வியாழன், 15 அக்டோபர், 2015

காற்றில் கால்பாவும் மொழிநிலம்



காற்றின் அலைதலின் வழி தன்னை உருமாற்றிக்கொள்ளும் முகிலின் தோற்றமைகள் மனதில் சலனங்கொண்டு உருவாக்கும் மேகத்தின் பாய்ச்சலில் அலையலையாய் உருக்கொள்ளும் படைப்பு மனம் வெளித்தள்ளும் வரிகள் கண்களுக்குப் புலனாகும் வெவ்வேறு நிறங்களென வேறுவேறு தோற்றங்களென மாயம் செய்யும் மனதிற்குள் விரியும் படைப்பின் அகத்தில் சூல்கொண்ட மொழியும் நிகழ்த்துக் கலைஞனின் அசைவில் அதிர்வில் உருவாகும் பிரவாக வெளியென மனதிற்குள் தன்னை விரித்துக்கொண்டேசெல்கிறது.

விரிகோணங்களில் மின்னிமறையும் தோற்றப்பிழைகள் முழுமை கூடாமல் தன்னைக்கூடாமல் உதறிச்சிதறும் புள்ளிகளில் படைப்பு தன்னைக் கூடிக்கொள்ள உடலில் மூழ்கி அலையும் காற்றென...

ஆதியிலே முன் நகர்ந்த மண்துகள் செந்நிறமென உருமாறியது எப்போது? செம்மண் துகள் நிலமானதொரு உருக்கொண்டு பரவ துகள்களில் பதுங்கயுள்ள காலம் செந்நிறமாய் உருமாறுகிறது. ஆதி பூமியின் அடிவயிற்றில் தன் மூச்சடக்கித் தனக்குத் தானே உரமாகிக் காலத்தின் மூச்சைத் தன் கபாலங்களில் பூட்டி வைத்த விந்தையில் உருக்கொள்ளும் கோடானுகோடி சங்கீதங்கள்...

மேகத்தின் நீர்க்கோடுகளில் தேங்கியிருக்கும் நீலச்சாயங்களில் வரையப்படும் முகிலின் ஓவியங்கள் காலத்தின் கைகளான படைப்பு தேவன்களிடம் அளிக்கப்படுகின்றன. வானவெளியில் முகில்கள் தன்னையே தூரிகைகளாகவும், நிறங்களாகவும் தன்னை ஓவிய உயிர் உருக்களாகவும் மாற்றி வரைந்து கொண்டேயிருக்கின்றன. முகில் தன்னைப் பிளந்து கொள்ள கருமையின் இளகிய வடிவமான நீலம் மெல்லிய படலமென ஒளிர்கிறது. வானம் முழுக்க ஓவியங்கள் புகையும் நிறமுமாய் மாறி தூவிக்கொண்டேயிருக்கின்றன. எழுதுபவன் அதனை நிறங்களற்ற எழுத்தாய் கவிந்து வடியும் மலைகளை விழுங்கிய மேகம்...

அலைபுரளும் எதிரெதிர் மாயத்தில் புதைந்து நிற்கிறது எழுத்தின் சுயம். அலைகளின் காலமற்ற கரைதேடும் அலைச்சல்களின் ஊடாகப் பயணம் கொள்கிறது எழுதுபவனின் வாழ்வூ. எழுத்தின் தேடுதலில் நிலத்தில் நிறைந்துள்ள நீர்ப்பரப்புகளில் தோன்றிய அலைகள் தன் ஒவ்வொரு புள்ளியிலிருந்தும் நீர் காக்கைக் குஞ்சுகளால் இறக்கைகளை விரித்து நீரில் எங்கும் தவழ்ந்து பறக்க எத்தனிக்கின்றன. நீர் வாங்கும் வெம்மையில் சிறகடிக்கும் அலைப்பறவைகள் காற்றின் திசைகளில் உருமாறி அலைகின்றன...

நத்தைகளின் தேவதை

அவளின் காலடி ஓசை நுகர்ந்த நத்தைகள்
வெகு தொலைவில் ஊர்ந்தன
இருளாய் அடியெடுத்து வந்தவள்
நீர்க்கரையில் நின்று இறக்கைகளை விரித்தாள்
உதிர்ந்த வாசனைகளின் வழி
நத்தைகள் அவளை அடைந்தன
திரவக்குரலெடுத்து பாடிய படியே
அவளின் பிஞ்சு நிழலைப் பருகி
ஈர இதழ்களால் முத்தமிட்டு
நத்தைகள் அவளின் பாதங்களை வலம் வந்தன
முதல் நத்தையின் மீதமர்ந்தவள்
யார் கண்ணிலும் விழாத நட்சத்திரங்கள்
தன் கண்களில் மிதக்க
நத்தைகள் புடைசூழ வலம் வந்தாள்
மின்னும் இருளுலகில்
நட்சத்திரங்களுடன் பாடிக் கொண்டலைந்தாள்
பகலின் பிரகாசத்தைத் தாங்காது அழுத
நத்தைகளை உடலில் வாங்கிக் கொண்டு
கடைசிதுளி இருளின் திசையில் பயணமானாள்...
துர்க்கை

 - து.முத்துக்குமார்
உதவிப்பேராசிரியர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக