன்று மதுரைக்கு அருகில் உள்ள கீழடி என்னும் ஊரில் நடுவண் அரசின் தொல்பொருள் துறையினர் மேற்கொண்டுவரும் அகழாய்வுப்பணியினைக் காண எங்கள் வகுப்பு நண்பர்களுடன் சென்றிருந்தோம்.

          அகழாய்வுப்பணி நடைபெற்றுவரும் கீழடி கிராமம் பள்ளிச்சந்தைத் திடல் என்னும் பகுதி மதுரை இராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் மதுரையிலிருந்து ஏறக்குறைய 10 கி. மீ. தொலைவில் இருக்கும் சிலைமான் என்னும் ஊரிலிருந்து வலதுபுறமாகப் பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 4 கி. மி. தொலைவில் வைகையாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. இதுமதுரையிலிருந்து இராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள அழகன்குளம் என்னும் துறைமுகத்துக்குச் செல்லும் பழைய பெருவழியில் அமைந்துள்ளதாகத் தொல்லியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

          முதலில் அகழாய்வுப் பணி நடைபெற்றுவரும் பகுதிகளில் வெட்டப்பட்டுள்ள குளிகளைச் சென்று  பார்வையிட்டோம். மூன்று பகுதிகளில் ஏறக்குறைய 40 குழிகள் வெட்டப்பட்டு அகழாய்வு நடைபெற்றுவருகிறது. கறுப்பு சிவப்பு வகை பானை ஓடுகளும் (கறுப்பு சிவப்பு நிறத்தில் அமையும் பானை ஓடுகள் சங்ககாலத்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன) சுடுசெங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களும், உறை கிணறுகளும், செங்கல் தொட்டிகளும் அகழாய்ந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

          பின்னர் அகழாய்வுப்பணியில் ஈடுபட்டிருக்கும் களமேற்பார்வையாளர் திரு மணிகண்டன் அவர்கள் அகழாய்வில் கண்டெடுத்த பொருள்கள் குறித்து எங்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார். அகழாய்வில் கிடைத்த பொருள்கள்களில் இரும்பாலான ஈட்டி முனைகளும், அம்பு முனைகளும், எலும்பாலான அம்பு முனைகளும், செம்பாலான கண்ணுக்கு மை தீட்டும் கம்பியும், தந்தத்திலான தாயக்கட்டையும், சதுரங்கக் காய்களும், கார்னீலியன் வகை கல்மணிகளும், சுடுமண் மணிகளும், காதணிகளும், சங்கு வளையல்களும் குறிப்பாகச் சங்க கால பாண்டியர் வெளியிட்ட சதுர வடிவ செப்புக்காசும் என ஒவ்வொன்றையும் அவர் குறிப்பிட்டுக் காட்டினார். தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட சில மட்பாண்ட ஓடுகளும் கிடைத்திருப்பதாக அவர் தெறிவித்தார். அகழாய்வில் கண்டடைந்துள்ள சங்க கால வாழ்விடங்களுள் இது முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.  

          தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை எடுத்துரைக்கும் விதமாக வைகை நதியோரம் அமைந்திருந்த சங்ககால குடியிருப்புப் பகுதி ஒன்றினை நேரில் பார்த்த மகிழ்ச்சியுடன் அவ்விடத்தினை விட்டுப் புறப்பட்டோம்.  இந்த நாள் எங்களுக்கு மிகவும் அருமையான அனுபவத்தினை வழங்கியுள்ளது.

          அனுமதியளித்த கல்லூரி முதல்வருக்கும் மற்றும் தமிழ்த்துறைத்தலைவருக்கும் உடன்வந்து வழிநடத்திய எங்கள் துறை ஆசிரியர்கள் முனைவர் அ. செந்தில்நாராயணன் பேரா. து. முத்துக்குமார் ஆகியோருக்கும் விளக்கமளித்த திரு மணிகண்டன் அவர்களுக்கும் எங்கள் நன்றி. 
- வை. பவித்ரா, ச. யோகலெட்சுமி ,
         
மா. செல்லப்பாண்டி & இரா. முத்துக்கிருட்டிணன்
(இளங்கலைத் தமிழ், மூன்றாம் ஆண்டு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக