திங்கள், 28 டிசம்பர், 2015

கொரியஇளவரசியும் இரட்டை மீன் சின்னமும்

            கொரிய இளவரசி ஆயியுக்தா பாண்டிநாட்டு இளவரசியா? அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா? இக்கேள்வியை முன்வைத்தே ஆய்வுக்கட்டுரை செல்கிறது. பாண்டி நாட்டு இளவரசி எனில்   அவள் கடல் கடந்து எவ்வாறு கொரியா சென்றிருக்கமுடியும்? இதற்கான விடையாகப் பாண்டிய அரசர்களில் கடற்பயணம் மேற்கொண்டவரையும் அதற்கான காரணத்தையும் அறிய வேண்டியது அவசியமாகிறது.
பாண்டிய மன்னர்களின் கடல் கடந்த பயணங்கள் ஏன்?
            நகரங்களைக் கொள்ளையிடுவதற்கு கி.பி. 835ல் முதல் வரகுண பாண்டியன் இறந்த பின்னர் முடிசூடிக்கொண்ட அவன் மகன் சீமாறன் சீவல்லபன் கடல்கடந்து இலங்கை சென்று குண்ணூர், சிங்களம். விழிஞம் எனும் இடங்களில் போர்நிகழ்த்தி வாகைசூடியுள்ளான். “ஈழநாட்டில் முதல் சேனன் (கிபி 822 _ 842) ஆட்சி புரிந்த காலத்தில் படையெடுத்துச் சென்று நகரங்களைக் கொள்ளையிட்டு, புத்த விகாரங்களின் பொற்படிமங்களையும் விலையுயர்ந்த பிற பொருட்களையும் கைப்பற்றி வந்தான். ஆதனால் சிங்களதேசம் தன் செல்வமெல்லாம் இழந்து சிறுமையுற்றது என்று மகாவம்சம் என்னும் இலங்கை வரலாறு கூறுகிறது.  சிங்கள மன்னன் பாண்டியனுடன் தோற்று மலேயாவிற்கு ஓடிவிட்டான் என்ற குறிப்பும் இடம் பெறுகிறது. சின்னமனுhர் செப்பேடுகள் “குரைகடல் ஈழங்கொண்டும்”1 என்று குறித்ததனால் அறியப்படுகிறது.
கடல் கடந்து வந்த படை உதவி
            கிபி 910ல் பராந்தகச் சோழனை எதிர்க்க இலங்கை மன்னன் ஐந்தாம் காசிபனைத் தனக்குத் துணைப்படை அனுப்புமாறு இராசசிம்ம பாண்டியன் கேட்டுக் கொண்டான் அவனுக்கு உதவ இலங்கையிலிருந்து கடல் கடந்து  படைவந்து சேர்ந்தது. அப்படையுடன் பாண்டிய நாட்டுப்படையும் சேர்ந்து வெள்ளுர் என்னுமிடத்தில் பெரும் போரை நிகழ்த்தி அதில் தோல்வியையே தழுவினான் பாண்டிய மன்னன். “நாடிழந்த இராசநிம்ம பாண்டியன் கடல் கடந்து சிங்களம் சென்று அந்நாட்டுமன்னன் உதவியைப் பெரும் பொருட்டு அங்கு தங்கினான் என்று சின்னமனூர் செப்பேடுகள்”2  குறிப்படுகின்றன.
அடைக்கலம் தேடிய கடற்பயணம்
            முதலாம் ராசாதி ராச சோழனிடம் விக்கிரம பாண்டியன் தோல்வியுற்று அடைகலந்தேடி ஈழநாட்டிற்கு ஓடிவிட்டான் கி.பி.1030களில் இது நிகழ்ந்திருக்கக் கூடும் என்று “ராசாதி ராச சோழனின் திருக்களர்ச் செப்பேட்டில்”3  குறிக்கப்பட்டுள்ளது.
கடல் கடந்து வந்த படையெடுப்பு
            கி.பி 1167ல் குலசேகரப்பாண்டியன், ராசாதி ராச சோழனின் உதவியுடன் இலங்கையை எதிர்த்தான். சிங்களப்படைக்கும் சோழப்படைக்கும் தொண்டி, பாசிப்பட்டிணம்  ஊர்களில் பெறும் போர் நிகழ இலங்காபுரித் தண்டநாயகனும், சாத்விஐய தண்ட நாயகனுமாகிய சிங்களப்படைத்தளபதியரே வென்றுள்ளனர்.
            பின்னர் ராசாதி ராசன் படைத் தலைவன் திருச்சிற்றம்பலமுடையான் சிங்களப்படைத்தலைவர் இருவரையும் கொன்று மதுரைக் கோட்டையில் யாவரும் காணும்படித் தலைகளை வைத்துள்ளனர். “இச் செய்தி பல்லவராயன் பேட்டைக் கல்வெட்டு” 4  காட்டிநிற்கிறது.
தோற்றோடிய கடற்பயணம்
            கி.பி. 1180ல் கடையவர்மன் வீரபாண்டியனுக்கு உதவ வந்த ஈழ நாட்டுப்படைகள் தோல்வியுற்று இலங்கைக்கு ஓடிவிட்டன எனும் செய்தி “திருக் கொள்ளம் புதூர்க் கல்வெட்டு”5  காட்டிநிற்கிறது.
 கடல்கடந்த பாண்டியனின் வெற்றி
            “கி.பி 1252ல் பாண்டிய அரசன்  சுந்தர பாண்டியன்  இலங்கையரசனை வென்று அவன்பால் யானைகளையும் பலவகை மணிகளையும் கப்பமாகப் பெற்றான்”6   
ஈழ நாட்டில் கயற்கொடி பொறித்த பாண்டியன்
            கி.பி 1252_1260 சடையவர்மன் வீரபாண்டியனின் மெய்கீர்த்தியில் “திருமகள் வளர்” என்று தொடங்கும் அதில் “கொங்கீழங் கொண்டு”7   எனக் குறிக்கப்பட்டுள்ளது. இம்மெய்க்கீர்த்தியால் இவன் ஈழ நாட்டில் போர்புரிந்து அந்நாட்டரசருள் ஒருவனைக் கொன்று மற்றொருவனுக்கு முடி சூட்டியதும்  திருகோணமலை. திரிகூடகிரி என்பன வற்றில்கயற் கொடிபொறித்ததும் தெரியவருகிறது. 
            இவ்வாறு பல்வேறு காரணங்களுக்காகப் பாண்டிய மன்னர்கள் கடந்து சென்றுள்ளனர் இவர்களுடன் அம்மன்னர் தம் மகள் ஒருத்தி கடல் கடந்து சென்றிருக்க வாய்ப்புண்டா?
            அன்றியும், “பாண்டிய நாட்டின் கொற்கைத் துறைமுகத்தில் யவன நாட்டு மீகாமன்களும், அராபிய நாட்டுக் குதிரை வணிகர்களும். முத்துக்கொழிக்குத் நாடெனக் குழுமிய வணிகர்களும், எகிப்தியரும,; கிரேக்கரும், உரோமரும் நடனமாடிய காட்சியை”8  ஆய்வாளர்கள் சுட்டியுள்ளனர் இவ்வாறு வந்த அந்நிய நாட்டு ஆடவர் எவருடனுடனாவது காதல் வயப்பட்டுப் பாண்டிய இளவரசி சென்றிருக்கக் கூடுமோடூ பின்னர் அவ்வந்நியதேசங்கள் ஏதாகினும் ஒன்றி[லிருந்து கடல் மார்க்கத்தே கொரியா சென்றிருக்க வழியுண்டோ?
உலக வரலாற்றுப் பயண இலக்கியப் பதிவாளர்கள் கோணத்திலும் ஆராய வேண்டியுள்ளது.
            கூன் பாண்டியன்,   நின்றசீர் நெடுமாறன், சுந்தரபாண்டியன் எனும் பெயர்கள் கொண்ட பாண்டிய மன்னன் காலத்தில் சீனப்பயணி யுவான்சுவாங் தமிழகம் வந்துள்ளார். தன் வரலாற்றுக் குறிப்பில் “பாண்டிய நாட்டில் முத்தும் உப்பும் மிகுதியாக கிடைக்கின்றன. பக்கத்துத் தீவுகளிற் கிடைக்கும் முத்துக்களும் இங்கு கொண்டவரப்படுகின்றன. இந்நாட்டில் வேறு விளை பொருட்கள் மிகுதியாக இல்லை. இங்கு வெப்பம் மிகுந்துள்ளது. இங்குள்ள மக்கள் எல்லாரும் கருத்தமேனியுடையவர்களாகவும் மன உறுதியும் போர் வலிமையும் மிக்கவர்களாகவும் இருக்கின்றனர்”9   என்று குறிப்பிட்டள்ளார்.
            இங்கு இருகுறிப்புகள் இடம்பெற்றுள்ளமையை உற்று நோக்குதல் அவசியம். ஓன்று ’பக்கத்துத் தீவுகளிற் கிடைக்கும் முத்துக்கள்’ என்றதனால்துறைமுகம் மட்டுமல்லாது பல்வேறு பக்;கத்துத்தீவுகள் வழியாகவும் கடற்மார்க்கத்தில் செல்லுதற்கு வழியுமுண்டு. அவற்றில் பாண்டிய நாட்டிற்கும் கொரியாவிற்குமான கடல் வழிப்பயணத்தின் சாத்தியக் கூறுகள் எந்தத்தீவிலிருந்து நிகழ்ந்திருக்க முடியும் என்ற கோணத்திலும் ஆராயலாம்.  இவ்விடத்தில் கடற்பயண ஆய்வாளர் ஒரிசாபாலு அவர்கள் தமிழகத்தை குறிப்பாக பாண்டி நாட்டுப் பதியில் உள்ள தீவுகளில் இருந்து ஒரு கடலாய்வை நிகழ்த்தினால் தடம் தெரிய வாய்ப்புண்டு என இவ்வாய்வை உள்வாங்கிய இக்கட்டுரை  ஆசிரியரின் பரிந்துரையாக இக்கருத்து அமைகிறது.
            மற்றொரு குறிப்பு மக்கள் எல்லாரும் மன உறுதியும் போர் வலிமையும் மிக்கவர்களாக இருக்கின்றனர் என்பது. மனவலிமையும் உடல்வலிமையும் உள்ள ஒரு பெண்ணாலேயே கடற்பயணம்  சாத்தியமாயிருக்க முடியும்.
மெகஸ்தனிஸ் என்பவர் எழுதிய கிரேக்க ரோமானியக்குறிப்புகள்
            முதன் முதலில் தமிழகத்தை நேரடியாகக் குறிப்பிடுகின்றன.  அவர் எழுதியுள்ள குறிப்பு விசித்திரக் கவர்ச்சி மிக்கதாக உள்ளது. பாண்டிய அரசி “பண்டையா” என்பவள் ஹெராக்லிஸ் எனும்  கிரேக்கமன்னனின் மகள் என்கிறிர். “பாண்டி நாட்டை ஹெராக்லிஸ் என்பவருடைய மகள் பண்டையா என்பவள் ஆண்டுவந்தாள் என்றும் அவளுக்கு ஹெராக்லிஸ் இந்தியாவின் தென்பகுதியில் கடல் வரையில் பரவியிருந்த நாட்டை அளித்தார் என்றும் அந்த நாடு365 கிராமங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது என்றும், ஒரு நாளைக்கு ஒரு கிராமம் என்ற கணக்கில் கிராமங்கள் அவளுக்குக் கப்பம் கட்ட வேண்டும் என்றும் அவ்வாறுகட்டத் தவறிய கிராமங்களின் கப்பத்தை வசூல் செய்வதற்கு மற்ற கிராமங்கள் உதவ வேண்டும்”10  என்றும் எழுதியுள்ளார். கிரேக்க மன்னர் மகள் அங்கிருந்தபடியே இங்கு ஆட்சி நடத்தினாள் என்றிலும் எப்போதாகிலும்  ஒரு முறை அவளோ அவளது வாரிசுகளோ பாண்டிய நாடு வந்திருக்க வாய்ப்பு உண்டா? எனயூகித்தாலும் அவ்வகையில் அவ்விளவரசி கொரியாவிற்குச் சென்றிருக்க வாய்ப்புள்ளதல்லவா?
    பாண்டிநாட்டு எல்லை தற்போது சோழ நாட்டுப்பகுதி எனக் கூறப்படும் காவிரி ஆறு வரை இருந்தது என்ற குறிப்பும்; கிடைக்கப் பெற்றுள்ளது. “தெற்கில் பல்லவர்களும் பாண்டியர்களும் தமிழகத்தைப் பங்கிட்டுக்  கொண்டு ஆட்சி நடத்தினார்கள். அவர்களுக்குள் அடிக்கடி சண்டை நடந்து கொண்டிருந்ததால் அவர்களுடைய ராஐ;ய எல்லைகள் அடிக்கடி மாறிக் கொண்டிருந்தன. ஆனால்  அந்த நாடுகளுக்கிடையே காவிரியாறு எல்லையாக இருந்தது.” 11  என்பதுவே அது. 
            எனவே காவிரியாற்று வரை எல்லையாக இருந்ததனால் காவிரியாறு கடலில் கலக்கும் ப]ம்புகார் நகரத்தின் வழியாக காவிரிப்ப]ம்பட்டினத்துறைமுகம் வழியாக, சோழ நாட்டுத் துறைமுகம் வழியாகவும் கடற்பயணம்’ மேற்கொள்ள ஒரு வழியும் இருந்திருக்கின்றது..
            “பாண்டிநாட்;டின் தலைநகராய், துறைமுகமாய் கடலைத் தொட்டுக் கொண்டிருந்த கொற்கை நகரம் இப்போது கடலிலிருந்து ஒருமைல் தூரத்தில் உள்நாட்டுப் பகுதியில் அமைந்துள்ளது.  ஓஃபிர் அல்லது உவரி இவ்வூரின் ஒரு பகுதி இப்போதும் இதே பெயாpல் இங்கிருக்கும் மீனவர் கிராமத்தில் மணல் மேடுகள் உள்ளன.  இம்மணல் மேடுகள் ஒருகாலத்தில் தங்கச் சுரங்கங்களாய் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. மழைபெய்த பின்னர் கிராமவாசிகள் அங்கு சென்று தங்கப் பொடியை பொறுக்குகின்றனர்”12   என்கிறிர்.  கடல் பயண ஆய்வாளர் நரசய்யர்.
            அக்கால உவரியில் கடற்சுரங்கத்தில் தங்கம்  வெட்டும் பணிக்குவந்த அல்லது கடல்வழியாகத் தங்க வணிகம் செய்ய வந்தவர்களுடன் நட்புகாரணமாகவோ உறவை ஏற்படுத்திக் கொண்டோ சென்ற தமிழச்சி பின்னாளில் கொரிய இளவரசியாகவும் ஆகியிருக்கலாம் தானே?
            பண்டைய தமிழகத்தின் மிக நீண்ட கடற்கரையும் அதன் பரந்து விரிந்த பரப்பும்,தமிழகப் பரதவர்களின் கடலோடும் தன்மையும், பண்டைய தமிழகத்தின் அரசியல், சமூக, பொருளாதாரச் சூழ்நிலையும் தமிழகக் கடல்வணிகம் பழங்காலம் தொட்டு நடைபெற முக்கிய காரணியாகத் திகழ்ந்துள்ளது. என்பது மறுக்கவியலாத உண்மை.
            இவையெல்லாம் யூகங்களே எனக் கொண்டாலும் இலங்கையின் மகாவம்சம் காணும் செய்தி பாண்டியப் பெண் கடல் கடந்து சென்றிருக்கிறிள் என்பதை நமக்கு முற்றிதாரமாகத் தந்து நிற்கிறது. ‘புத்தரின்நிர்வாண காலமாகிய கி.மு 478ல் இலங்கையின் முதல் தமிழ் வேந்தனாம் விசயனென்பான், ஒரு பாண்டியர் குலப்பெண்மணியை மணந்தனனென்றும், ஆண்டு தோறும் தன் மாமனாகிய பாண்டியற்குச் சிறந்த பரிசில் அனுப்பினனென்றும் கூறுகிறது”13 
            தற்போதையத் தமிழகத்து அகழ்வாய்வின் கண்டு பிடிப்புகளாக மதுரை கீழடியில் இந்தியத் தொல்பொருள் துறை ஆய்வு செய்து வருகிறது. அதில் வாணிபத் துறைமுக நகரமாக அப்பகுதி இருந்திருக்க வாய்ப்புண்டு என்றும், வைகை நதிக் கடலோடும் பாதையாக அழகன் குளம் திகழ்ந்திருக்கும் என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதனைப் பற்றி தற்காலத்து எழுத்தாளரான சு. வெங்கடேசன் “பழம்நூற்களில் குறிப்பிடப்படுகிற இரண்டு பெண்கள் கப்பலில் பயணம் செய்திருப்பதற்கான வாய்ப்புகள் இருந்துள்ளதாகக் கருதலாம். இலங்கையின் வரலாற்றைக் கூறும் “மகாவம்சம்  இலங்கையை முதன்முதலாக ஆட்சி செய்த  மன்னன் விஐயன் பாண்டிய அரசனின் மகளை மணந்தான் எனக் கூறுகிறது. அசோகப் பேரரசன், இலங்கை மன்னன் தீசனுக்கு அனுப்பி வைத்த பட்டாபிசேக அன்பளிப்புப் பொருட்கள் பற்றி வம்சத்த பாஹாசினி என்ற பாலி மொழி நூல் விரிவான செய்திகளைப் பதிவு செய்கிறது. அதில் ஒரு சாமரை,ஓர் அரச சின்னம், ஒரு வாள், நிழற்குடை, சிவந்த புற்று மண், கங்கையின் புனித நீர், தங்கத் தாம்பாளங்கள் திரைபோட்ட அரச கட்டில், புனித ஒலியைத் தரும் மங்கலகரமான வெண்சங்கு, அன்று மலர்ந்த செந்தாமரைப் போல இளமை இதழ்விரியும் கன்னிகை ஒருத்தி…” என அந்தப்பட்டியல் நீள்கிறது.
            பேரரசன் அசோகனால் அனுப்பப்பட்டவர்களும் பாண்டிய நாட்டின் கடற்கரை வழியாகத் தான் இலங்கைக்கு போயிருக்க முடியும், எனவே அசோகனால் அனுப்பப்பட்ட அந்தப் பெண்ணும். மணம் முடித்து அனுப்பப்பட்ட பாண்டியனின் மகளுந்தான் தமிழகத்தின் துறையில் இருந்து கடல் தாண்டிக் கப்பலில் பயணம் செய்ததாக இலக்கியக் குறிப்புகளிலிருந்து நாம் அனுமானிக்கலாம.;வேறு எந்தப் பெண்ணும் கப்பலில் பயணம் செய்திருக்க வாய்ப்பு இல்லை.”14  என்ற கருத்தையும் இணைத்துக் காண வேண்டியுள்ளது. 
இரட்டை மீன்சின்னம்
            பாண்டிய மன்னர்கள் தமது சின்னமாக இரட்டை மீன்களைத் தேர்வு செய்தனர் மன்னர் ஆட்சிக் காலத்தில் இருந்து தற்போதைய மக்களாட்சிக் காலம் வரை இந்த “.இரட்டை மீன்”15   குறியீட்டுப் பயன்பாடு மக்களிடம் நடைமுறையில் உள்ளதையும் அறியலாம்.
கல்வெட்டில் மீன் சின்னம்
            பாண்டியர் இலச்சினையான இருகயல் செண்டுடன் கூடிய கல்வெட்டு “திருவண்ணா
மலையில் காணப்படுகிறது. இதன் காலம் கி.பி 13ம் நூற்றாண்டு”16    என்கின்றனர்
காசில், நாணயங்களில் மீன் சின்னம்
சங்க காலப் பாண்டியர் காசுகளில் பாண்டியரது குலச் சின்னமான மீன் பல்வேறு  நிலைகளில் பொறிக்கப்பட்டுள்ளது.
“காசு 1) பின்பக்கத்தில் ஒற்றைமீன் மட்டும் பொறிக்கப்பட்டுள்ளது.
காசு 2) பின்பக்கத்தில் வேலியிட்ட மரமும் பக்கத்தில் மீன்குறியிட்டுச் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளது.
காசு 3 காசின் பின்புறம் மீன் குறியீட்டுச் சின்னம் உள்ளது. இந்தக் காசின் காலம் கி.மு. 2ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வெளியீட்டு இருக்க வேண்டும்”17    
இவ்வாறு சங்ககாலப் பாண்டியர் கால நாணயங்களில் குறிக்கப்படுவது. தனி மீன் சின்னமாகவே உள்ளது. 
மதுரை நாயக்கர் காசுகளில் இரட்டை மீன் சின்னம்
            மதுரை நாயக்கர் காசுகளில் விஸ்வநாத நாயக்கர் வெளியிட்டப்பட்ட(கி.பி 1529_ 1564) காசில் தான் இரட்டை மீன் சின்னம் நடுவில் செண்டுடன் காணப்படுகிறது. “காசு 1. காசின் முன்பக்கத்தில் மனித உருவமும்  பின்பக்கத்தில் இரண்டு மீன்கள் நடுவில் செண்டும் மேலே பிறையும் காணப்படுகின்றன. காசின் விளிம்பைச் சுற்றிலும் விஸ்வநாதன் என்ற தமிழ் பெயரில் ‘ ஸ் வ’ என்ற கூட்டெழுத்து மட்டும் கிரந்த எழுத்தில் உள்ளது”18.  
பிற்காலச் சோழர்களின்காசுகளில் மீன் சின்னம்
            பிற்காலச் சோழர்களின் காசுகளிலும் இரட்டை மீன் சின்னம் உள்ளது வியப்பளிப்பதாக உள்ளது. கி.பி. 985 _ 1014ம் நூற்றாண்டில் கிடைத்த ஐந்து காசுகளில் மூன்றில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.
            “காசு 3 ல் முன்பக்கத்தில் நடுவில் ஓருமீனும் இடது நோக்கி அமர்ந்திருக்கும்  புலியும் காணப்படுகிறது.
            காசு 4ல் முன்பக்கத்தில் வில்லும்  வலது பக்கத்தில் புலி இரண்டு மீன்கள், பொறிக்கப்பட்டுள்ளது.
            காசு 5ல் முன்பக்கத்தின் நடுப்பகுதியில் விளக்கு. புலி இரண்டு மீன்கள் வெண் கொற்றக் குடை இரண்டு வெண் சாமரங்கள் உள்ளன.”19  
            இங்கு சோழர்களின் நாணயங்களில் மீன் சின்னம் இடம் பெற்றிருப்பது அவர்களிடையே இருந்த நட்புரிமை காரணமாக இருக்கக்கூடும்.
பிற்காலப் பாண்டியர்கள் காசுகளில் மீன் சின்னம்
            பனிரெண்டாம் நூற்றாண்டு என்று கருதப்படும். பிற்காலப் பாண்டியர்களின் காசுகளில் “காசின் முன்பக்கத்தில் செங்குத்தாக மீன்களும் நடுவில் செண்டு ஒன்றும் மேலே பிறை ஒன்றும் உள்ளது. பின் பக்கத்தில் சுந்தர பாண்டியன்”20 என்று மூன்று வரிகளில் தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது. 
            இக்காசில் உள்ள சின்னம் போன்றே நாயக்கர் காலக் காசுகளில் இடம் பெற்றிருப்பதால் பாண்டியர்க்குப் பின் அரச பரிபாலனைக்கு வந்த நாயக்கர்கள் பாண்டியர் மரபை அப்படியே தொடர்ந்திருக்கக் கூடும்.
கோயில்களில் பாண்டியரின் மீன் சின்னம்
            தமிழகத்தில் உள்ள “சிதம்பரம் கோயிலின் தெற்கு கோபுரத்தில் இரட்டை மீன் சின்னம் நடுவில் செண்டுடன் பொறிக்கப்பட்டுள்ளது.”21  பாண்டியர் இலச்சினை என்பதாகவே தரப்பட்டுள்ளது.
பாண்டியர்களின் கொடியும் முத்திரையும் மீனே
            பாண்டியர்கள் மீன் கொடியையும் முத்திரையும் தேர்வு செய்ததற்குத் தொன்மமாக
             தசாவதார மச்சாவதரத்தைச்; சுட்டுவர். இதற்கான இலக்கியத்தரவு ஏதுமில்லை. மீனைத் தேர்வு செய்ததற்கு “மீனின் இயற்கையாக அமைந்த அரிய உறுப்பின் மாட்சியை வைத்தே மீனைச் சின்னமாக ஏற்றனர் எனத் தெரிகிறது.மீன் குஞ்சுகள் தாய்மீனின் அண்மையில் நின்று இரைதேடும். தாய்மீனோ எப்போதும் தன் குஞ்சுகள் மீது கண்வைத்து நிற்கும், அரசனும் மக்களை அவ்வாறு காப்பான் என்றே மீனைத் தேர்வு செய்தனர்”22 என்றும் கருதப்படுகிறது.  
            மேலும் மீன் சின்னம் ஒற்றை மீனா இரட்டை மீன்களா என்ற கேள்வியும் வலுப்பெறுகிறது. முற்காலப் பாண்டியர் பதிவுகளாக ஒற்றை மீனையும், பிற்காலப் பாண்டியர் பதிவுகளாக இரட்டை மீன்களையும் கொண்டிருந்தனர் என்று கல்வெட்டுகளிலும் நாணயங்களில் கிடைக்கப் பெறும் காலத்தின் பதிவிற்கேற்ப கருதவும் முடிகிறது.
            இந்த இரட்டை மீன் சின்னத்தை உலகின் வேறு எங்கும் பயன்படுத்தியுள்ளனரா, பாண்டியர் மட்டும் தான் பயன்படுத்தினரா எனக் கேட்டால் “கிறித்துவின் முன்னுள்ள ஆபிரகாமின்  வழித் தோன்றல்கள் புதைக்கப்பட்ட கல்லறைகளில் இரு மீன்களின் உருவம் தீட்டப்பெற்றிருக்கிறது. கி.பி 200ம் ஆண்டிலுள்ள இலினிசியா அமியா என்பவரின் கல்லறை மீது இரு மீன்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு உள்ளது”23 
            இருப்பினும்  “இளவரசன் சடவர்மன் வீர பாண்டியன் _II ஈழ நாட்டை வென்று இலங்கை மன்னனைக் கொன்று அவன்  படையையும், தேரையும் கருவூலங்களையும் அரசக் கட்டிலையும், மணி முடியையும். செங்கோலையும், கருத்து மாலைகளையும் பிறவற்றையும் கவர்ந்து கொண்டு தனது இரட்டைமீன் பொறித்த மீன் கொடியைத் திரிகோண மலையில் பொறித்தான்” என்று குறிப்புள்ளதும், சங்க இலக்கியமான கலித்தொகையிலும்.
            “புலியொடு வில் நீக்கி புகழ் பொறித்த கிளர்கெண்டை வல்லினான் வணங்கிய வாடர்ச் சீர்த் தென்னவன்”24 அவை கெண்டை மீன்கள் என்பனவும் அறிய வருகின்றன.
            “பாண்டியன் வடஇந்தியாவை வென்று இமயத்தின் மீது குடையை நாட்டினான், இணைக்கயல்கள் தீரட்டிய கொடியைப் பொறித்தான் என்றும்தமிழ்ப்புலவர்கள் மன்னர்களும் புகழ் மாலை கூட்டுவது உண்டு.  அந்தப் பாக்களில் எல்லாம் இணைக் கயல்கள் என்றே  குறிக்கப்பட்டுள்ளன.  மேலும் வரலாற்று ஆராய்ச்சிப் பேரறிஞர் ஈராசு அடிகளாரும் தம் ஆய்வுக் கண் கொண்டு ஆராய்ந்து பாண்டியர்களின் சின்னம் இரு மீன்களே என்று கூறியுள்ளனர்.”25    என்றதனாலும் பாண்டியர்கள் தம் கொடியில் இருமீன்கள் பொறித்திருப்பது தௌpவாகிறது.
            கடல்கோளுக்கு முந்தைய பாண்டிய நகரமாயின் வைகை நதிக் கடலோடும் பாதையான இப்பகுதி வழியாவும் சென்றிருக்கக்கூடும்

இது காறும்கண்டவற்றில் பின்வரும் முடிவுகள் பெறப்படுகின்றன.
1.       கொரிய இளவரசி பாண்டிய நாட்டு இளவரசியாயின் அவள் கடந்து               செல்லுதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டன.
2.       நகரங்களைக் கொள்ளையிடுதல், அடைக்கலந்தேடுதல்,  படை உதவி,          வெற்றிக் கொடி நாட்டல் எனப் பல்வேறு காரணங்களுக்காகப்          பாண்டிய மன்னர் கடல்கடந்து சென்றனர் அவர்தம் புதல்வியாகப் போக             வாய்ப்புண்டு
3.       கொற்கைத் துறைமுகத்திலிருந்து வந்த பல்வேறு நாட்டு மிகாமன்,      வணிகர்கள் இவர்களுள் யார் மீதேனும் காதல் வயப்பட்டுச் சென்றிருக்கக்    கூடும்.
4.       இலங்கைக்கு மணமுடித்துக் கொடுத்த பாண்டியனின் மகளினது வாரிசுகள் கொரியாவிற்குச் சென்றிருக்க வாய்ப்புகள் மிகுதி.  கடல்வழிப்பாதை மிக     எளிது.
5.       மெகஸ்தனிஸ் குறிப்பின் வழி கிரேக்க மன்னனின் மகளும் பாண்டிய            அரசியுமாக நியமிக்கப்பட்ட “பண்டையா” என்பவளின் வாரிசுகளாக இருந்து             பாண்டிய நாட்டில் சுற்றுலா வாழ்க்கைமுறை  கைவரப்பெற்று பின் சென்றவள்          ஒருத்தி கொரிய இளவரசியாக ஆட்சி புரிந்திருக்கக் கூடும்.
6.       பாண்டியர்தம் எல்லை காவிரியாறு வரை இருந்துள்ளதனால் சோழ நாட்டுத்      துறைமுகம் வழியாகவும் சென்றிருக்க வாய்ப்புண்டு.
7.       கடல் கோளுக்கு முன்பிருந்த பாண்டிய நகரமாயின் வைகை நதிக் கடலோடும்      பாதையான அழகன் குளம் வழியாகவும் சென்றிருக்கக் கூடும்.
8.       பாண்டியர்கள் தம் கொடியில் இருமீன்கள் பொறித்திருப்பது தெளிவாகிறது.            அதிலும் இரு கண்கள் காணப்படவேண்டும் என்றும் அத்துடன் மீன்கள்     செங்குத்தாய் நிற்பது போல தீட்டப்பட்டிருப்பது பாண்டிய நாட்டின்         வலிமையையும் உறுதியையும் காட்டிநிற்கிறது.
9.       பாண்டிய மன்னர்களின்  சொந்த முத்திரையில் செங்குத்தாய் நிற்கும் இரு     மீன்கள் பொறிக்கப் பட்டு உள்ளதே தெளிவு. 
10.    கொரிய இளவரசியோடு இணைக்கப்பட்டுள்ள இரட்டை மீன் சின்னத்தில்   மீன்கள் செங்குத்தாய் இருப்பின், அவையும் கெண்டைமீன்களாக இருப்பின்        அது பாண்டியர்; மீன் சின்னம் தான் என உறுதியாகக் கொள்ள முடியும்.

அடிக்குறிப்புகள் & துணைபுரிந்த நூல்கள் 
1.       பாண்டியர் வரலாறு. - தி. வை சதாசிவப் பண்டாரத்தார்            (பழையநூல் பதிப்பு விவரங்கள்,   கிடைக்கப்பெறவில்லை)
2.       மேலது பக்கம் 81
3.       மேலது பக்கம் 90
4.       மேலது பக்கம் 98
5.       மேலது பக்கம் 101
6.       மேலது பக்கம் 129
7.       மேலது பக்கம் 135
8.       கோநகர் கொற்கை _ பக்கம் - எiii அ. இராகவன், (கலை           நூற்பதிப்பகம்      பாளையங்கோட்டை, திருநெல்வேலி _ 1971. 
9.       பாண்டியர் வரலாறு _ பக்கம் - 41
10.    தென்னிந்திய வரலாறு _ பக்கம் - 42 (வரலாற்றுக்கு       முற்பட்டகாலம் முதல்      விஐய நகரப் பேரரசின்   வீழ்ச்சி         வரை  முதற்பகுதி  _ கே ஏ.நீலகண்ட        சாஸ்திரி. தமிழ்நாட்டுப்      பாடநூல் நிறுவனம்,முதற்பதிப்பு ஜூலை 1973)
11.    தென்னிந்திய வரலாறு _ பக்கம் - 7 (கே ஏ நீலகண்ட சாஸ்திரி.             தமிழாக்கம், மு.ரா பெருமாள், முதலியார்  தமிழ்நாட்டுப்             பாடநூல்        நிறுவனம்   ஜூலை 1973)
12.    கடல்வழிவணிகம் _ பக்கம்- 63;. இணையம் வழியாகப் பெற்ற            தகவல்
13.    பாண்டியர் வரலாறு _ பக்கம் - 3
14.    ஆனந்த விகடன் தமிழ்வார இதழ் 9.9.2015.(வைகை நதி          நாகரிகம்        (மதுரை மண்ணுக்குள்ளே… ரகசியங்கள் ஆதி நிலம்)             சு. வெஙகடேசன்
15.    சுடிதார் அச்சில் இரட்டை மீன் சின்னம்
16.    தமிழ்நாட்டு வரலாறு _ பாண்டியப் பெருவேந்தர் காலம் பின்   அட்டை தமிழ்           வளர்ச்சி இயக்ககம் தமிழக அரசு   சென்னை   2000.
17.    தமிழ்காசுகள் பக்கம் - 3 (சங்க காலம் முதல் ஆங்கிலேயர் காலம் வரை)          ஆறுமுக சீதாராமன் தனலெட்சுமி பதிப்பகம், தஞ்சாவூர் 2005
18.    மேலது பக்கம் 23
19.    மேலது பக்கம் 12 $ 13
20.    மேலது பக்கம் 15
21.    பாண்டிய வரலாறு _ பக்கம் 8 தி. வை சதாசிவப் பண்டாரத்தாh 
22.    கோநகர் கொற்கை _ பக்கம் - 130  அ. இராகவன் (கலை நூற்பதிப்பகம்      பாளையங்கோட்டை,  திருநெல்வேலி 1971.)
23.    மேலது பக்கம் 23
24.    கலித்தொகை 104 – 3 $ 4 வரி
25.    கோநகர் கொற்கை_ பக்கம் 139.

-       முனைவர் இராம.மலர்விழி மங்கையர்க்கரசி


செவ்வாய், 27 அக்டோபர், 2015

புறநானூற்றுப் புலவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சொற்கள் குறித்த தேடல்


சங்க இலக்கியங்களை முன்வைத்து இன்று தமிழ்மொழியின் தொன்மை உலக அரங்கில் நிறுவப்பட்டுள்ளது. தொகுப்புப் பிரதிகளான அவ்விலக்கியங்கள் காலந்தோறும் பல்வேறு விதமான வாசிப்புகளை வேண்டி நிற்கின்றன. பெரும்பாலான வாசிப்புகள் அவற்றின் தனித்தன்மையை உணர்த்துவனவாகவும் நிலைபேற்றை மதிப்பிடுவனவாகவும் அமைந்துள்ளன. அவற்றுள்ளும் புறநானூற்றின் வாசிப்பும் அதன் மீதான ஆய்வுகளும் தனித்த கவனத்தைப் பெறுகின்றன. மு. இராகவையங் காரின் வீரத்தாய்மார் தொடங்கி க.கைலாசபதியின் ‘தமிழ் வீரநிலைக்கவிதை’ வரை புறநானூறு தமிழ்பேசும் மக்கள் கூட்டத்தின் வீர வாழ்வை, உணர்வை வெளிப்படுத்தும் இலக்கியமாக மதிக்கப்பட்டுப் போற்றப்பட்டு வந்துள்ளது. உண்மையில் அக இலக்கியங்களைவிட புறஇலக்கியங்களே மனித வாழ்க்கையின் யதார்த்தத்துடன் மிக நெருக்கமாக உள்ளன. இது குறித்துத் தமிழண்ணல் கூறியுள்ள கருத்து கவனத்திற்குரியது.
புறம் பாடிய புலவர்கள் தம் வாழ்வில் நிகழ்ந்த உண்மையான நிகழ்ச்சி களையே பெரும்பாலும் எடுத்துரைக்கின்றனர். எனவே புறப்பாடல்கள் புலவர்களின் உள்ளத்திலிருந்து  இயல்பாகப் பீறிட்டெழுந்த வலிமைமிக்க உணர்ச்சிகளாகும். அவை புலவர்கள் தம் சொந்த வாழ்வில் அனுபவித்த இன்பதுன்பங்களின் வலிமைமிக்க வெளிப்பாடுகளாகும். இத்தகைய வெளிப் பாட்டில் அகப்பாடல்களைக் காட்டிலும் ஒரு குறிப்பிட்ட அளவு வீரியமும் உணர்ச்சியும் மிக்க வகையில் புறப்பாடல்களைப் பாடியுள்ளனர். (சங்கமரபு: 2009: 263)
இவ்வாறு பாடினோரின் தன்னுணர்ச்சிப் பாடல்களின் தொகுப்பாக அமைந்த புறநானூற்றின் அழகியல், அமைப்பு, தொகுப்பு குறித்துப் பல்வேறு ஆய்வுகள் வெவ்வேறு தளங்களில் நடைபெற்றுள்ளன. இவற்றிலிருந்து சற்று மாறுபட்டு புறநானூற்றுப் புலவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சொற்களைக் குறித்த சில விவாதங்களை முன்வைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.
1894இல் உ.வே.சா.வால் பதிப்பிக்கப்பட்ட புறநானூற்றின் முகப்புப் பக்கங்களில் ‘இந்நூலிலும் உரையிலுங்கண்ட அரியசொற்கள்’ என்ற தலைப்பில் சில சொற்கள் உ.வே.சா.வால் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றுள் சில புறநானூற்றுப் பிரதிக்குள் மட்டுமே பயின்றுவந்துள்ளன; பிற சங்க இலக்கியங்களில் அவற்றைக் காண முடியவில்லை. இதனைத் தொடர்ந்து பெ.மாதையனின் சங்க இலக்கியச் சொல்லடைவு என்னும் கருவிநூலின் துணை கொண்டு ஆராயும் போது பிற சங்க இலக்கியப் பிரதிகளில் பயின்று வராத 1500க்கும்  மேற்பட்ட சொற்கள் புறநானூற்றில் பயின்று வந்துள்ளது வியப்பளிப்பதாக உள்ளது.
கால மாற்றமும் கவிதையின் பொருண்மையும் புதிய புதிய சொற்களுக்கான தேவையை இலக்கியப் பரப்பில் சாத்தியப்படுத்தியிருப்பதைப் புறநானூறும் உறுதி செய்துள்ளது. இவ்வாறு இலக்கியங்களுள் புதிதாக அறிமுகப்படுத்தப்படுகின்ற சொற்களைக் குறித்த ஆய்வை மேற்கொண்டவர் பா.ரா.சுப்பிரமணியம். திருக்குறளில் அத்தகைய ஆய்வொன்றை அவர் நிகழ்த்தியுள்ளார். சில சங்க இலக்கியச் சொற்களையும் அதற்குச் சான்றுகாட்டி விளக்கியுள்ளார். ‘வீரர்’ என்ற சொல் அகநானூற்றில் நக்கீரராலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக் காட்டி இத்தகு ஆய்வின் பயன் குறித்து அவர் கூறியுள்ள கருத்து கவனிக்கத்தக்கது.
சங்க காலத்தை ஒட்டி எழுந்த, ஓர் ஆசிரியரால் இயற்றப்பட்ட, ஒரு நூலில் இடம்பெற்றிருக்கும் சொற்களில், புதிய சொற்களின் வரவை எளிதாகக் கண்டு கொள்ளலாம். சங்க இலக்கியச் சொற்களஞ்சியத்தின் தொடர்ச்சியையும் தம் கருத்தாக்கங்களுக்கு வேண்டிய புது வரவுகளையும் அந்நூலில் காண இயலும். தமிழ்மொழியின் சொற்கோவை எவ்வாறு விரிவடைகிறது என்பதையும் காணமுடியும்(சொல்வலை வேட்டுவன்: 2009:287)
இப்பின்புலத்தில் புறநானூற்றில் மட்டும் சிறப்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சில சொற்களை ஆராய்வதன் மூலம் தொகுப்புப் பிரதியான புறநானூற்றின் தனித்த பண்புகளை விளங்கிக் கொள்ள முடியும்.
‘சொல்’ குறித்த ஆய்வு எனும் போது ஸோஸ்யுரின் மொழிக்கோட்பாடு கவனத்திற்குரியதாக உள்ளது. வடிவத்துக்கும் அர்த்தத்துக்கும் உள்ள உறவு மரபை (பழக்கத்தை) சார்ந்துதான் உள்ளது (ஜானதன்கல்லர் இலக்கியக்கோட்பாடு மிகச்சுருக்கமான அறிமுகம்:2005:91). எந்த ஒரு மொழியிலும் ஒருசொல் திடீரென்று தோன்றிவிடுவது கிடையாது. தொடர்ச்சியான புழக்கத்தினாலும், தொடர்ந்து வருகின்ற மரபினாலும் ஒரு பொருண்மை குறிப்பிட்ட, வரையறுத்த ஒரு சொல் வடிவத்தை ஏற்றுக்கொள்கிறது. ஒவ்வொரு மொழிபேசும் மக்கள் கூட்டத்திடமும் ஒரேபொருண்மைக்கு வெவ்வேறு வகையான சொற்கள் வழங்கப்படுவதற்குக் காரணம் இதுதான். அது அவரவர் மரபைச் சார்ந்த வடிவத்தைப் பெற்றுவிடுகின்றது. ஒரே மொழி பேசுகின்ற மக்கள் கூட்டத்திடமும் வட்டாரத் தன்மை சார்ந்து ஒரே பொருண்மைக்கு வெவ்வேறு சொல்வடிவங்கள் வழங்கப்பெறுவதையும் காணமுடியும். எவ்வாறிருப்பினும் ஒரு மொழியில் வழங்கும் சொல்குறித்த ஆய்வை மேற்கொள்ளும் போது அது அச்சமூகத்தின் பண்பாட்டினூடாகவே பயணப்படும். பண்பாடு என்பது நம்பிக்கைகளையும், சடங்குகளையும், வளமையையும் கொண்டு கட்டமைக்கப் படுவது.
இந்த ஆய்வுப்பின்புலத்தில் புறநானூற்றுப் புலவர்களால் புதிதாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ள சொற்களைச் சில தர்க்கங்களின் அடிப்படையில் அணுக முடியும். அச்சொற்களை வசதி கருதி கீழ்க்கண்டவாறு வகைபடுத்தலாம்.
-       புழங்குபொருள்களைக் குறிக்கின்ற சொற்கள்
-       கலைஞர்களைக் குறிக்கின்ற சொற்கள்
-       இனக்குழுவினரைக் குறிக்கின்ற சொற்கள்
-       பெண்களைக் குறிக்கின்ற சொற்கள்
-       இலக்கியம், கலைகள், தொல்லியல் தொடர்பான சொற்கள்
-       நம்பிக்கைகள் சார்ந்த சொற்கள்
இவ்வாறு வகைபடுத்தப்பட்ட இச்சொற்களின் மீதான ஆய்வைக் கீழ்க்கண்ட நிலைகளில் பகுத்துக்கொள்ளலாம்.
-       புதிய சொற்களைப் பயன்படுத்திய புலவர்களின் சமூகம் மற்றும் அவர்கள் அச்சொற்களைக் கையாள வேண்டியதன் தேவை குறித்த தேடல்
-       அச்சொற்களின் வடிவம் பிற சங்கப் பிரதிகளில் இல்லாதிருந்தாலும் அதற்கான பொருண்மை வேறுவடிவத்தில் வழங்கப்பட்டிருப்பின் பாடிய புலவரின் வட்டாரத்தில் வழங்கப்பட்ட சொல்லாக அச்சொல் அமைய வாய்ப்புண்டு. இதன்மூலம் அக்குறிப்பிட்ட சொல்லின் வட்டாரத் தன்மையை அறுதியிடுதல்.
-       குறிப்பிட்ட அச்சொல் மக்களின் சடங்குகளிலிருந்து, கலைகளிலிருந்து, நம்பிக்கைகளிலிருந்து பெறப்பட்டதா என்பது குறித்த புரிதல்
-       இன்று தொல்லியல் சான்றுகளின்வழி நிறுவப்பட்டுள்ள ஆய்வு முடிவுகளையும் கவனத்தில் கொண்டு புறநானூற்றின் அகச்சான்றின்வழி அவை குறித்த சில கவனத்தை ஏற்படுத்துதல். அவ்வாறே வரலாறு, மானுடவியல் முடிவுகளையும் கவனத்தில் கொள்ளுதல்.
மேற்குறித்த நிலைகளில் அப்புதிய சொற்களை அணுகுவது புறநானூறு போன்ற தொல்பிரதியின் பன்முகத்தன்மையை உணர்த்த மிகவும் அவசியமானதொன்று. உதாரணத்திற்கு முன்னர் குறிப்பிட்ட வகைமையில் வகைமாதிரியாகச் சில சொற்களை மட்டும் இக்கட்டுரை முன்வைக்கின்றது.
புழங்குபொருளைக் குறிக்கின்ற சொல் எனும்போது, வெள்ளைக்குடி நாகனார் ‘உழுபடைஎன்ற சொல்லை முதன் முதல் புறநானூற்றில் அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடிப் பழஞ்செய்க்கடன் வீடுகொண்டதாகக் குறிப்பும் உள்ளது.  ‘பொருபடை தரூஉங்  கொற்றமு முழுபடை’ (புறம்:35:25) என்கிற அடியில் கலப்பையைக் குறிப்பதாக இச்சொல் பயின்றுவந்துள்ளது. அக்கருவியைக் குறிக்க ‘கலப்பை’ என்ற சொல் கடியலூர் உருத்திரங்கண்ணனாரால் பாடப்பெற்ற பெரும்பாணாற்றுப்படையில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘குறுஞ்சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி’ (பெரும்பாணாற்றுப்படை:188) உருத்திரங்கண்ணனார் இன்று திருநெல்வேலி என்று கூறப்படுகின்ற நிலப்பகுதியைச் சார்ந்தவர்; அவர் வழங்கிய கலப்பை என்ற சொல்லே இன்றும் புழக்கத்தில் உள்ளது. வெள்ளைக்குடி என்னும் ஊரைச்சேர்ந்த நாகனாரால் உழுபடைஎன்ற புதிய சொல் கலப்பைக்குரியதாகக் கையாளப்பட்டிருப்பதைப் புறநானூற்றின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. உழுபடை என்பது ஒரு வட்டார வழக்குச் சொல் என்று கொள்ளமுடியும். இச்சொல்லை இவர் பயன்படுத்த செய்யுளின் ஓசைநலனும் ஒரு காரணமாக இருக்கிறது. பொருபடை என்பது முதற்சீராக அமைய உழுபடை என்பது இறுதிச்சீராக இவ்வடியில் அமைந்து ஓசைநலத்தைத் தருகின்றன. இவ்வாறு புழங்கு பொருள்கள் குறித்த சொற்களின் அறிமுகத்தைத் வேறு சில சொற்களைக் கொண்டும் தொடர்ச்சியாகக் கவனப்படுத்த இயலும்.
 அடுத்த நிலையில் கலைஞர்கள் எனும்போது, மிகுந்த கவனத்திற்குரிய சொல்லாகக் ‘கூத்தர்’ என்னும் சொல்லின் அறிமுகத்தைக் கூறலாம். சோழன் நலங்கிள்ளியைப் பாடிய உறையூர் முதுக்கண்ணன் சாத்தனாராலேயே இச்சொல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கவனித்தக்கது என்னவென்றால் பத்துப்பாட்டில் ஒன்றான நச்சினார்க்கினியர் மற்றும் இளம்பூரணரால் கூத்தராற்றுப் படை என்று அழைக்கப்படுகின்ற மலைப்படுகடாத்தில் கூட இச்சொல் பயின்றுவரவில்லை. பிற சங்க இலக்கியங்களிலும் இச்சொல்லைக் காணமுடியவில்லை. ஆடுகளத்தோடு தொடர்புபடுத்தி இச்சொல்லைப் பயன்படுத்தியவர் முதுக்கண்ணன் சாத்தனாரே. [‘பூம்போது சிதைய விழ்ந்தெனக் கூத்த/ ராடுகளங் கடுக்கு மகநாட் டையே’ (புறநானூறு:28:13),]  கூத்தராடுகின்ற ஆடுகளத்திற்கு ஒப்ப என்கிற நிலையில் உவமிக்கும் இடத்தில் இச்சொல் பயின்றுவந்துள்ளது. கூத்தர் என்கிற இச்சொல்லின் இத்தகுநிலை குறித்து கா.சிவத்தம்பி கூறியுள்ள கருத்தும் இங்கு கருதுதற்குரியது.
வையாபுரிப்பிள்ளையாற் குறிப்பிடப்பட்டது போல சங்க நூல்களில் கூத்து, கூத்தர் என்ற சொற்கள் மிக அருமையாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. அதற்கான சான்று புற.நா.28:13-14 இல் உள்ளது. அதில் அளிக்கை நடைபெறும் இடம் கூத்தர் ஆடுகளம் எனப்படுகிறது. கோடியர், கண்ணுளர், வயிரியர் என்ற சொற்கள் மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளமையானது அவர்கள் கூத்தர் என தொழிலாற் குறிப்பிடப்பட வேண்டிய அளவுக்கு தொழில் முதன்மை கொண்டவர்களாக விளங்கவில்லை. (பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம்:233)
தொன்மை இலக்கணமாகிய தொல்காப்பியத்திற்கு அடுத்து, புறநானூற்றிலேயே இச்சொல்லின் பயன்பாட்டைக் காணமுடிகின்றது. மானுடவியல் அடிப்படையில் இச்சொல்லின் வரலாற்றை அணுகும்போது சிவத்தம்பி கூறுகிறபடி கோடியர், கண்ணுளர், வயிரியர் ஆகியோர் அல்லது கலைக்குழாத்தைச் சேர்ந்த சிலர் கூத்தர் என்று தனித்துக் குறிப்பிடும் அளவிற்குத் தொழில்முதன்மை பெற்றிருக்கவில்லை. பொதுவாக ஆற்றுப்படையின் எழுதப்படா விதியாக அமைவது அதன் விளிச்சொல். புலவனையோ, விறலியையோ, பாணனையோ விளிப்பது. புறநானூற்றின் சில ஆற்றுப்படைத்துறைப் பாடல்களில் ‘இரவல’ என்பதும் விளிச்சொல்லாகப் பயின்றுவந்துள்ளது. பாடல்களின் பிற சூழல்களைக் கவனத்தில் கொண்டு அவற்றைப் பாணாற்றுப்படை பாடல்களாக உரையாசிரியர்கள் கருதியுள்ளனர்.
மலைப்படுகடாம் இலக்கியத்தைக் காணும்போது அதன் 50வது அடியில்  ‘தலைவ’ என்பதே விளிச்சொல்லாக அமைந்துள்ளது. சூழலையும் உடன் இருந்த கலைக்குழாத்தையும்  கருத்தில் கொண்டே நச்சினார்க்கினியரும் பத்துப்பாட்டின் உரையில் அதனைக் கூத்தராற்றுப்படை என்று அனுமானித்துள்ளார். சங்கப் பாடல்களில் சில தொல்காப்பியத்திற்கு முந்தையதாகவும் சில அதன் காலத்திற்குப் பிந்தையதாகவும் இருப்பதாக அறிஞர்கள் கூறுவர். தொல்காப்பியத்தில் ‘கூத்தர்’ தனித்த நிலையில் குறிப்பிடப்பட்டிருப்பதால் அதற்கு முன்னரே அவர்கள் தங்களுக்குரிய தொழில் அந்தஸ்தைப் பெற்றுவிட்டனர் என்பது புலனாகின்றது. அதற்கான இலக்கியச் சான்றாக புறநானூற்றுப் பாடல் அமைந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக இனக்குழுமரபைக் குறிக்கும் ‘குறத்தி’ என்ற சொல்லின் பயில்நிலை கவனப்படுத்தப்படுகிறது.  இச்சொல் கபிலரால் புறநானூற்றில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. குறிஞ்சிக்குக் கபிலர் என்று சிறப்பிக்கப்படுகின்ற கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் கூட அந்நிலத்திற்கு உரிய மக்களைக் குறிக்கின்ற இச்சொல் பயிலவில்லை. குறமகளிர், குறமகள், அகவன் மகள் ஆகிய சொற்களே அவ்வினக்குழுப் பெண்களைக் குறிக்கப் பிற சங்கப் பிரதிகளில் பயன்படுத்தப் பட்டுள்ளது. ஆனால் புறநானூற்றில்  வேள்பாரியைப் பாடிய கபிலர் ‘குறத்தி மாட்டிய வற்ற்கடைக் கொள்ளி’(புறநானூறு:108:1) என்கிற அடியில் இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். இன்றுவரை குறவன் என்ற சொல்லுக்கு ஈடாக அவ்வினத்தின் பெண்பாலுக்கு வழங்கப்படுகின்ற குறத்தி என்ற இச்சொல் முதன் முதலில் புறநானூற்றில் கபிலராலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
சில தொழில்களில் ஈடுபடும் உழைக்கும் வர்க்கத்தினரின் பெயர்களையும் புறநானூற்றில்தான் காணமுடிகின்றது. வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனாரின் 125 ஆவது புறப்பாடலிலும் [பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன:1], தங்கால் பொற்கொல்லனாரின் 326 வது புறப்பாடலிலும் [பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்து: 5] பருத்திப் பெண்டு என்கிற சொல் இடம்பெற்றுள்ளது. பருத்தியில் நூல்நூற்கின்ற நெசவுப் பெண் குறித்த பதிவுகள் அவை. இவ்விரு புலவர்களும் இவ்வர்க்கத்தில் உள்ள பெண்களைக் குறிக்கப் பருத்திப் பெண்டு என்ற சொல்லாட்சியை அறிமுகப் படுத்தியுள்ளனர்.  முதல் பாடலில் இரவில் பருத்திப் பெண்டு வீட்டிலுள்ள சிறிய தீ விளக்கின் ஒளி பேடையின் அச்சத்தைத் தீர்ப்பதாக இருந்தது என்று குறிக்கப் பட்டுள்ளது. இதன்மூலம் இரவிலும் நூல்நூற்கின்ற பணி தொடர்ந்ததை உணர முடிகின்றது. இரண்டாவது பாடலில் நிணத்தின் தன்மையைக் குறிக்கப் பருத்திப் பெண்டின் பஞ்சு உவமையாக்கப்பட்டுள்ளது.  இவ்விரு புலவர்கள் வாழ்ந்த சமூகத்திலும் நெசவாளர்கள் மிக்கிருந்தனர்; உவமிக்கும் அளவிற்குப் பெண்கள் அத்தொழிலில் ஈடுபட்டிருந்தனர் என்பதை இச்சொல்லின் உருவாக்கம் மூலம் புரிந்து கொள்ளமுடிகின்றது.
அவ்வாறே இழிசினன் என்ற பெயரையும் [கட்டில் நிணக்கும் இழிசினன் கையது:82:3] அப்பெயரையே விளியாகவும் [எறி சோல் கொள்ளும் இழிசின:287:2] புறநானூற்றில்  சாத்தந்தையார் என்னும் புலவர் அறிமுகப்படுத்துகின்றார். முதல் பாடலில் அப்பெயர் கட்டில் பின்னுபவனைக் குறித்து வந்துள்ளது. இரண்டாவது பாடலில் பறை முழக்குபவனைக்குறித்து வந்துள்ளது. இவ்விரு உழைக்கும் வர்க்கத்தினரும் சமூகத்தில் மிகத்தாழ்ந்த பிறப்பைக் கொண்டவர்கள் என்கிற எண்ணத்தில் இப்புலவரால் இழிசினன் என்று அழைக்கப்பட்டுள்ளனர். இதைத்  தொடர்ந்து கழாத்தலையார் என்னும் புலவராலும் [மடி வாய்த் தண்ணுமை இழிசின்ன் குரலே:289:10] இழிசினன் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அங்கு தண்ணுமை முழக்கத்துடன் அப்பெயர் இணைத்துக் கூறப்பட்டுள்ளது. இவ்விரு புலவர்களின் சமூகத்திலும் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்களைக் குறிக்க இச்சொல் பயன் பட்டிருப்பதை இப்பாடல்களின் மூலம் அறியமுடிகின்றது. இதன்மூலம் சங்க காலச் சமூக ஏற்றத்தாழ்வுகள் குறித்த புரிதலையும் பெற முடிகின்றது.
சமூகத்தில் பெண்களுக்கான இருப்பைக் கவனத்தில் கொண்டு அவர்களைக் குறிக்கச் சில தனித்த சொற்கள் புறநானூற்றில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. விரியூர் நக்கனாரின் 332வது புறப்பாடலிலும் [மங்கல மகளிரொடு மாலைசூட்டி:332:5], யாழ்ப்பாணரின் 270 ஆவது புறப்பாடலிலும் [சிறுவர் தாயே பேரில் பெண்டே:6], ஒக்கூர் மாசாத்தியாரின் 279ஆவது புறப்பாடலிலும் [கெடுக சிந்தை; கடிது இவள் துணிவே/ மூதில் மகளிராதல் தகுமே;1,2] குடபுலவியனாரின் 19ஆவது புறப்பாடலிலும் [மூதிற் பெண்டிர் கசிந்து அழ, நாணிக் :15] முறையே மங்கல மகளிர், பேரில்பெண்டு, மூதில் மகளிர், மூதில் பெண்டிர் ஆகிய சொற்கள் பயின்று வந்துள்ளன. இச்சொற்கள் அனைத்தும் அவர்களது சமூக இருப்பைக் கவனத்தில் கொண்டு  அப்புலவர்களின் சமூகத்தில் உருவாக்கப்பட்ட சொற்களே. இல்லத்தில் திருமணமாகி கணவரோடு இருக்கும் பெண்களைக் குறிக்க மங்கல மகளிர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மகனைப் போருக்கு அனுப்பிய பெண்ணைக் குறிக்கப் பேரில்பெண்டு என்ற சொல் வந்துள்ளது. இச்சொல் மக்களைப் பெற்ற  பெண்ணைக் குறிப்பதாகக் கொள்ளமுடியும். மூதின் மகளிர், மூதில் பெண்டிர் என்ற இரண்டு சொற்களும் மறவர் குலத்தைச் சார்ந்த பெண்களைக் குறிக்கப் பயின்றுவந்துள்ளன. மேற்குறித்த புலவர்கள் அனைவரும் பெண்களின் சமூக இருப்பைக் கவனத்தில் கொண்டே இத்தகு சொற்களைக் கையாண்டுள்ளனர் என்பதை அறியமுடிகிறது. தங்களது இருப்பு கேள்விக்குள்ளான பெண்களைக் குறிக்கும் சொற்களையும் புலவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.   யாழ்ப்பாணரின் 261 வது புறப்பாட்டு [கொய்ம் மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய/ கழிகல மகடூஉப் போல] மற்றும் மாறோக்கத்து நப்பசலையாரின் 280வது புறப்பாட்டிலும் [சிறுவெள் ஆம்பல் அல்லி உண்ணும்/ கழிகல மகளிர் போல] கழிகல மகடூஉ, கழிகல மகளிர் ஆகிய இரண்டு சொற்களும் கணவனை இழந்த பெண்களைக் குறிக்கும் சொற்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கைம்மைநோன்பின் கொடுமைகளை மேலும் சில புறநானூற்றுப் பாடல்களில் காணமுடியும். இருப்பினும், அக்கைம்பெண்களைக் குறிக்கின்ற சொற்களை அறிமுகப்படுத்தியவர்கள் இவ்விரு புலவர்களே. பரத்தை என்று சங்க இலக்கியத்தில் பேசப்பட்ட பெண்களை மார்க்கண்டேயனார் தனது 365வது புறப்பாட்டில் [விலைநலப் பெண்டிரின் பல்மீக் கூற,] விலைநலப்பெண்டிர் என்ற சொல்லால் அறிமுகப்படுத்தியுள்ளார். இவ்வாறு பெண்களின் சமூக இருப்பைக் கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இச்சொற்கள் அப்புலவர்களின் சமூகத்தில் பெண்களின் நிலை குறித்த கவனத்தை ஏற்படுத்துகின்றன.
புறநானூறு தமிழர்களின் வீர வரலாற்றை மட்டுமன்றி கலைகள் குறித்த பதிவுகளையும் கொண்டுள்ளது. பிற சங்க இலக்கியங்களில் கூறப்படாத ‘அல்லிப் பாவை’ என்ற கூத்துவடிவத்தை அறிமுகப்படுத்தும் பாடலொன்றை கோவூர்கிழார் பாடியுள்ளார். [வல்லோன் தைஇய வரிவனப்பு உற்ற/ அல்லிப் பாவை ஆடு வனப்பு ஏய்ப்ப (புறநானூறு:33;16,17)] இந்த அல்லிப்பாவை என்பது ஆண், பெண் என இருவகைக் கோலம் புனைந்து ஆடும் ஒருவகைக் கூத்து; சிலப்பதிகாரம் இதனை அல்லியத்தொகுதி(சிலப்பதிகாரம்:6:48) என்று குறித்துள்ளதும் கவனிக்கத்தக்கது. வெறியாட்டு, குரவை, துணங்கை குறித்துப் பேசும் பிற சங்கப் பிரதிகளில் இக்கூத்து குறித்த குறிப்பெதுவும் இல்லை என்பதும் கருதத்தக்கது.
இவை அனைத்திற்கும் மேலாக இலக்கியத்தைக் குறிக்கும் செய்யுள் என்ற சொல்லைப் புறநானூற்றுப் புலவர்களே அறிமுகம் செய்துள்ளனர். தமிழின் முதல் திறனாய்வுப் பாடல் என்று அறிஞர்களால் மதிப்பிடப்பட்ட இளங்கீரனாரின் 53வது புறப்பாடலிலும் [தாழாது செறுத்த செய்யுட் செய்செந் நாவின்], அவரால் புகழப்பட்ட கபிலரின்  202வது புறப்பாடலிலும் [புகழ்ந்த செய்யுட் கழாத் தலையை] இச்சொல் பயின்றுள்ளது. இரண்டிலும் செய்யுள் என்பது இலக்கியத்தைக் குறிக்கின்ற சொல்லாகவே பயின்றுள்ளது.
தமிழகத்தில் பெருங்கற்படைக் காலத்திற்குரிய சின்னங்களாக இன்று தொல்லியல் ஆய்வாளர்களால் தாழிகள் பல கண்டறியப்பட்டுள்ளன. இறந்தவர் களைத் தாழியில் இட்டுப் புதைக்கின்ற வழக்கத்தைப் பண்டைய தமிழர்கள் கொண்டிருந்தனர் என்ற கண்டுபிடிப்பு தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சங்க இலக்கியப் பிரதிகளிலும் இத்தாழி குறித்த குறிப்புகள் பலஇடங்களில் இடம்பெற்றுள்ளன. இது குறித்து கா.ராஜன் ‘தொல்லியல் நோக்கில் சங்க காலம்என்ற தன்னுடைய ஆய்வில் பல கருத்துக்களைப் பதிவுசெய்துள்ளார். தாழி என்ற சொல் நற்றிணையிலும் [மா இருந் தாழி கவிப்ப,/தா இன்று கழிக, ஏற் கொள்ளாக் கூற்றே (நற்றிணை:271:11-12)] புறநானூற்றிலும் [அன்னோற் கவிக்கும் கண்அகழ் தாழி  (புறநானூறு:228:12)/ கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த (புறநானூறு:238:1)] பதிற்றுப்பத்திலும் [துளங்குநீர் வியலகம் ஆண்டு, இனிது கழிந்த / மன்னர் மறைத்த தாழி(பதிற்றுப்பத்து:44:22,23)] இடம்பெற்றிருப்பதையும் குறித்துள்ளார். ஆனால் இச்சொல் அகநானூற்றில் [கல்சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பைத்/ தாழிமுதல் கலித்த கோழிலைப் பருத்திப் (அகநானூறு:129:6,7)/தடவுநிலை நொச்சி வரிநிழல் அசைஇ/ தாழிக் குவளை வாடுமலர் சூட்டி :165:11)/ ஓங்குநிலைத் தாழி மல்கச் சார்த்தி:275:1)] நான்கு இடங்களில் பயின்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பதிவுகளைப் பார்க்கும்போது நற்றிணை மற்றும் அகநானூற்றின் 165வது பாடலைப் பாடியவர்களின் பெயர் தெரியவில்லை. ஏனைய பாடல்களைப் பாடிய பரணர், குடவாயிற் கீரத்தனார், கயமனார், நக்கீரர், ஐயூர்முடவனார், பெருஞ்சித்திரனார் ஆகிய புலவர்கள் அனைவரும் தாழி என்கிற சொல் மற்றும் அதன் பயன்பாட்டைப் பதிவு செய்துள்ளனர். இவை அனைத்தும் பண்டைக்காலத் தமிழர்களின் இறப்புச் சடங்கிற்கான சான்றாக இன்று அடையாளங்காணப் பட்டுள்ளன.
புறநானூற்றின் பெயர்தெரியாத இன்னொரு புலவர் மேற்குறித்த பதிவுகளில் இருந்து சற்று மாறுபடுகிறார். அவர் தன்னுடைய பாடலில் மட்டும்  ‘தாழி’ என்கிற சொல்லை ‘ஈமத்தாழி’ என்று அடையுடன் குறிப்பிடப்பட்டுள்ளார். [‘வியல்மலர் அகன்பொழில் ஈமத் தாழி’ (புறநானூறு:256:5)] இறப்புச் சடங்கோடு தொடர்புடைய ‘ஈமம்’ என்ற சொல் புறநானூற்றிலேயே முதன்முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஔவையார் [கரிபுற விறகின் ஈம ஒள்ளழல்:231:2], தாயங்கண்ணனார் [ஈமவிளக்கின் பேஎய் மகளிரொடு :356:3], காவட்டனார் [ஈம விளக்கின் வெருவரப் பேரும்:359:7], சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை [வெள்ளிடைப் பொத்திய விளைவிறகு ஈமத்து:245:4], பூதப்பாண்டியன் தேவி [பெருங் காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்: 246:11] ஆகியோர் இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர். இவர்களது பதிவுகளில் ஈமம் என்பது எரிகின்ற பொருட்களுடனேயே இணைத்துச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் பெயர் குறிப்பிடப்படாத அப்புலவர் முதன் முதலில் தாழியுடன் ஈமத்தை இணைத்து ஈமத்தாழி என்று இன்றுவரை பயன்பாட்டில் உள்ள ஒரு தொல்லியல் கலைச்சொல்லை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐயூர் முடவனாரால் சூளை என்ற சொல்லும் புறநானூற்றில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. [அகல் இருவிசும்பின் ஊன்றும் சூளை:228:3]. ஈமத்தாழிகள் செய்ய சூளைகள் பண்டைத் தமிழகத்தில் இருந்துள்ளதை அறிய இக்குறிப்பு உதவுகின்றது.
உண்மையில் மேற்குறித்த சொற்களனைத்தும் புலவர்கள் வாழ்ந்த சமூகத்தில் இருந்த மக்களின் பயன்பாட்டில் இருந்தே பெறப்பட்டிருக்கமுடியும். எனவேதான் சொல் குறித்த ஆய்வானது மக்களின் பண்பாட்டினூடாகப் பயணிக்கின்றது. இவை அனைத்தையும் வெறும் இலக்கியச் சொற்கள் என்ற ஒற்றைப் புரிதலோடு  அணுக முடியாது. புறநானூற்றுப் புலவர்கள் வாழ்ந்த சமூகத்தில் மீவியல்பு குறித்த நம்பிக்கைகளும் அதிக அளவில் இருந்துள்ளதைச் சில பாடல்களில் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் சொற்களின் மூலம் அறிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு, கழாத்தலையாரின் 62ஆவது புறப்பாடலிலும் [நிறம் கிளர் உருவின் பேய்ப்பெண்டிர்:4] தாயங்கண்ணனாரின் 356வது புறப்பாடலிலும் [ஈம விளக்கின், பேஎய் மகளிரொடு:3] காவட்டனாரின் 359வது புறப்பாடலிலும் [பேஎய் மகளிர் பிணம்தழூஉப் பற்றி:4] முறையே பேய்ப்பெண்டிர், பேய்மகளிர் ஆகிய சொற்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. இருகளத்துப் பொருது வீழ்ந்த போர்க்களத்தில் பேய்கள் செய்கின்ற செயல்களைப் பேசுவதாகவும், காடு வாழ்த்துப் பாடலாகவும், பெருங்காஞ்சித் துறையில் பாடப்பட்ட பாடல்களாகவும் இவை உள்ளன. பிற்காலத்தில் எழுந்த பரணி இலக்கியங்களில் பேய்பாடியது, காடுபாடியது ஆகிய பகுதிகள் இடம்பெற முன்னோடிகளாக அமைந்த் பாடல்கள் இவை. இப்பாடல்கள் மூலம் இப்புலவர்கள் காலச் சமூகத்தில் பேய் போன்ற மீவியல்புகளின் மீது மக்கள் நம்பிக்கைகொண்டிருந்தமை புலனாகின்றது.
பொதுவாகப் பாடுகின்ற புலவர்களின் சொல்லாடல்களை வைத்து அப்பாடல்களின் காலத்தை நிர்ணயிக்க இயலும். அந்த அடிப்படையில் புறநானூறு வெவ்வேறு காலங்களில் வாழ்ந்த புலவர்களால் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனை உறுதி செய்யும் விதமாகத் தமிழகத்தில் வைதிகம் நிலையாகக் கால்கொண்டபிறகு பாடப்பட்ட பாடல்களாகச் சிலவற்றை அதில் பயின்றுள்ள புதிய சொற்களின் அறிமுகத்தால் அறுதியிடமுடிகிறது. ஆலமர் கடவுள் என்று திருமாலையும்[ஆலமர்கடவுள் அன்னநின் செல்வம்:198:9], கறைமிடற்று அண்ணல் என்று சிவபெருமானையும்[கறைமிடற்று அண்ணல் காமர் சென்னிப்:55:4] குறிக்கின்ற சொற்களையும் புறநானூற்றின் முறையே வடம வண்ணக்கன் பேரிசாத்தன், மருதன் இளநாகனார் ஆகியோரின் பாடல்களில் மட்டுமே காணமுடிகின்றது. மேலும் சொர்க்கம் என்கிற கருத்தாக்கம் மக்களிடம் பரவியிருந்ததையும் பிற சங்க இலக்கியங்களில் பயின்று வராமல் புறநானூற்றில் மட்டும் வந்துள்ள மேலோர் உலகம்[229:22, 240:6], வாரா உலகம்[341:15], ஆகிய சொற்களால் அறிந்து கொள்ளமுடிகிறது. ஒரு புறப்பாடலில்  வானவூர்தி [27:8] குறித்த குறிப்பும் உள்ளது. இவை அனைத்திற்கும் மேலாக யாகத்தில் பயன்படுத்த வேண்டியதொரு தூண் குறித்த குறிப்பும் அதைக்குறிக்கின்ற சொல்லும் புறநானூற்றின் பாடலில் மட்டுமே காணமுடிகின்றது. கருங்குழலாதனாரின் 224ஆவது புறப்பாடல் [எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்:8] சோழன் கரிகாற் பெருவளத்தான் வட்டவடிவமாக அமைந்த மதில்சூழ்ந்த வேள்விச் சாலையில் பருந்து விழுங்கும் வடிவில் செய்யப்பட்ட நெடிய வேள்வித் தூண் சமைத்து வேத வேள்விகளைச் செய்து முடித்தான் என்பதைக் குறித்துப் பதிவுசெய்கின்ற இடத்தில் இச்சொல் பயின்றுவந்துள்ளது.
இவைமட்டுமன்றி பல குடிப்பெயர்களும் [71:14,69:11,269:6,285:2,335:7], பறவையின் ஆண் இனத்தைக் குறிக்கின்ற பெயர்களும் (அன்னச்சேவல்:67:1) புறநானூற்றுப் புலவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இச்சொற்கள் அனைத்தும் புறநா னூற்றுக்கு ஒரு பண்பாட்டுக் கலைச்சொல்லகராதி உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை முன்னிறுத்துகின்றன. அவ்வாறு உருவாகின்ற போது புறநானூற்றுப் புலவர்களின் சமூகம் குறித்த புரிதலையும் இன்றைய தமிழ்ச்சமூகம் பெறும்.
உசாத்துணை நூல்கள்
1894, எட்டுத்தொகையுள் ஒன்றாகிய புறநானூறு மூலமும் உரையும், சாமிநாதையர் உ.வே., (ப.ஆ.) வெ.நா.ஜூபிலி அச்சுக்கூடம், சென்னை.
2005 சிவத்தம்பி, கார்த்திகேசு., பண்டைய தமிழ்ச்சமூகத்தில் நாடகம், குமரன் புத்தக இல்லம், சென்னை.
2005 ஜானதன் கல்லர் இலக்கியக்கோட்பாடு மிகச்சுருக்கமான அறிமுகம், தமிழில் சிவகுமார், ஆர்.,அடையாளம், சென்னை.
2007 மாதையன், பெ., சங்க இலக்கியச் சொல்லடைவு, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
2009, சுப்பிரமணியன், பா.ரா., சொல்வலைவேட்டுவன், கயல்கவின்பதிப்பகம், சென்னை
2009 தமிழண்ணல், சங்கமரபு, மீனாட்சி புத்தகநிலையம், சென்னை.

முனைவர் அ.மோகனா

உதவிப்பேராசிரியர்