வெள்ளி, 11 செப்டம்பர், 2015

P 131 காப்பிய இலக்கியம் (கூறு 2)

அ) கம்பராமாயணம்
            இந்தியாவின்  தொன்மையான  இதிகாசங்களுள்  ஒன்று  இராமாயணம். இது இரகுவம்ச அரசனான இராமனின் கதையைக் கூறுவது ஆகும். இக்கதையை முதலில்  வடமொழியில்  வால்மீகி என்னும் முனிவர் இயற்றினார். அதனைத் தழுவி தமிழ்மொழியில்  படைத்தவர் கம்பர் ஆவார். கம்பர் எழுதியதால் இக்காப்பியம்  கம்பராமாயணம்  என வழங்கப்பெறலாயிற்று.
சிறப்புகள்: 6 காண்டங்களையும் 113 படலங்களையும் 10569 பாக்களைக் கொண்ட கம்பராமாயணமே தமிழ் இலக்கியப் பரப்பில் மிகப்பெரிய பனுவலாக அமைந்துள்ளது. வடமொழி மூலத்தைத் தழுவி எழுந்த போதும் தமிழ் மரபிற்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளது. திருமனத்திற்கு முன்னரே இராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் விருப்புற்றிருந்தனர், வாலி மாண்ட பின்பு அவனது மனைவி தாரை கைமை நோன்பு பூண்டொழுகியது போன்றன இதற்குச் சான்றாகளாகும். கதை நிகழ்ச்சிக்கும் பாத்திரங்களுக்கும் சூழலுக்கும் ஏற்ற வகையில் ஓசை அமைத்து திறம்பட பாடியுள்ளார் கம்பர். இதன் காரனமாகவே சந்த வேந்தன் என்ற பெயரினை அவர் பெற்றார். ‘கவிச்சக்ரவர்த்தி’, ‘கம்பன் கவியே கவி’, ‘கல்வியில் பெரியவர் கம்பர்’, ‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்’ போன்ற புகழ் மொழிகள் கம்பரது கவித்திறத்தினை உணர்த்துவன.
2. அயோத்தியா காண்டம்
2. 2. மந்தரை சூழ்ச்சிப் படலம்
இராமன் முடிசூட இருக்கும் செய்தியைக் கோசலையிடம்  மங்கையர் அறிவித்தலும்,  கோசலைசுமித்திரையுடன் மகிழ்ந்து   திருமால் கோயில் சென்று வழிபட்டுக் கோதானம் புரிதலும், தயரதன் முடிசூட்டு விழாவிற்குரிய நல்நாள் நாளையே என்பது அறிந்து,  வசிட்டனை வரவழைத்து  இராமனுக்கு அறிவுரை வழங்கும்படி கூறுதலும், வசிட்டன் இராமன் மனை புகுந்து அவனுக்கு அறிவுரை கூறுதலும், இராமன்வசிட்டனுடன் திருமால் கோயிலை அடைதலும்,  இராமனுக்குத் தீர்த்த நீராட்டிச் சடங்குகள் செய்யப்பெறுதலும்,
நகரமாந்தர் மகிழ்ச்சியும்,  நகர் அழகு செய்தலும், அது கண்ட மந்தரையின் சீற்றமும்,  இராமன்மேல்கொண்ட கோபத்தோடு கைகேயியின் அரண்மனை அடைந்து உறங்கும் கைகேயியை அவள் எழுப்புதலும், கைகேயியிடம்இராம பட்டாபிஷேகச் செய்தியை மந்தரை கூறுதலும், அதுகேட்டு அவள் மகிழ்ந்து மாலை அளித்தலும், அளித்த பொன்மாலையை அறத்து  வீசி மந்தரை பல மாற்றத்தால் கைகேயியை மனமாற்றம்  செய்தலும், மனம் மாறிய கைகேயி மந்தரையைப் பாராட்டி ஆலோசனை கேட்டலும்,  உபாயம் கூறுதலும், உரைத்த மந்தரையைப்பாராட்டி மகிழ்ந்து  பெரும்பரிசுகள் அளித்துக் கைகேயி அவ்வாறே செய்வேன் என உறுதியளித்தலும்ஆகிய செய்திகள் இப்பதியில் கூறப்பெறுகின்றன.
அயோத்தியா காண்டம்
மந்தரை சூழ்ச்சிப் படலம்
பொருந்து நாள் நாளை, நின் புதல்வற்குஎன்றனர்,
திருந்தினார்; அன்ன சொல் கேட்ட செய் கழல்
பெருந் திண் மால் யானையான்,
பிழைப்பு இல் செய்தவம்
வருந்தினான் வருக
என, வசிட்டன் எய்தினான்.
(நூல்களில்) தேறியவர்களாகிய கணித நூல் அறிஞர்கள் உன் மகனுக்கு, (முடி சூட்டுவதற்கு); பொருத்தமான நல்ல நாள் நாளைக்கேயாகும்என்று சொன்னார்கள் அந்த வார்த்தையைக் கேட்ட புனைந்த வீரக்கழலணிந்த பெரிய வலிய மதமயக்கம் உடைய யானையை உடைய தயரதன்; தவறில்லாத தவத்தைச் செய்து வருத்திய மேனி உடைய வசிட்டன் வருகஎன்று அழைக்க வசிட்ட முனிவன் வந்து சேர்ந்தான்.
நல் இயல் மங்கல நாளும் நாளை; அவ்
வில் இயல் தோளவற்கு ஈண்டு,
வேண்டுவ
ஒல்லையின் இயற்றி, நல் உறுதி வாய்மையும்
சொல்லுதி பெரிது
என, தொழுது சொல்லினான்.
(தயரதன் வசிட்டனைப் பார்த்து) நல்ல இயல்புகளையுடைய (கோள் நிலை உடைய) முகூர்த்த நாளும் நாளைக்கேயாகும் (ஆதலால்) அந்த வில் பழகிய தோள் உடையவனாகிய இராமனுக்கு  இவ்விடத்தில்   வேண்டியனவாய விரதம் முதலிய சடங்குகளை செய்து (அதன்மேல்)  நல்ல அரசியல் அறமாகிய  உண்மைகளை மிகவும் சொல்வாயாக என்று தொழுது வணங்கிச் சொன்னான்.
முனிவனும், உவகையும் தானும் முந்துவான்,
மனுகுல நாயகன் வாயில் முன்னினான்;
அனையவன் வரவு கேட்டு, அலங்கல் வீரனும்,
இனிது எதிர்கொண்டு, தன் இருக்கை எய்தினான்.
வசிட்டனும் தன் மகிழ்ச்சியைவிடவும் முந்திச் செல்வானாய் வைவஸ்வத மனுவின் வமிசத்தில் தோன்றியஇராமனது அரண்மனை வாயிலை அடைந்தான் அந்த வசிட்டனது வருகையைக் கேள்வியுற்று மாலையணிந்த இராமனும் இனிமையாக வரவேற்று (அழைத்துக் கொண்டு) தன் இருப்பிடத்தை அடைந்தான்.
ஒல்கல் இல் தவத்து உத்தமன், ஓது நூல்
மல்கு கேள்விய வள்ளலை நோக்கினான்;
புல்கு காதல் புரவலன், போர் வலாய்!
நல்கும் நானிலம் நாளை நினக்கு
என்றான்.
தளர்ச்சி இல்லாத தவத்திற் சிறந்த; புண்ணியனாகிய வசிட்டன்; கற்றற்குரிய
நூல்களையும்;  நிரம்பிய கேள்வி
றிவினையும்  உடைய; இராமனை; நோக்கினான்- பார்த்து;   போரில் வல்லவனே!;   (உன்பால்)  நெருங்கிய பிரியத்தை உடைய அரசன் தயரதன்;   உனக்கு;  அரசாட்சியை;   நாளைக்கு;   தருவான்;  என்று சொன்னான்.
வையம்ம மன் உயிர் ஆக, அம் மன் உயிர்
உய்யத் தாங்கும் உடல் அன்ன மன்னனுக்கு,
ஐயம் இன்றி, அறம் கடவாது, அருள்
மெய்யில் நின்றபின், வேள்வியும் வேண்டுமோ?
உலக மக்கள்; நிலைத்த உயிராக; அந்த நிலைத்த உயிர்களை; வாழும்படி;
சுமக்கின்ற;   உடம்பை ஒத்த அரசனுக்கு; மேற்கொண்ட நெறியின் உறுதிபற்றிய சந்தேகம்
இல்லாமல்;  அறத்தை விட்டு விலகாது அருளிலும்,  சத்தியத்திலும் நிலைபெற்று  நின்ற பிறகு; யாகங்களும் செய்தல் வேண்டுமோ
 (வேண்டாம் என்றபடி.)
சீலம் அல்லன நீக்கி, செம்பொன் துலைத
தாலம் அன்ன தனி நிலை தாங்கிய
ஞால மன்னற்கு, நல்லவர் நோக்கிய
காலம் அல்லது கண்ணும் உண்டாகுமோ?
நல்லொழுக்கத்திற்குப் படாதவைகளை நீக்கி; சிவந்த பொன்னை நிறுத்துகின்ற
தராசினது நடுநாவை ஒத்த;  ஒப்பற்ற  நடுவு நிலைமையை; உடைய;   உலகை ஆளும் அரசனுக்கு; அமைச்சர்கள்;  ஆராய்ந்துரைத்த; பொழுது அல்லாமல்;  வேறு கண்ணும் உண்டாகுமோ?
(இல்லை).
ஏனை நீதி இனையன, வையகப்
போனதற்கு விளம்பி, புலன் கொளீஇ,
ஆனவன்னொடும் ஆயிர மௌலியான்
தானம் நண்ணினன், தத்துவம் நண்ணினான்.
மெய்ப்பொருள் உணர்வில் நெருங்கியவனாகிய வசிட்டன்; உலகத்தை உண்டு
வயிற்றகத் தடக்கித் காக்கும் திருமாலின் அம்சமான இராமனுக்கு; இப்படிப்பட்ட ஏனைய நீதிகளையும்; சொல்லி; அறிவு கற்பித்து; அவனுடனே; ஆயிர மணிமுடிகளை உடைய திருமாலினது; திருக்கோயிலை; சென்றடைந்தான்.
நண்ணி, நாகணை வள்ளலை நான்மறைப்
புண்ணியப் புனல்ஆட்டி, புலமையோர்
எண்ணும் நல்வினை முற்றுவித்து, எற்றினான்,
வெண் நிறத்த தருப்பை விரித்து அரோ.
அரவணையில் அறிதுயில் அமர்ந்த அண்ணலைச் சென்றடைந்து; (வழிபட்டு அவனக்கு முன் இராமனை) நால் வேத முறைப்படி அமைந்த; நன்மையுடைய தீர்த்தங்களால் நீராட்டி; 
அறிவுடையோர் எண்ணுகின்ற;  நல்ல சடங்குகளை; முடியச்செய்து;  வெண்மையான;   தருப்பைப் புல்லைப் பரப்பி;  அதன்மேல் எழுந்தருளச் செய்தான்.
ஏவின வள்ளுவர், இராமன், நாளையே
பூமகள் கொழுநனாய், புனையும் மௌலி; இக்
கோ நகர் அணிக!
என, கொட்டும் பேரி அத்
தேவரும் களி கொள, திரிந்து சாற்றினார்.
 (அரசனால்) ஏவப்பட்ட வள்ளுவர்;  இராமன்; நாளைக்கே;  நிலமகள் கணவனாய்;
மகுடம் சூடுவான்;  (ஆதலால்)  இந்தத் தலைமை நகரத்தை;  அலங்கரிக்க; என்று சொல்லி;
முழுக்குகின்ற;   முரசத்தை; விண்ணுலகத்துத் தேவரும் மகிழ்ச்சிகொள்ள;  நகர் எங்கும் சுற்றி; அடித்து முழக்கினார்கள்.
ஆர்த்தனர்; களித்தனர்; ஆடிப் பாடினர்;
வேர்த்தனர்; தடித்தினர்; சிலிர்த்து மெய்ம் மயிர்
போர்த்தனர்; மன்னனைப் புகழ்ந்து வாழ்த்தினர்;
தூர்த்தனர் நீள் நிதி, சொல்லினார்க்கு எலாம்.
(நகர மக்கள்) ஆரவாரித்தனர்; மகிழ்ந்தனர்; ஆடிப் பாடினர்; உடல் வியர்க்கப் பெற்றனர்;   (மகிழ்ச்சியால்) உடல் பெருத்தனர்;  உடம்பில்;  மயிர்க் கூச்செறியப் பெற்று மூடப் பெற்றனர்;  தயரதனை; துதித்து வாழ்த்தினர்;  இந் நற்செய்தியைச் சொன்னவர்களுக்கு  எல்லாம்;  பெருஞ் செல்வத்தை;  நிரப்பினார்கள்.
திணி சுடர் இரவியைத் திருத்துமாறுபோல்,
பணியிடைப் பள்ளியான் பரந்த மார்பிடை
மணியிடை வேகடம் வகுக்குமாறுபோல்,
அணி நகர் அணிந்தனர் - அருத்தி மாக்களே.
அன்புடைய அயோத்தி நகர மக்கள் நெருங்கிய கதிர்களையுடைய சூரியனைச் சீர்திருத்தும் தன்மையைப்போலவும்; பாம்பின் இடையே படுத்துறங்கும் திருமாலின்; அகன்ற மார்பின் நடுவில் அமைந்த; கௌஸ்துப மணியினை; சாணை பிடித்து  மாசு போக்குதலைப் போலவும்;  முன்போ அழகுற உள்ள அயோத்தி நகரை  மேலும் அலங்கரித்தார்கள்.
துனி அறு செம்மணித் தூணம் நீல் நிறம்
வனிதை - ஓர் - கூறினன் வடிவு காட்டின;
புனை துகில் உறைதொறும் பொலிந்து தோன்றின.
பனி பொதி கதிர் எனப் பவளத் தூண்களே.
 அழகிய (வெண்மையான) துணி உறைகளுக்குள்ளே விளங்கித் தோன்றுவனவாகிய;
குற்றம் அற்ற; சிவந்த மாணிக்கத்தால் ஆகிய தூண்கள்;  நீல நிறம் உடைய பார்வதியை;
தன்னுடைய இடப்பாகத்தில் உடையவன் ஆகிய சிவபெருமானது; (திருநீறு பூசிய செம்மை) வடிவத்தை; காண்பித்தன; (வெள்ளுறையில் பொதிந்த) பவளத்தால் ஆகிய தூண்கள்; பனியில் மறைந்த காலைச் செஞ்சூரியன் என்னும்படி (விளங்கித் தோன்றின.)
அந் நகர் அணிவுறும் அமலை, வானவர்
பொன்னகர் இயல்பு எனப் பொலியும் ஏல்வையில்,
இன்னல் செய் இராவணன் இழைத்த தீமைபோல்,
துன்ன அருங் கொடு மனக் கூனி தோன்றினாள்.
அந்த அயோத்தி நகரத்தை; அழகு படுத்துகின்ற; பேராரவாரத்தால்;  தேவர்களது;
அமராவதி நகரத்தின் தன்மை எனச் சொல்லும்படி;  விளங்குகின்ற; நேரத்தில்; (உலகிற்குத்) துன்பம் செய்கின்ற;  இராவணன் செய்த  தீமை (அவனை அழிக்க இப்பிறப்பில்
உரு எடுத்து வந்தது) போல; அணுகுதற்கரிய கொடிய மனம் படைத்த;  கூனி என்னும் மந்தரை; வெளியில் வந்து நகரைப் பார்த்தாள்.
தோன்றிய கூனியும், துடிக்கும் நெஞ்சினாள்;
ஊன்றிய வெகுளியாள்; உளைக்கும் உள்ளத்தாள்;
கான்று எரி நயனத்தாள்; கதிக்கும் சொல்லினாள்;
மூன்று உலகினுக்கும் ஓர் இடுக்கண் மூட்டுவாள்.
அவ்வாறு வெளியில் வந்த கூனியும்; (நகர் அணிசெயப் பெறுவருகண்டு ஆத்திரம் அடைந்து)  கோபத்தால் துடிக்கின்ற மனமுடையவளாய்;  கால்கொண்டு நிலைநின்ற கோபம் உடையவனாய்;  வேதனைப்படும் மனம் உடையவனாய்; நெருப்புக் கக்கி எரிகின்றகண்ணுடையளாய்; படபடப்பாகத் தோன்றும்  சொல்லுடையவளாய்;   மூவுலகங்களுக்கும்;   ஒப்பற்ற; (தீர்க்க முடியாத) துன்பத்தை; செய்யத் தொடங்குகிறவளாய் (ஆயினள்)
தொண்டைவாய்க் கேகயன் தோகை கோயில்மேல்
மண்டினாள் - வெகுளியின் மடித்த வாயினாள்,
பண்டை நாள் இராகவன் பாணி வில் உமிழ்
உண்டை உண்டதனைத் தன் உள்ளத்து உள்ளுவாள்.
(இராமனது குழந்தைப் பருவமாகிய) முன்னாயில்; இராமனது;  கையில் உள்ள வில்லினால்;  வெளிப்படுத்தப்பெற்ற; மண்ணுருண்டை;  (தன்மேல்) பட்டதனை;  தன் மனத்தின்கண்;  நினைத்து;   கோபத்தால்;  கீழ் உதட்டை மடித்துக் கடித்த;  வாயை உடையவனாய்;   கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயை உடைய;  கைகேயியின்;  மாளிகையிடத்து;  நெருங்கி, (எய்தினாள்)
நாற் கடல் படு மணி நளினம் பூத்தது ஓர்
பாற்கடல் படு திரைப் பவள வல்லியே-
போல், கடைக் கண் அளி பொழிய, பொங்கு அணை-
மேல் கிடந்தாள் தனை விரைவின் எய்தினாள்.
நான்கு கடல்களிலும் உண்டாகிய சிறந்த மாணிக்கங்களால் ஆகிய; தாமரை மலர்கள்; 
பூத்ததாகிய;  ஒப்பற்ற;  பாற்கடலின் அலைமேல் பொருந்திக் கிடந்த;  பவளக் கொடிபோல;   கண்ணின் கடை அருளைச்சொரிய; (நுரை போலப்) பொங்குகின்ற (மெத்தென்ற வெள்ளிய) படுக்கையின்மேலே;  உறங்கு்கின்றவளை; விரைவாகச் சென்றடைந்தாள்
அணங்கு, வாள் விட அரா அணுகும் எல்லையும்
குணம் கெடாது ஒளி விரி குளிர் வெண் திங்கள்போல்,
பிணங்கு வான் பேர் இடர் பிணிக்க நண்ணவும்,
உணங்குவாய் அல்லை; நீ உறங்குவாய்
என்றாள்.
வருத்துகின்ற;  கொடிய;  விடப் பாம்பு ஆகிய இராகு;  நெருங்கும் நேரத்திலும்;
தன் தன்மை சிறிதும் மாறாமல்;  ஒளியை எங்கும் வீசுகின்ற;  குளிர்ச்சியையுடைய
வெண்மையான சந்திரனைப் போல;  மாறுபடுகின்ற; மிகப் பெரிய துன்பம்;  (உன்னைவருத்திக் கட்ட;  நெருங்கி  வரவும்;  நீ (அதற்கு) வருந்துபவளாக இல்லை; (நிம்மதியாகத்) தூங்குகின்றாய்;
என்றாள்.
வெவ் விடம் அனையவள் விளம்ப, வேற்கணான்,
தெவ் அடு சிலைக் கை என் சிறுவர் செவ்வியர்;
அவ் அவர் துறைகொறும் அறம் திறம்பலர்;
எவ் இடர் எனக்கு வந்து அடுப்பது ஈண்டு?
எனா,
கொடிய நஞ்சையொத்த கூனி; இவ்வாறுசொல்ல;  வேலை த்த கண்ணையுடைய  கைகேயி பகைவரை அழிக்கும் வில்லைப் பிடித்த கைகை உடைய என் புதல்வர்;   நலமாய் இருக்கின்றனர் அவரவர்களுடைய தொழில்களில் எல்லாம்; தருமத்திலிருந்து
மாறுபடாதவர்கள்;  (எனவே) இப்பொழுது;
ஆழ்ந்த பேர் அன்பினாள் அனைய கூறலும்,
சூழ்ந்த தீவினை நிகர் கூனி சொல்லுவாள்,
வீழ்ந்தது நின் நலம்; திருவும் வீந்தது;
வாழ்ந்தனள் கோசலை, மதியினால்
என்றாள்.
(இராமன் பால்) ஆழங்காற்பட்ட பேரன்பு உடையவளாய கைகேயி; அத்தகைய வார்த்தைகளைச் சொல்லுதலும்; (அவனைச்) சுற்றிக் கொண்ட பாவத்தை த்த மந்தரை; பேசத் தொடங்கி; உனது நன்மை அழிந்து போனது; உன் செல்வமும்;  கெட்டது;  உன் மாற்றாளாகிய கோசலை; புத்தித் திறமையால்; செல்வமும் நன்மையும் பெற்று வாழ்ந்தாள்; என்று கூறினாள்.
அன்னவள் அவ் உரை உரைப்ப, ஆயிழை,
மன்னவர் மன்னனேல் கணவன், மைந்தனேல்
பன்ன அரும் பெரும் புகழ்ப் பரதன்; பார்தனில்
என் இதன்மேல் அவட்கு எய்தும் வாழ்வு?
என்றாள்.
மந்தரை; (வாழ்ந்தனள் கோசலை என்ற) அந்த வார்த்தைகளைச் சொல்ல; ஆராய்ந்த அணிகளை அணிந்த கைகேயி; கணவன்;  அரசர்களுக்கு அரசனாகிய சக்கரவர்த்தி தயரதனானால்;  எடுத்துரைத்தற்கரிய;  பெரிய புகழை உடைய பரதன்;  மகனானால்;  
இவ்வுலகில்;  இதற்கும் மேலாக;   கோசலைக்குக் கிடைக்கக்கூடிய புதிய வாழ்வு;  என்ன
இருக்கிறது;
 என்றுகூறினாள்.
ஆடவர் நகை உற, ஆண்மை மாசு உற,
தாடகை எனும் பெயர்த் தையலாள் பட,
கோடிய வரி சிலை இராமன் கோமுடி,
சூடுவன் நாளை; வாழ்வு இது
எனச் சொல்லினாள்.
(என் இதன் மேல் அவட்கு எய்தும் வாழ்வுஎன்று கேட்ட கைகேயிக்கு மந்தரை)   ஆண்மையுடைய வீரர்கள் பரிகசிக்க; ஆண்மைத் தன்மை குற்றம் அடைய;
தாடகை என்ற பெயரை உடைய;  பெண் அழியும்படி;   வளைந்த;   கட்டமைந்த
வில்லினை உடைய; இராமன்;  நாளை; அரச மகுடத்தை; சூடிக்கொள்வான்; இதுவே (கோசலைக்கு வரும்) வாழ்வு;
  என்று;  சொன்னாள்.
ஆய பேர் அன்பு எனும் அளக்கர் ஆர்த்து எழ,
தேய்வு இலா முக மதி விளங்கித் தேசுற,
தூயவள் உவகை போய் மிக, சுடர்க்கு எலாம்
நாயகம் அனையது ஒர் மாலை நல்கினாள்.
தூய்மையான கைகேயி; உண்டாகிய;  பெரிய அன்பு; என்கின்ற; கடல்; ஆரவாரித்து மேல்கிளம்ப;  களங்கம் இல்லாத; முகமாகிய சந்திரன்; பிரகாசித்து; மேலும் ஒளியடைய;   மகிழ்ச்சி;  எல்லை கடக்க;  மூன்று சுடர்களுக்கும்;  தலைமை பெற்றது போன்றதாகிய;  ஒரு இரத்தினமாலையை;  (மந்தரைக்குப் பரிசாக) அளித்தாள்.
                        தெழித்தனள்; உரப்பினள்; சிறு கண் தீ உக
            விழித்தனள்; வைதனள்; வெய்து உயிர்த்தனள்;
            அழித்தனள்; அழுதனள்; அம் பொன் மாலையால்
            குழித்தனள் நிலத்தை அக் கொடிய கூனியே.
கொடுமை படைத்த அந்தக் கூனி; சப்தமிட்டாள்; அதட்டினாள்;  சிறிய கண்களில் இருந்து நெருப்புப் பொறி சிந்த விழித்துப் பார்த்தாள்; திட்டினாள்;  வெப்பமாக மூச்சு விட்டாள்;  (தன்கோலத்தைக்) கெடுத்துக்கொண்டாள்;  அழுதனள் ; (கைகேயி அளித்த) அழகிய பொன் மாலையினால்;  பூமியை; குழியாக்கினாள்.
வேதனைக்கூனி, பின் வெகுண்டு நோக்கியே,
பேதை நீ பித்தி; நிற் - பிறந்த சேயொடும்
நீ துயர்ப் படுக; நான் நெடிது உன் மாற்றவள்
தாதியர்க்கு ஆட்செயத் தரிக்கிலேன்
என்றாள்.
துன்பத்தைச் செய்கின்ற கூனியானவள்;  பிறகு;  (கைகேயியை) கோபித்துப் பார்த்து; நீ அறிவற்றவள்; மனநிலை சரியில்லாதவள்; நீ உன்னிடம் பிறந்த பரதனோடும்;  துன்பப்படுவாயாக; நான்; உன் சக்களத்தி கோசலையின்;  தாதிகளுக்கு;  நீண்ட காலம்; அடிமை வேலை செய்ய; பொறுக்க மாட்டேன்; என்று சொன்னாள்.
சிவந்தவாய்ச் சீதையும் கரிய செம்மலும்
நிவந்த ஆசனத்து இனிது இருப்ப, நின் மகன்,
அவந்தனாய், வெறு நிலத்து இருக்கல் ஆன போது,
உவந்தவாறு என்? இதற்கு உறுதி யாது ?
என்றாள்.
சிவந்த வாயினை உடைய சீதையும்; கருமையான மேனியுடைய இராமனும்;
உயர்ந்த; சிங்காசனத்தில்; இனிமையாக வீற்றிருக்க; நின் மகன் பரதன்; ஒன்றுமற்றவனாய்; தரையில்; இருக்கும்படி நேரும் காலத்தில்; (நீ)! மகிழ்ந்தகாரணம் யாது? இம்மகிழ்ச்சி அடைவதற்கு (நீ பெற்ற) நன்மை யாது?;' என்று  கூறினாள்.
சரதம் இப் புவி எலாம், தம்பியோடும் இவ்
வரதனே காக்குமேல், வரம்பு இல் காலமும்,
பரதனும் இளவலும், பதியின் நீங்கிப் போய்,.
விரத மா தவம் செய விடுதல் நன்று
என்றாள்.
இந்த உலகமெல்லாம்; மெய்யாக; இந்த இராமனே;  இலக்குமணனோடும்
(சேர்ந்து);  (அரசு நடாத்திக்) காப்பானாயின்;  பரதனும், சத்துருக்கனனும்; (இராமன்
அரசு செய்யும்) அளவற்ற காலங்கள்; அயோத்தியிலிருந்து விலகிச் சென்று;   உயர்ந்ததவமாகிய விரதத்தைச் செய்யும்படி அனுப்பி விடுதல்;  அவனுக்கு நன்மை பயப்பதாம்;
  என்று கூறினாள். மந்தரை;  மறுபடியும்;  வகைந்து கூறுவாள்
மந்தரை, பின்னரும் வகைந்து கூறுவாள்;
அந்தரம் தீர்ந்து உலகு அளிக்கும் நீரினால்
தந்தையும் கொடியன்; நற்றாயும் தீயளால்;
எந்தையே! பரதனே! என் செய்வாய்?
என்றான்.
வகைப்படுத்திச்சொல்பவளாகி;  என்தந்தையே! பரதனே!;  நடுவுநிலைமை  விலகி அரசை இராமனுக்குக்கொடுக்கும் தன்மையால்;   தயரதனும் கொடியவன்; (அச்செயலுக்கு மகிழும் காரணத்தால்); உன்னைப் பெற்ற கைகேயியும் கொடியவள்; (இவர்களுக்கிடையில் நீ) யாது செய்வாய்?; என்றாள் -
வாய் கயப்புற மந்தரை வழங்கிய வெஞ் சொல்,
காய் கனல்தலை நெய் சொரிந்தென, கதம் கனற்ற,
கேகயர்க்கு இறை திருமகள், கிளர் இள வரிகள்
தோய், கயல் கண்கள் சிவப்புற நோக்கினள், சொல்லும்;
வாய் கசக்கும்படி; கூனி கூறிய; கொடிய வார்த்தை; எரிகின்ற, நெருப்பிடத்தில்;  நெய் நெய் ஊற்றினாற் போல;  கோபத்தை;  மேலும்  தூண்டி  எரியச்செய்ய;  (அதனால்) .
கேகய நாட்டு அரசனது அழகுப் பெண்ணான கைகேயி;  எழுந்த இளங்கோடுகள்
பொருந்திய;   கயல் போன்ற கண்கள்;  (சினத்தால்) செம்மை அடைய;  பார்த்து;  பேசத் தொடங்கினாள்
வெயில் முறைக் குலக் கதிரவன் முதலிய மேலோர்,
உயிர் முதல் பொருள் திறம்பினும், உரை திறம்பாதோர்;
மயில் முறைக் குலத்து உரிமையை, மனு முதல் மரபை;
செயிர் உற, புலைச் சிந்தையால், என் சொனாய்? - தீயோய்!
கொடியவளே!; ஒளிவரிசையை உடைய; சிறந்த சூரியன்; முதலாகிய உயர்ந்தோர்கள்;  உயிர் முதலாகிய பொருள்கள்; போவதாயினும்; சத்தியத்தினின்றும் மாறுபடார்; (அத்தகைய) மயிலினது முறைமையைக் கொண்ட அரசகுலத்து உரிமையை உடைய;  வைவச்சுத மனுவின் வழித் தோன்றல்களாக உள்ள அயோத்தியின் அரச பரம்பரையை; குற்றம் பொருந்தும்படி;  கீழ்மைப் புத்தியால்;  யாது பேசினாய்?
எனக்கு நல்லையும் அல்லை நீ; என் மகன் பரதன் -
தனக்கு நல்லையும் அல்லை; அத்தருமமே நோக்கின்,
உனக்கு நல்லையும் அல்லை; வந்து ஊழ்வினை தூண்ட,
மனக்கு நல்லன சொல்லினை - மதி இலா மனத்தோய்!
அறிவில்லாத நெஞ்சினை உடையவளே!; நீ எனக்கு நன்மையைச் செய்பவள்
அல்லள்;  என் மகனாகிய பரதனுக்கு நன்மையைச் செய்பவளும் அல்லள்;  அந்த அரச தருமத்தை ஆராய்ந்தால்;  உனக்கு நன்மையைச்செய்து கொள்பவளும் அல்லள்; (நீ) செய்த முன்னைய வினை (விதிவழியாக) வந்து உன்னைச் செலுத்த;  (அதனால்) உன் மனத்துக்கு இதமானவற்றைச் சொன்னாய்.
மூத்தவற்கு உரித்து அரசு எனும் முறைமையின் உலகம்
காத்த மன்னனின் இளையன் அன்றோ கடல்வண்ணன்?
ஏத்து நீள் முடி புனைவதற்கு இசைந்தனன் என்றால்,
மீத் தரும் செல்வம் பரதனை விலக்குமாறு எவனோ?
வயதில் முதிர்ந்தவனுக்கு அரசு உரிமையானது; என்கின்ற முறையை வைத்துப்
பார்த்தால்;  உலகத்தை ஆளுகின்ற தயரதனை விட; கடலின் நீல நிறத்தையுடைய இராமன்; வயதில் இளையவன் அல்லனோ?;  (தன்னைவிட வயதில் இளைய இராமன்) பாராட்டப் பெறும் நீண்ட மகுடத்தைச் சூடுதற்கு;  தயரதன் சம்மதித்தான் என்றால்;   மேம்பாட்டைத் தருகின்ற அரசச் செல்வம்; இராமனில் இளைய பரதனுக்கு உரியது அன்று என்று நீக்குவது எவ்வாறு?
சிந்தை என் செயத் திகைத்தனை? இனி, சில நாளில்,
தம்தம் இன்மையும், எளிமையும், நிற்கொண்டு தவிர்க்க,
உந்தை, உன் ஐ, உன் கிளைஞர், மற்ற உன் குலத்து உள்ளோர்,
வந்து காண்பது உன் மாற்றவள் செல்வமோ? மதியாய்!
அறிவுடையவளே!;  என்ன செய்யலாம் என்று (உன்) மனத்தில்; தடுமாற்றம் அடைந்தாய்; வருங்காலத்து; சில நாள்களில்; உன் தந்தை; உன் அண்ணன்;  உன் பிறந்த வீட்டுக்கு உறவினர்கள்;  மேலும்; உன் குலத்தைச் சேர்ந்தவர்கள் (ஆகியோர்);  தங்கள் தங்களது  வறுமையையும்; தாழ்ச்சியையும்;  உன்னைக் கொண்டு; போக்கிக் கொள்ளலாம் என்று; இங்கே வந்து; (நீ அதற்கு முடியாமல் உள்ளபடியால்) பார்ப்பது;   உன் சக்களத்தியின்  செல்வத்தையோ?   
காதல் உன் பெருங் கணவனை அஞ்சி, அக் கனி வாய்ச்
சீதை தந்தை, உன் தாதையைத் தெறுகிலன்; இராமன்
மாதுலன் அவன்; நுந்தைக்கு வாழ்வு இனி உண்டோ?
பேதை! உன்துணை யார் உளர் பழிபடப் பிறந்தார்?  
அறிவில்லாதவளே!; உன்மேல்அளவிறந்த அன்புடைய உன் உயரிய நாயகனான தயரதனுக்குப் பயந்து; அந்தக் கொவ்வைக் கனி போலச் சிவந்த வாயையுடைய சீதையின் தந்தையாகிய சனகன்;   உன்னுடைய தந்தையாகிய கேகய அரசன் மீது படையெடுத்து அழித்திலன்;  அந்தச் சனகன் இராமனுக்கு மாமன்;  (இராமன் சக்கரவத்தி ஆனால் சனகன் கை ஓங்கிவிடும்) உன் தந்தையாகிய கேகயனுக்கு இனி வாழ்வு  உண்டா? (அழிவுதான்);  உன்னளவுக்கு; பழி உண்டாகும் படி பிறந்தவர்கள் யார் இருக்கின்றார்கள் (ஒருவரும் இல்லை).
மற்றும் நுந்தைக்கு வான் பகை பெரிது உள; மறத்தார்
செற்றபோது, இவர் சென்று உதவார் எனில், செருவில்
கொற்றம் என்பது ஒன்று, எவ் வழி உண்டு? அது கூறாய்!
சுற்றமும் கெட, சுடு துயர்க் கடல் விழத் துணிந்தாய்!
மேற்சொல்லியதன்மேலும்; உன் தந்தையாகிய கேகயனுக்கு; மிகப் பெரிய பகைகள்
இருக்கின்றன;  அப்பகைவர்கள்;  (உன் தந்தையை அழிக்கப்) போரிட முனைந்த போது;  கோசல நாட்டார்; (உன் தந்தைக்கு உதவி யாகச்) சென்று போரில் உதவாவிட்டால்;  சண்டையில்;  வெற்றி என்பதாகிய ஒன்று;  எப்படி எவ்விதத்தில் (உன்
தந்தைக்கு) உண்டாகும்; அந்த வழியைச் சொல்லு (ஆகவே); உறவின் முறையாரும் அழிய; 
சுடுகின்ற துன்பக் கடலில் (நீயும்) விழுவதற்கு; உறுதி கொண்டு விட்டாய் ( போலும்).
கெடுத்து ஒழிந்தனை உனக்கு அரும் புதலவனை; கிளர் நீர்
உடுத்த பாரகம் உடையவன் ஒரு மகற்கு எனவே
கொடுத்த பேர் அரசு, அவன் குலக் கோமைந்தர்தமக்கும்.
அடுத்த தம்பிக்கும் ஆம்; பிறர்க்கு ஆகுமோ?
என்றாள்.
உன்னுடைய பெறுதற்கரிய மகனாகிய பரதனை;  வீணாக்கி அழிந்தாய்;   மேலெழும்புகின்ற  நீரையுடைய கடலை;  ஆடையாக  உடுத்த நிலவுலகத்தை;  தன் டைமையாகப் பெற்ற சக்கரவர்த்தி தயரதன்;  ஒப்பற்றதன் இராமனுக்காக; ஆட்சியுரிமை கொடுத்துவிட்ட கோசல அரசு; இராமன் குலத்தில் தோன்றும் அரசகுமார்களுக்கும்;  இராமனை எப்பொழுதும் சார்ந்து சிடக்கின்ற தம்பியாகிய இலக்குமணனுக்கும்;  ஆகும்;  (அப்படியல்லாது) வேறு பிறருக்கு (பரதனுக்கு) மீள வருமோ? (வராது); என்று கூறி முடித்தாள்.
தீய மந்தரை இவ் உரை செப்பலும், தேவி
தூய சிந்தையும் திரிந்தது - சூழ்ச்சியின் இமையோர்
மாயையும், அவர் பெற்ற நல் வரம் உண்மையாலும்,
ஆய அந்தணர் இயற்றிய அருந் தவத்தாலும்.
கொடிய கூனி;  இவ்வார்த்தைகளைச் சொன்ன அளவிலே;  (எதை எவ்வாறு நடத்துவது என்ற) ஆலோசனையில் சிறந்தஇமையோர்களது மாயையினாலும்; தேவர்கள் (திருமாலிடம்) பெற்றுக்கொண்ட;  நல்ல வரம்; இருக்கின்றபடியாலும்;  அறவோர் ஆகிய வேதியர்; செய்த; செய்தற்கு அரிய தவத்தாலும்; கைகேயியின் தூய மனமும்;  மந்தரை வழியில் மாறியது.
அனைய தன்மையள் ஆகிய கேகயன் அன்னம்,
வினை நிரம்பிய கூனியை விரும்பினள், நோக்கி,
எனை உவந்தனை; இனியை என் மகனுக்கும்; அனையான்
புனையும் நீள் முடி பெறும்படிபுகலுதி
என்றாள்.
அப்படிப்பட்ட மனம் மாறின தன்மை உடையளாகிய;  கைகேயி; சூழ்ச்சி நிறைந்தவளாகிய மந்தரையை; விரும்பிப் பார்த்து; என்னிடம் பிரியம் வைத்துள்ளாய்; நீ என்மகனாய பரதனுக்கும் நல்லவளே; அந்தப் பரதன்;  அழகு செய்யப் பெற்ற உயர்ந்த முடியை; அடையும் விதத்தை;  சொல்லுக; என்றாள்.
உரைத்த கூனியை உவந்தனள், உயிர் உறத் தழுவி,
நிரைத்த மா மணி ஆரமும் நிதியமும் நீட்டி,
இரைத்த வேலை சூழ் உலகம் என் ஒருமகற்கு ஈந்தாய்;
தரைக்கு நாயகன் தாய் இனி நீ
எனத் தணியா.
(இவ்வுபாயம்) சொன்ன மந்தரையை; மகிழ்ந்து;  இறுகத் தழுவிக் கொண்டு;
சிறந்த மணிக்கற்கள் வரிசையாக வைத்துச் செய்யப் பெற்ற மாலையும், ஏனைய செல்வங்களும் அளித்து;  என் ஒப்பற்ற  புதல்வனுக்கு; ஒலிக்கும் கடல் சூழ்ந்த உலகத்தை; கொடுத்தாய்; (ஆதலால்) இனிமேல் நீயே பூமிக்கரசனாகிய பரதனின் தாய் ஆவாய்;
என்று;  தாழ்ந்துபாராட்டி; 
நன்று சொல்லினை; நம்பியை நளிர் முடி சூட்டல்,
துன்று கானத்தில் இராமனைத் துரத்தல் இவ் இரண்டும்
அன்றது ஆம் எனில், அரசன் முன்ஆர் உயிர் துறந்து
பொன்றி நீங்குதல் புரிவென் யான்; போதி நீ
என்றாள்.
நீ நல்ல உபாயம் சொன்னாய்; பரதனைச் செறிந்த மகுடத்தால் சூட்டுதலும்;
இராமனை நெருங்கிய காட்டில் ஓட்டுதலும்;  இந்த இரண்டும்;  அல்லாமல் போமாயின்;   சக்கரவர்த்தியாகிய தயரதன் எதிரில்;  நான் என்னுடைய பெறுதற்கரிய உயிரை விட்டு;  இறந்து;  இவ்வுலகை விட்டு நீங்குதலை
ச்  செய்வேன்;  நீ போவாயாக; என்று சொன்னாள்.
ஆ) சீவசிந்தாமணி
தமிழில் தோன்றிய ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று சீவக சிந்தாமணி. இக்காப்பியத்தின் நாயகனான சீவகன் சிந்தாமணி எனப் புனைந்துரைக்கப்பெறுவதால் சீவகசிந்தாமணி எனப் பெயர் பெற்றது. நாமகள் இலம்பகம் முதல் முக்தி இலம்பகம் முடிய 13 இலம்பகங்களையும் 3145 செய்யுட்களையும் கொண்டுள்ளது. இதனை சக்ர சூளாமணி, கத்திய சிந்தாமணி போன்ற வடமொழியில் அமைந்த நூல்களைத் தழுவி இயற்றியவர் சமண மதத் துறவியான திருத்தக்கத்தேவர் ஆவார்.
கதைத்தலைவனான சீவகனை ஒட்டிய நிகழ்ச்சிகள் அனைத்தும் மணத்தோடு இணைத்துப் புனையப்பட்டுள்ளதால் இந்நூலுக்கு மணநூல் என்ற பெயரும் உண்டு. காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை என்னும் எட்டு பெண்களை மணக்கிறான் சீவகன், மேலும் கல்வியால் நாமகளையும் செல்வத்தாள் அலைமகளையும், ஆட்சியால் மண்மகளையும் வீடுபேற்றால் முக்தி மகளையும் மணப்பதாகக் கூறுவதாலும் மணநூல் எனக் சுட்டப்படுவது உண்டு.
சிறப்புகள்: விருத்தம் என்னும் யாப்பினால் அமையப் பெற்ற முதல் காப்பியம். தமிழில் பின் வந்த காப்பியங்கள் விருத்தத்தில் அமைய வழிகாட்டியாக அமைந்த பெருமைக்குரியது. துறவி தந்த காப்பியமாயினும் காதல், இசை, மருத்துவம், மந்திரம், சோதிடம், படை போன்ற பல செய்திகள் பாங்குடன் பாடப்பெற்றுள்ளன. கற்பனை அழகும், வருணனை வளமும், செய்யுளோட்டமும் சிந்தாமணியைச் செந்தமிழ் காப்பியமாகத் திகழச்செய்கின்றன.
கதைச்சுருக்கம்: ஏமாங்கத நாட்டு மன்னன் சச்சந்தன். அவனது மனைவி விசையை. மன்னன் தன் மனைவியின் மீது கொண்ட தீராக் காதலினால் ஆட்சிப்பொருப்பை அமைச்சன் கட்டியங்காரனிடம் ஒப்படைத்துவிட்டு அந்தப்புறத்திலேயே தங்கி விடுகிறான்.  அமைச்சன் கட்டியங்காரன் சூழ்ச்சி செய்து அரசனைக் கொன்று விட்டு ஆட்சியைக் கைப்பர்றிக்கொள்கிறான். நிறைமாத கர்பிணியான அரசி மயிற்பொறியின் உதவியால் அங்கிருந்து தப்பி சுடுகாடு ஒன்றில் சீவகனை ஈன்றெடுக்கிறாள். சீவகனை வணிகன் வளர்க்கிறான். பல கலைகளையும் கற்றுத் தேர்ந்த சீவகன் பெண்கள் எட்டு பேரை மணந்து இறுதியி ஏமாங்கத நாட்டின் மீது போர் தொடுத்து நாட்டினைக் கைப்பற்றி அரசனாகிறான். இவ்வுலக இன்பங்கள் யாவும் துய்த்த பின் இறுதியில் துறவறம் பூண்கிறான். காப்பியத்தின் கருத்து காதலாயினும் இறுதியில் வற்புறுத்தப்பெறுவது துறவறமேயாகும்.

5. பதுமையார் இலம்பகம்
பிணிக் குலத்து அகம் வயின் பிறந்த நோய் கெடுத்து
அணித் தகை உடம்பு எனக்கு அருளி நோக்கினான்
கணிப்பு அருங் குணத் தொகைக் காளை என்றனன்
மணிக் கலத்து அகத்து அமிர்து அனைய மாண்பினான்
மாணிக்கக் கலத்தில் ஏந்திய அமிர்தம் போன்ற தகவினானான சுதஞ்சணன்; அளவிடற்கரிய பண்பினையுடைய சீவகன்; (நான்) நோய்த் திரளையுடைய விலங்குத் தொகுதியின் அகத்திலே பிறந்த நோயை நீக்கி; அழகினைத் தன்னிடத்தே அடக்கிய தெய்வ உடம்பை எனக்கு நல்கி இந்நிலையிலேயே பார்த்தான் என்றனன்.
ஊற்றுநீர்க் கூவலுள் உறையும் மீன் அனார்
வேற்று நாடு அதன் சுவை விடுத்தல் மேயினார்
போற்று நீ போவல் யான் என்று கூறினாற்கு
ஆற்றினது அமைதி அங்கு அறியக் கூறினான்
ஊறும் நீரையுடைய கிணற்றிலே வாழும் மீன் போன்றவர்கள்; பிறநாடுகளைக் காணும் இனிமையை விடுத்தவராவார்; இவ்விடத்தே நீ பேணி இரு; நான் நாடு காணச் செல்வேன்; என்றுரைத்த சீவகனை நோக்கி; வழியின் நிலைமையை அங்குத் தெரியும்படி கூறினான்.
யானை வெண் மருப்பினால் இயற்றி யாவதும்
மான மாக் கவரி வெண் மயிரின் வேய்ந்தன
தேன் நெய் ஊன் கிழங்கு காய் பழங்கள் செற்றிய
கானவர் குரம்பை சூழ் காடு தோன்றுமே
யானையின் வெள்ளிய மருப்பினால் கால்வளை முதலிய எல்லாவற்றையும் அமைத்து; மானமுறும் விலங்காகிய கவரியின் வெண்மையான மயிரினால் வேய்ந்தனவாகிய; தேன் முதலிய இவ்வுணவுப் பொருள்களைச் செறித்த; வேடர் குடில்கள் சூழ்ந்த காடு தோன்றும்.
நெட்டிடை நெறிகளும் நிகர் இல் கானமும்
முட்டுடை முடுக்கரும் மொய் கொள் குன்றமும்
நட்புடை இடங்களும் நாடும் பொய்கையும்
உட்பட உரைத்தனன் உறுதி நோக்கினான்
நீண்ட இடத்தையுடைய வழிகளும்; ஒப்பற்ற காடுகளும்; போக்கற்ற அருவழிகளும்; நெருங்கிய குன்றுகளும்; உறவு கொள்ளும் இடங்களும்; நாடுகளும்; பொய்கைகளும்; பிறவும் அடங்க (முதலிற்) கூறியவனாகி; பின்னர் அவனுக்கு நன்மை தரும் மந்திரங்களைக் கூற நினைந்தான்.

கடுந் தொடைக் கவர் கணைக் காமன் காமுறப்
படும் குரல் தரும் இது பாம்பும் அல்லவும்
கடுந் திறல் நோய்களும் கெடுக்கும் வேண்டிய
உடம்பு இது தரும் என உணரக் கூறினான்
விரைந்து தொடுக்கப்படுவதும் ஆண் பெண்களில் ஒருவருக்கொருவர் கவர்ச்சியை உண்டாக்குவதும் ஆகிய அம்பினையுடைய காமனும் விரும்பும் குரலைத் தருவதும் இம்மந்திரம்; பாம்பின் நஞ்சையும், ஒழிந்த மண்டலி முதலியவற்றின் நஞ்சினையும், காற்று நீர் நெருப்பு முதலியவற்றையும், நோய்களையும் கெடுக்கும் இம் மந்திரம்; வேண்டிய உடம்பைத் தருவது இம் மந்திரம்; என்று விளங்க அறியுமாறு உரைத்தான்.
காழகம் ஊட்டப்பட்ட கார் இருள் துணியும் ஒப்பான்
ஆழ் அளை உடும்பு பற்றிப் பறித்து மார்பு ஒடுங்கி உள்ளான்
வாழ் மயிர்க் கரடி ஒப்பான் வாய்க்கு இலை அறிதல் இல்லான்
மேழகக் குரலினான் ஓர் வேட்டுவன் தலைப் பட்டானே
கருமை ஊட்டப்பட்டதோர் இருளின் துண்டமும் போன்றவன்; ஆழமான வளையில் உள்ள உடும்பைப் பிடித்திழுத்தலால் மார்பு ஒடுங்கியவன்; மயிர் வாழ்தலாற் கரடி போன்றவன்; வாய்க்கு வெற்றிலை கண்டறியாதவன்; ஆட்டின் குரல்போலும் குரலினன் (ஆகிய);
ஒரு வேடன் எதிர்ப்பட்டான்.
கொடி முதிர் கிழங்கு தீம் தேன் கொழுந் தடி நறவொடு ஏந்திப்
பிடி முதிர் முலையினாள் தன் தழைத் துகில் பெண்ணினோடும்
தொடு மரைத் தோலன் வில்லன் மரவுரி உடையன் தோன்ற
வடி நுனை வேலினான் கண்டு எம்மலை உறைவது என்றான்
கொடியில் முற்றிய கிழங்கும் இனிய தேனும் கொழுத்த ஊனும் கள்ளும் ஏந்தி; பிடி போன்ற நடையினாளும் முதிர்ந்த முலையினாளும் தழையாடையுடையவளும் ஆகிய தன் மனைவியுடன்; புனைந்த மான்தோலுடனும் வில்லுடனும் மரவுரியுடனும் காணப்பட; கூரிய முனையுடைய வேலனாகிய சீவகன் கண்டு, 'நீ எம்மலையில் வாழ்பவன்' என்று வினவினான்.
மாலை வெள் அருவி சூடி மற்று இதா தோன்றுகின்ற
சோலை சூழ் வரையின் நெற்றிச் சூழ் கிளி சுமக்கல் ஆற்றா
மாலை அம் தினைகள் காய்க்கும் வண் புனம் அதற்குத் தென்மேல்
மூலை அம் குவட்டுள் வாழும் குறவருள் தலைவன் என்றான்
மாலைபோல வெள்ளிய அருவியை அணிந்த இதோ காண்குறுகின்ற; சோலை சூழ்ந்த மலையின் உச்சியிலே; சூழ்ந்து வரும் கிளிகள் சுமக்க இயலாத, மாலை போல அழகிய தினைகள் விளைந்திருக்கும், வளமுறு புனம் ஒன்று உண்டு; அப் புனத்திற்குத் தென் மேலே மூலையிலே உள்ள; அழகிய மலையுச்சியிலே வாழும் வேடர்களுக்குத் தலைவன் யான் என்று அவ் வேடன் விளம்பினான்.
ஊனொடு தேனும் கள்ளும் உண்டு உயிர் கொன்ற பாவத்து
ஈனராய் பிறந்தது இங்ஙன் இனி இவை ஒழிமின் என்னக்
கானில் வாழ் குறவன் சொல்லும் கள்ளொடு ஊன்தேன் கை விட்டால்
ஏனை எம் உடம்பு வாட்டல் எவன் பிழைத்தும் கொல் என்றான்
(முற்பிறப்பில்) ஊனையும் தேனையும் கள்ளையும் உண்டு உயிரையும் கொன்ற தீவினையால்; இவ்விடத்திலே இழிந்த வேடராய்ப் பிறக்க நேர்ந்தது; இனி இவற்றைக் கைவிடுங்கள் என்று கூற; காட்டு வாழ்வுடைய வேடன் விளம்புகிறான்; கள்ளையும் ஊனையும் நீக்கினால் எவ்வாறு உயிர் வாழ்வோம்; (ஆகையால்) எம் உடம்பை வாட்டற்க; மற்றோர் உடம்பை வாட்டுக என்றான்.
ஊன் சுவைத்து உடம்பு வீக்கி நரகத்தில் உறைதல் நன்றோ
ஊன் தினாது உடம்பு வாட்டித் தேவராய் உறைதல் நன்றோ
ஊன்றி இவ் இரண்டின் உள்ளும் உறுதி நீ உரைத்திடு என்ன
ஊன் தினாது ஒழிந்து புத்தேள் ஆவதே உறுதி என்றான்
ஊனைச் சுவை பார்த்து உடம்பைப் பெருக்கி நரகத்தில் வாழ்வது நல்லதோ?; ஊனைத் தின்னாமல் உடம்பை வருத்தி வானவராய் வாழ்வது நல்லதோ?, ஆராய்ந்து இந்த இரண்டின் உள்ளும் நல்லதை நீ கூறுக என்று வினவ; ஊனைத் தின்னாமல் நீங்கி வானவனாவதே நன்மை என்று வேடன் சொன்னான்.
உறுதி நீ உணர்ந்து சொன்னாய் உயர்கதி சேறி ஏடா
குறுகினாய் இன்ப வெள்ளம் கிழங்கு உணக் காட்டுள் இன்றே
இறைவன் நூல் காட்சி கொல்லா ஒழுக்கொடு ஊன் துறத்தல் கண்டாய்
இறுதிக் கண் இன்பம் தூங்கும் இரும் கனி இவை கொள் என்றான்
நீ நலம் தெரிந்து கூறினை; (ஆதலில்) ஏடா! நீ மேல் நிலை அடைவாய்: அருகன் ஆகமத்திற் காணப்படுவன கொல்லா விரதமும் ஊனை நீக்கலும் ஆகும் காண்; காட்டிலே கிழங்கினை உண்பதனால் இன்றே இன்பப் பெருக்கை அடைந்தாய்; நினக்கு இறுதிக் காலத்தே இன்பம் செறியும் பெருங்கனி இவையே என்று கொள்வாய் என்று சீவகன் செப்பினான்.
என்றலும் தேனும் ஊனும் பிழியலும் இறுக நீக்கிச்
சென்று அடி தொழுது செல்கு என் தேம் பெய் நீள் குன்றம் என்று
குன்று உறை குறவன் போகக் கூர் எரி வளைக்கப் பட்ட
பஞ்சவர் போல நின்ற பகட்டு இனப் பரிவு தீர்த்தான்
என்று உரைத்தவுடன் தேனையும் ஊனையும் கள்ளையும் முற்றும் துறந்து போய் அவன் அடியைத் தொழுது தேன் சொரியும் என்னுடைய பெருமலைக்குச் செல்வேன் என்றுரைத்து மலை வாழும் வேடன் சென்ற பிறகு (அரக்கு மாளிகையில்) பெருந்தீயினால் வளைக்கப் பட்ட தருமன் முதலான ஐவரையும் போலக் காட்டுத்தீய்யல் வளைக்கப்பட்டு நின்ற யானைக் கூட்டங்களின் துன்பத்தை நீக்கினான்.
இலங்கு ஒளி மரகதம் இடறி இன் மணி
கலந்து பொன் அசும்பு கான்று ஒழுகி மான் இனம்
சிலம்பு பாய் வருடையொடு உகளும் சென்னி நீள்
விலங்கல் சென்று எய்தினான் விலங்கல் மார்பினான்
இனிய மணிகள் பொன்னுடன் கலந்து ஊற்றுப் பெருகி மலைமீது பரந்து; மான்திரள் விளங்கும் ஒளியையுடைய மரகத்தை இடறி; பாயும் மலையாடுகளுடனே துள்ளித் திரிகின்ற; நீண்ட முடியை உடைய அரணபாதம் என்னும் மலையை மலையனைய மார்பினான் சென்றடைந்தான்.
அம் மலைச் சினகரம் வணங்கிப் பண்ணவர்
பொன் மலர்ச் சேவடி புகழ்ந்த பின்னரே
வெம் மலைத் தெய்வதம் விருந்து செய்தபின்
செம்மல் போய்ப் பல்லவ தேயம் நண்ணினான்
அரணபாதம் என்னும் அம் மலையிலுள்ள திருக்கோயிலை வணங்கி; அங்குள்ள சாரணருடைய மலரனைய சிவந்த அடியைப் புகழ்ந்த பிறகு; மலைத்தெய்வமான இயக்கி விருந்தளித்த பின்னர்; சீவகன் சாரலூடே சென்று பல்லவ நாட்டை அடைந்தான்.
அரியல் ஆர்ந்து அமர்த்தலின் அனந்தர் நோக்கு உடைக்
கரிய வாய் நெடிய கண் கடைசி மங்கையர்
வரி வரால் பிறழ் வயல் குவளை கட்பவர்
இருவரை வினாய் நகர் நெறியின் முன்னினான்
மதுவை உண்டு பொருதலின்; மயங்கிய பார்வையுடைய; கொடிய வாயையும் நீண்ட கண்களையும் உடைய உழத்தியராகிய; வரியையுடைய வரால்கள் பிறழும் வயலிலே குவளையாகிய களையைப் பறிக்கும் இரு மங்கையரை; வழிவினவி, அவ்வழியே சென்று பல்லவ நாட்டின் தலைநகரை நெருங்கினான்.
மந்திரம் மறந்து வீழ்ந்து மா நிலத்து இயங்கு கின்ற
அந்தர குமரன் என்று ஆங்கு யாவரும் அமர்ந்து நோக்கி
இந்திர திருவற்கு உய்த்தார்க்கு இறைவனும் எதிர் கொண்டு ஓம்பி
மைந்தனை மகிழ்வ கூறி மைத்துனத் தோழன் என்றான்
வானிற் செல்லும் மறைமொழி மறந்து நிலமிசை விழுந்து உலவுகின்ற; வானுறுகுமரன் என்று அங்குள்ள எல்லோரும் பொருந்திப் பார்த்து; இந்திரனைப்போன்ற செல்வமுடைய அரசகுமரனிடம் சேர்த்தவர்க்கு; அரசகுமரனும் எதிர்கொண்டு பேணி; அவன் மகிழுமாறு பேசி; நீ என் விளையாட்டுத் தோழன் என்றுரைத்தான்.
கொய்தகைப் பொதியில் சோலைக் குழவிய முல்லை மௌவல்
செய்ய சந்து இமயச் சாரல் கருப்புரக் கன்று தீம்பூக்
கை தரு மணியின் தெண்ணீர் மதுக் கலந்து ஊட்டி மாலை
பெய்து ஒளி மறைத்து நங்கை பிறை என வளர்க்கின்றாளே
கொய்யத் தகுந்த பொதியில் என்னும் சோலையிலே; குழவியாகிய முல்லையினையும், செம்முல்லையினையும், செவ்விய சந்தனக் கன்றினையும், இமயச் சாரலில் வளரும் கருப்புரக் கன்றினையும், தீம் பூவையும்; வரிசையாகப் பதித்த சந்திரகாந்தக் கல்லினின்றுங்தோன்றிய தெளிந்த நீரைத் தேனைக் கலந்து ஊட்டி; மாலையை மூட்டாகப் பெய்து கதிரொளியை மறைத்து; பிறை போலப் பதுமை வளர்க்கின்றனள்.
நற விரி சோலை ஆடி நாள் மலர்க் குரவம் பாவை
நிறைய பூத்து அணிந்து வண்டும் தேன்களும் நிழன்று பாட
இறைவளைத் தோளி மற்று என் தோழி ஈது என்று சேர்ந்து
பெறல் அரும் பாவை கொள்வாள் பெரிய தோள் நீட்டினாளே
தேன் மலர்ந்த பொழிலிலே விளையாடி; நாள்மலரையுடைய குரவம் பாவையை வண்டும் தேனும் நிழல் செய்து பாட நிறைய மலர்ந்து அணிய; கீற்றுக்களையுடைய வளையணிந்த தோளினாள் இப் பாவை என் தோழி என்றுரைத்து; கிடைத்தற் கரிய குரா மலரைக் கொள்வதற்கு அதனைத் தழுவி; பெரிய தோளை நீட்டினாள்.
நங்கை தன் முகத்தை நோக்கி நகை மதி இது என்று எண்ணி
அங்கு உறை அரவு தீண்டி ஓளவையோ என்று போகக்
கொங்கு அலர் கோதை நங்கை அடிகளோ என்று கொம்பு ஏர்
செங் கயல் கண்ணி தோழி திருமகள் சென்று சேர்ந்தாள்
(அப்போது) அக்குரா மரத்தில் வாழும் பாம் பொன்று; பதுமையின் முகத்தைப் பார்த்து; இது மறுவில்லாத ஒளியுறு திங்களென்று நினைத்து; (முகத்திலே தீண்டாமற் கையிலே) தீண்டியதாக; (பதுமை) அம்மாவோ! என்று செல்ல; மணம் விரியும் மலர்மாலையாய்! திலோத்தமையார் வந்தாரோ என்று வினவி; பூங்கொம்பை ஒக்கும் செவ்வரி பரந்த கயலனைய கண்ணியாளான தோழி திருமகள்; பதுமையினிடம் போய்ச் சேர்ந்தாள்.


அடிகளுக்கு இறைஞ்சி ஐயன் அடிகளைத் தொழுது நங்கை
அடிகளைப் புல்லி ஆரத் தழுவிக் கொண்டு ஒளவைமாரை
கொடி அனாய் என்னை நாளும் நினை எனத் தழுவிக் கொண்டு
மிடை மின்னின் நிலத்தைச் சேர்ந்தாள் வேந்த மற்று அருளுக என்றான்
கொடி போன்றவளே!, எந்தையாகிய தனபதி மன்னரைத் தொழுது; எம் தமையனாகிய உலோகபாலனுடைய அடிகளை வணங்கி; நற்றாயை நன்றாகத் தழுவி; மற்றைத் தாயரையும் தழுவிக் கொண்டு; என்னை எப்போதும் நினைப்பாயாக என்று கூறி; மின்னொடு செறிந்த மின்னைப் போல நிலத்திலே சோர்ந்து விழுந்தாள்; இளவரசே! அருள் செய்க என்று வந்த வீரன் கூறினான்.
பதுமையைப் பாம்பு தீண்டிற்று என்றலும் பையுள் எய்திக்
கொதி நுனை வேலினாய் இங்கு இருக்க எனக் குருசில் ஏகிக்
கதும் எனச் சென்று நோக்கி காய் சினம் கடிதற்கு ஒத்த
மதி மிகுத்து அவலம் நீக்கும் மந்திரம் பலவும் செய்தான்
(இங்ஙனம்) பதுமையைப் பாம்பு தீண்டியது என்றவுடன் வருத்தமுற்று; காய்ந்த கூரிய வேலினாய்! இங்கேயே இருப்பாயாக என்று கேட்டுக்கொண்டு; உலோக பாலன் அரண்மனைக்குச் சென்று; விரைந்து பதுமை இருக்குமிடம் போய்ப் பார்த்து; நஞ்சின் கடுமையைப் போக்குதற்குரிய; அறிவினால் நுனித்து அறிந்து; துன்பத்தை நீக்குதற்குரிய மந்திரத்தைக் கூறி மருந்துகள் பலவற்றையும் செய்தான்.
குன்று இரண்டு அனைய தோளான் கொழுமலர்க் குவளைப் போது அங்கு
ஒன்று இரண்டு உருவம் ஓதி உறக்கிடை மயிலனாள் தன்
சென்று இருண்டு அமைந்த கோலச் சிகழிகை அழுத்திச் செல்வன்
நின்று இரண்டு உருவம் ஓதி நேர்முகம் நோக்கினானே
மலைகள் இரண்டு போன்ற தோளையுடைய சீவகனான செல்வன்; வளமிகு மலராகிய குவளையை அங்கே மூன்று உருவம் ஓதி; உறக்கத்திலுள்ள மயில் போன்றவளின் நீண்டு இருண்டு அமைந்த அழகிய மயிர் முடியிலே அழுத்தி; பெயர்ந்து நின்று பின்னும் இரண்டு உருவம் ஓதி முகத்தை நேரே நோக்கினான்.
நெடுந் தகை நின்று நோக்க நீள் கடல் பிறந்த கோலக்
கடுங் கதிர்க் கனலி கோப்பக் கார் இருள் உடைந்ததே போல்
உடம்பு இடை நஞ்சு நீங்கிற்று ஒண் தொடி உருவம் ஆர்ந்து
குடங்கையின் நெடிய கண்ணால் குமரன் மேல் நோக்கினாளே
சீவகன் நின்று நோக்கின அளவிலே; பெருங் கடலிலே தோன்றிய அழகிய வெங்கதிரையுடைய ஞாயிறு எதிர்ப்படக்கரிய இருள் நீங்கியது போல; உடம்பிலிருந்து நஞ்சு விலகியது; பின்னர் அக் கதிர் வளையாளின் உருவத்தைக் கண்ணால் அவன் நுகராநிற்க; அவளும் உள்ளங்கை போன்ற நீண்ட கண்களாற் சீவகனை நோக்கினாள்.
பூ மென் சேக்கையுள் நாற்றிய பூந் திரள்
தாமம் வாட்டும் தகைய உயிர்ப்பு அளைஇக்
காமர் பேதை தன் கண்தரு காமநோய்
யாமத்து எல்லை ஓர் யாண்டு ஒத்து இறந்ததே
மலரால் அமைத்த மெல்லிய அணையிலே தூக்கிய மலர்கள் திரண்ட மாலைகளை; மெலிவிக்கும் தன்மையவாகிய நெட்டுயிர்ப்பைக் கலந்து; அழகிய அப் பேதைக்குத் தன் கண் தந்த நோயாலே; இராப் பொழுதின் எல்லை ஓராண்டின் அளவையொத்துக் கழிந்தது.
பூமியை ஆடற்கு ஒத்த பொறியினன் ஆதலானும்
மா மகள் உயிரை மீட்ட வலத்தினன் ஆதலானும்
நேமியான் சிறுவன் அன்ன நெடுந்தகை நேரும் ஆயின்
நாம் அவற்கு அழகிதாக நங்கையைக் கொடுத்தும் என்றான்
பதுமையின் உயிரைத் தந்த வெற்றியை உடையோன் ஆகையாலும்; உலகினை ஆள்வதற்குரிய நல்லிலக்கணம் உடையனாதலானும்; திருமாலின் மகனான காமனை யொத்த சீவகன் உடன்படுவானாயின்; நமக்கு நன்றாக நாம் பதுமையை அவனுக்குக் கொடுக்கக் கடவேம் என்று தனபதி மன்னன் கூறினான்.
மதிதரன் என்னும் மாசுஇல் மந்திரி சொல்லக் கேட்டே
உதிதர உணர்வல் யானும் ஒப்பினும் உருவினானும்
விதிதர வந்தது ஒன்றே விளங்கு பூண் முலையினாளைக்
கொதி தரு வேலினாற்கே கொடுப்பது கருமம் என்றான்
அவ்வாறு அரசன் கூறக்கேட்டு; மதிதரன் எனும் பெயரை உடைய குற்றம் அற்ற அமைச்சன்; ஒப்பினாலும் உருவுடைமையாலும்; ஊழ்தர வந்தது ஒன்றாம்; விளங்கும் அணியணிந்த முலையாளைக் கொதியிட்ட வேலினானுக்கே கொடுப்பது கடமை; யானும் என் உணர்வில் தோன்ற முன்னரே உணர்ந்தேன் என்றான்.
உள் விரித்து இதனை எல்லாம் உரைக்க என மொழிந்து விட்டான்
தௌளிதின் தெரியச் சென்று ஆங்கு உரைத்தலும் குமரன் தேறி
வெள் இலை அணிந்த வேலான் வேண்டியது ஆக என்றான்
அள் இலை வேல் கொள் மன்னற்கு அமைச்சன் அஃது அமைந்தது என்றான்
(அதனைக் கேட்ட மன்னன்) இந் நிலைமையெல்லாம் அவனுக்குத் தெளிவாக விளக்கியுரைப்பாயாக என்று, கூறிவிட்டான்; மந்திரியும் ஆங்குச் சென்று தெளிவாக விளக்கிக் கூறலும்; சீவகன் தெளிய உணர்ந்து; வெற்றிலை போன்ற முகமுடைய வேலையுடைய மன்னன் விரும்பியவாறே ஆகுக என்றான்; (அது கேட்டு) கூரிய வேலணிந்த மன்னனிடம் சென்று மந்திரி அஃது அப்படியே முடிந்தது என்றான்.
கயல் கணாளையும் காமன் அன்னானையும்
இயற்றினார் மணம் எத்தரும் தன்மையார்
மயற்கை இல்லவர் மன்றலின் மன்னிய
இயற்கை அன்பு உடையார் இயைந்தார்களே
புகழ்தற்கரிய தன்மையுடையார் ஆகிய தனபதி முதலாயினோர்; பதுமையையிம் சீவகனையும்; திருமணம் புரிவித்தனர்; குற்றமற்ற கந்தருவரின் மணத்தைப் போல முன்பே பொருந்திய; இயற்கைப் புணர்ச்சியால் உள்ள அன்புடையார் தம்மில் கூடினார்.
தயங்கு இணர்க் கோதை தன்மேல் தண் என வைத்த மென்தோள்
வயங்கு இணர் மலிந்த தாரான் வருந்துறா வகையின் நீங்கி
நயம் கிளர் உடம்பு நீங்கி நல் உயிர் போவதே போல்
இயங்கு இடை அறுத்த கங்குல் இருள் இடை ஏகினானே
விளங்கும் பூங்கொத்துக்கள் நிறைந்த மலர்த்தாரினான்; விளங்கும் இணரையுடைய கோதையளான பதுமை; தன்மேல் குளிர்ச்சியாக வைத்திருந்த கையை; வருந்தா வண்ணம் எடுத்து வைத்துவிட்டு; விருப்பம் பொருந்திய உடம்பை விட்டு; நல்ல உயிர் செல்வதைப் போல; யாவரும் செல்லும் செலவை நடுவறுத்த இரவில் இருளிலே செல்லத் தொடங்கினான்.
வேந்தனால் விடுக்கப் பட்டார் விடலையைக் கண்டு சொன்னார்
ஏந்தலே பெரிதும் ஒக்கும் இளமையும் வடிவும் இஃதே
போந்ததும் போய கங்குல் போம் வழிக் கண்டது உண்டேல்
யாம் தலைப் படுதும் ஐய அறியின் ஈங்கு உரைக்க என்றார்
தனபதி மன்னனால் ஏவப்பட்டோர் (தன்னுடைய வடிவத்தினை மாற்றியிருந்த) சீவகனைக் கண்டு கூறினார்; ஏந்தலாகிய நின்னையே பெரிதும் ஒப்பான்; அவனுடைய இளமைப் பருவமும் வடிவமும் இத் தன்மையே; அவன் வெளிவந்ததும் சென்ற இரவிலேயே; நீ போந்த நெறியிலே அவனைக் கண்டிருந்தால் (அவ்விடத்தைக் கூறினால்) ஐயனே! அறிந்திருந்தாற் கூறுக என்று வினவினர்.
நெய் கனிந்து இருண்ட ஐம்பால் நெடுங் கணாள் காதலானை
ஐ இரு திங்கள் எல்லை அகப்படக் காண்பிர் இப்பால்
பொய் உரை அன்று காணீர் போமினம் போகி நுங்கள்
மையல் அம் களிற்று வேந்தன் மைந்தனுக்கு உரைமின் என்றான்

நெய் நிறைந்து கறுத்த ஐம்பாலையும் நெடுஞ்கண்களையும் உடையவளின் கணவனை; பத்துத் திங்களின் அளவிலே அகப்படக் காண்பீர்; இவ்வெல்லைக்குள்ளே காணீர்; யான் கூறுவது பொய்ம்மொழி அன்று; ஆகவே, இனித் திரும்பிச் செல்லுமின்; சென்று உங்கள், மயக்கமுற்ற களிற்றையுடைய வேந்தனுக்கும் அவன் மைந்தனுக்கும் உரைப்பீராக என்றான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக