முன்னுரை
அரசியல் (Politics) என்பதற்கு ஆட்சி,
அதிகாரம் பற்றிய கோட்பாடுகளும் நடைமுறைகளும் என க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி குறிப்பிடுகிறது.
அரசியல் என்பதனுள், அரசு, அரசாட்சி, அரசை ஆளும் அரசன், நாடு, நாட்டில் வாழும் மக்கள்,
மக்களின் வாழ்க்கைத்தரம் போன்ற உட்கூறுகள் பொதிந்திருக்கின்றன. நீதி இலக்கியங்களுள்
திருக்குறள் அரசியல் பற்றி பேசும்பொழுது, மொழி, இனம், மதம், நாடு போன்றவற்றைச் சாராமல்
உலகப்பொதுமையாய் எல்லோருக்கும் பொருந்துவனவாய்
பேசுகிறது. அரசு என்பதன் பொருளை அறியமுற்படும்பொழுது பல்வேறு கருத்துக்களும்
அகராதிகள் தரும் விளக்கங்களும் அரசியல் குறித்த அடிப்படையை உணருவதற்கு அவசியமாகின்றன.
அரசியல் பொருண்மை
அரசியல்
என்பதற்கு “நாடு ஒன்றினை ஆட்சிபுரிந்திடும் முறை, ஆட்சிபுரிவது பற்றிய பல்வேறு கட்சிகளின்
கொள்கைகள் மற்றும் நடைமுறைகள்” எனவும், அரசாங்கம்
என்பதற்கு “நாடு ஒன்றினை நிர்வகிப்பதற்காக அதற்கென்றே அதிகாரங்கள் வரையறுக்கப்பட்ட
ஒரு அமைப்பு (Government)” எனவும், அரசியல் சட்டம் என்பதற்கு “அரசாங்கத்தின் அதிகாரம்
கடமைகள் ஆகியவற்றோடு குடிமக்களுடைய உரிமைகள் போன்றவற்றையும் வரையறை செய்யும் அடிப்படைச்
சட்டம்” எனவும் நர்மதாவின் தமிழ் அகராதி குறிப்பிடுகிறது.
”அரசு என்ற சொல்லுக்கு “அரசன்”,
“இராச்சியம்”, “அரசாட்சி” என்ற பொருள்கள் (தமிழ்-தமிழ் அகர முதலி) வழங்கப்படுகின்றன.
அரசன் என்பது “நாடாள்வான்” (அரசு) எனும் “தலைமையையும்”, இராச்சியம் என்பது ஆளப்படும்
பகுதி என்ற “இடத்தை” (நிலைத்தை)யும், அரசாட்சி என்து “அரசு நிருவாகம்” என்ற (தலைமையின்)
கருவியையும் குறிப்பன. (பக்.33)” என பேராசிரியர் இராஜமுத்திருளாண்டி குறிப்பிடுகிறார்.
“பல சமூகங்கள் அல்லது வர்க்கங்களை
உள்ளடக்கிய ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியானது மைய அமைப்புடைய அரசாங்கத்தின் மூலம் வரிவிதித்தல்,
படைத்திறன் கொண்டிருத்தல், சட்டங்களை இயற்றி அவற்றின்படி அனைவரையும் நடக்கச் செய்தல்,
குற்றமிழைப்போருக்கு நீதித்துறை மூலம் தண்டனை விதித்தல் முதலான பணிகளைக் கொண்டது ஒரு
முற்றுரிமை வாய்ந்தது அரசு என அரசின் பணிகளை பக்தவத்சலபாரதி விளக்குகிறார்.
திருக்குறள்
கூறும் அரசியல் நெறிகள்
திருக்குறளில் சொல்லப்பட்ட அரசியல் அறநெறிகள் அக்காலத்தேவை
கருதி சொல்லப்பட்டாலும் எக்காலத்துக்கும் எந்நாட்டு அரசியல் அணுகுமுறைக்கும் எடுத்துக்காட்டாய்
விளங்கி, அரசு செயல்படவேண்டிய முறைகளின் நுட்பங்களை எடுத்தியம்புகிறது. படை, குடி,
கூழ், நட்பு, அமைச்சு, அரண் ஆகிய உறுப்புக்களை உடையதாக திருக்குறள் அரசியலை விவரிக்கிறது.
அரசியல் அதிகாரங்களில் அரசனின்
இயல்புகள், மேற்கொள்ளவேண்டிய நெறிமுறைகள், அவன் ஆற்றவேண்டிய கடமைகள், நாட்டின் சிறப்பு,
நாட்டில் வாழும் மக்களின் சிறப்பு போன்ற செய்திகளை, இறைமாட்சி, கல்வி, கல்லாமை, கேள்வி,
அறிவுடைமை, குற்றங்கடிதல், பெரியாரைத்துணைக்கோடல், சிற்றினம் சேராமை, தெரிந்து செயல்வகை,
வலியறிதல், காலம் அறிதல், இடன் அறிதல், தெரிந்து தெளிதல், தெரிந்து வினையாடல், சுற்றம்
தழால், பொச்சாவாமை, செங்கோன்மை, கொடுங்கோன்மை, வெருவந்த செய்யாமை, கண்ணோட்டம் ஒற்றாடல்,
ஊக்கம் உடைமை, மடியின்மை, ஆள்வினை உடைமை, இடுக்கண் அழியாமை ஆகிய இருபத்தைந்து அதிகாரங்களில்
திருக்குறள் அரசியல் பற்றியும் ஆட்சிமுறை பற்றியும் உரைக்கிறது.
நாட்டை ஆளும் அரசு
நாட்டை ஆளும் அரசு எப்படி இயங்க வேண்டும். அரசு எவ்வாறு செலுத்தப்படவேண்டும் என்பதை
வள்ளுவர் கீழ்வருமாறு உரைக்கிறார். அரசுக்குப் பொருள் சேரும் வழிகளை மேலும் உருவாக்குதலும்,
அப்படிச் சேர்த்த பொருளை முறையாகத் தொகுத்தலும், அவற்றை தகுந்த முறையில் காத்தலும்,
காத்தவற்றை தக்க செலவீனங்களுக்குச் செய்தலுமே வல்லமையான அரசு என்கிறார்.
“இயற்றலும்
ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும்
வல்ல தரசு”
(குறள். 385)
அரசின்கீழ்
இயங்கும் நாடு
அரசின்கீழ் இயங்கும் நாடானது, பசியில்லாமலும், பிணியில்லாமலும்,
அயல்நாட்டின் பகையில்லாமலும் இருத்தலே நலமாக அமையும். நாட்டினது அரசு நாட்டுப்பொருளால்
பாரபட்சமின்றி அனைவருக்கும் பசிதீர்க்கும் அரசாகவும், பற்பலத் திட்டங்களின் வழி நாட்டு
மக்களின் சுகாதாரத்தைப் பேணும் அரசாகவும், மற்றைய நாடுகளுடன் பகைகொள்ளாது அமைதியை விரும்பும்
நாடாகவும் இருப்பதையே சிறந்த நாடென திருக்குறளானது நாடு இருக்கவேண்டிய இயல்பினை எடுத்துரைக்கிறது.
”உறுபசியும்
ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா
தியல்வது நாடு”
(குறள்.734)
ஆட்சி செய்வோருக்கு இனியது
சமுதாயத்திலுள்ள குடிமக்கள் வாழ்க்கை
நன்னிலை பெற செம்மையான நெறிகளை வகுத்து ஆட்சிபுரிதல் அரசின் கடமையாகும். மக்களின் இயல்பையும்,
தேவைகளையும் உணர்ந்து செயல்படும் செங்கோன்மையாக அறம் தவறாது, அல்லவை நீக்கி அரசானது
சமுதாயத்தினை மேன்மையுறச் செய்தல் வேண்டும் என்கிறது கீழ்வரும் குறள்.
“அறனிழுக்கா தல்லவை நீக்கி மறன்இழுக்கா
மானம் உடையது அரசு”
(குறள்.384)
அரசியல் நெறி
குடிமக்களுக்கு வேண்டியவற்றைச்
செய்துகொடுக்குத்துச் சமுதாயத்தை மேன்மையுறச்
செய்யும் அரசையும் அரசனையும் இவ்வுலக உயிர்கள் அடைக்கலமாகக் கொண்டு வாழும் என
திருக்குறள் அரசியல் நெறியினை நயம்பட உரைக்கிறது.
“குடிதழீஇக்
கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ
நிற்கும் உலகு.
(குறள்.544)
அரசின் தொழில்
குடிமக்களை வருந்தவிடாமலும் தானும் வருந்தாமலும் மக்களைக்
காத்து மக்களுக்குத் துன்பம் விளைவிப்பவரை அடையாளங்கண்டு அவர்க்கு தண்டனையளித்துத்
தன் பணியைச் செவ்வனே செய்பவரே நல்ல ஆட்சியாளர் எனவும். குற்றத்தை கடிந்துரைத்தல் ஆள்பவருக்கு
வடுவாகாது. மாற்றாக அது ஆள்பவரின் தொழிலே ஆகும் என்கிறது இக்குறள்.
“குடிபுறங்
காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று
வேந்தன் தொழில்”
(குறள்.549)
அரசுக்குத் துணையாவன
நாட்டை ஆளும் அரசுக்கு துணைநிற்பவர்கள் அமைச்சர்கள். இம்மரபு
அக்காலம் தொட்டே ஆட்சிமரபாக இருக்கின்றமையைக் காணமுடிகிறது. நாட்டை ஆள்பவர் முதல்வராகிறார்.
முதல்வருக்குத் துணையாக அமைச்சர்கள் இருக்கிறார்கள். இவ்வமைச்சர்கள் எங்ஙனம் தேர்ந்தெடுக்கப்படுதல்
நலம் என்பதை அமைச்சு அதிகாரத்தின்வழி வள்ளுவர் சுட்டுகிறார்.
“அறனறிந்து
ஆன்றமைந்த சொல்லான் எஞ்ஞான்றுந்
திறனறிந்தான்
தேர்ச்சித் துணை”
(குறள்.635)
அறநெறியினை நன்கு உணர்ந்தவராகவும்,
சொற்திறன் கொண்டவராகவும், செயல்திறன் உடையவராகவும் இருப்பவரே ஆலோசனைகள் கூறக்கூடிய
துணையாக அரசுக்கு விளங்க முடியும் என்கிறது மேற்காணும் குறள்.
அரசின் செங்கோன்மைப்
பாங்கு
குற்றங்களை
ஆராய்ந்து எவரிடத்திலும் பாரபட்சம் காட்டாமல், இவர் வேண்டியவர் இவர் வேண்டாதவர் எனப்பாராது
நடுநிலையோடு குற்றத்தினை அறிந்து தண்டனை வழங்கச் சொல்லும் மன்னனின் செங்கோன்மையை வள்ளுவர்
பின்வருமாறு உணர்த்துகிறார்.
“ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து
யார்மாட்டும்
தேர்ந்து செய்வதே முறை”
(குறள்.541)
இக்கருத்தினை அடியொற்றிய நான்மணிக்கடிகையின் பாடலொன்று,
மன்னன் என்பவன் எத்தகையவரிடமும் ஒருசார்பின்றி ஆட்சிபுரிவதே நீதிமுறை எனவும், நடுநிலையோடு
இருந்து ஆராய்ந்து நடப்பவனே அரசாளும் இயல்புடையவனாவான் எனவும் அரசாளும் தகைமையினைச்
செப்புகிறது.
“கண்ணோட்டம் இன்மை முறைமை தெரிந்து ஆள்வான்
உண்ணோட்டம் இன்மையும் இல்” (நான்மணிக்கடிகை.96)
எது நல்ல நாடாகும்
நாடானது குறைவில்லாத விளைச்சலைப் பெற்றுவிளங்குதலும், அதன்வழி
குறைவிலாது அறநெறி அறிந்தவர் வாழ்தலுமாகிய பண்புகளைக் கொண்டநாடு செல்வமிக்கோர் நாடாகச்
சேரும் என நாட்டினுடைய இயல்பினை இயம்புகிறது. இங்கு அறநெறிக்கு அடிப்படை விளைச்சலால்
நாடு செழிப்படைதலே. நாடு வறுமையுறின் அறநெறிக்குக் கேடு விளைந்து மக்களும் துன்பம்
நேரும் என்பது மறைபொருளாக உரைக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.
“தள்ளா
விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும்
சேர்வது நாடு”
(குறள்.731)
வள்ளுவர் சுருங்கச் சொன்ன
இக்கருத்தை சிறுபஞ்சமூலத்தின் பாடலொன்று சற்றே விரித்துச் சொல்லுகிறது. வயலில் நீர்
உயரவே நெல் உயரும். நெல் உயர்ந்து வளங்கொழித்தால், அதனை நம்பிவாழும் சீர்பெற்ற குடிகள்
உயரும். பல்வேறு குடிகளாகிய மக்கள் உயர்ந்தால் அரசர் உயர்வடைவார் என உலகு உரைக்கும்
என்கிறது.
“நீர்சான்று உயரவே நெல் உயரும் – சீர்சான்ற
தாவாக் குடிஉயரத் தாங்கு அருஞ்சீர்க் கோ
உயர்தல்
ஓவாது உரைக்கும் உலகு.”
(சிறுபஞ்சமூலம்.44)
அரசுக்குக் கூடாதன
நாட்டை ஆள்வோர் தன்னலத்தைப் பெரிதாகக் கொண்டு நாட்டு வளங்களைச்
செழிக்கச் செய்யாமல், கிடைத்த பொருளை வீணாய்ச் செலவிட்டு பொருளனைத்தும் தீர்ந்தபின்பு,
அரசை நடத்த மீண்டும் மக்களிடமே பொருள்வேண்டி நிற்கும் நிலையை மிகக் கடுமையாக வள்ளுவர்
சாடுகிறார். செங்கோல் ஏந்திய மன்னன் மக்களிடத்தில்
பொருள்வேண்டுதல் என்பது வழிப்போக்காகச் செல்பரிடம் வழிப்பறி செய்பவன் வேல்எனும் ஆயுதம்
கொண்டு பொருள் பறிப்பது போன்றதாகும் என்கிறார் வள்ளுவர்.
“வேலோடு
நின்றான் இடுஎன்றது போலும்
கோலோடு
நின்றான் இரவு”
(குறள்.552)
இங்கு இரவு என்பது மக்களிடம்
மன்னன் வேண்டிநிற்பதைக் குறிக்கிறது.
முறைசெய்து
காக்கும் அரசுக்குப் புகழ்
நாட்டையாளும்
ஆட்சியாளனாகிய மன்னவன் கற்றறிந்து, செங்கோலாட்சி புரிந்து, பகிர்ந்துண்டு, தக்கநெறியில்
பொருள் சேர்த்து, சீரிய திட்டங்கள் வகுத்து, நல்லியல்புடைய அமைச்சரவையோடு கூடியிருந்து
தம் ஆட்சித்திறத்தால் பொருள் வழங்கி நல்லாட்சி தருபவனாக இருத்தலே நலமுடையதாகும். இத்தகைய
நெறிமுறைகளை உணர்ந்து ஆட்சி செய்பவரை மக்கள், நல்லாட்சியாளர் எனக் கருதுவதோடு மட்டுமல்லாமல்
ஒருபடி மேலே சென்று இறைவனுக்கு இணையாக வைத்துப் போற்றுவர் என்கிறது திருக்குறளின் அரசியல்
நெறி.
“முறைசெய்து காப்பாற்றும் மன்னவன்
மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்”
(குறள்.388)
திருக்குறள் கூறும் இத்தகைய அரசியல் நெறிகள் எக்காலத்திற்கும்
பொருந்துவனவாக இருப்பதே இதன் தனித்தன்மையாகும். ”திருவள்ளுவர் வாழ்ந்த காலம் முடியாட்சி
காலம். அந்த காலத்தில் அவர் அரசர்க்குச் சொன்னவையாக அமைந்த அறிவுரைகள் இன்று குடியாட்சிமுறையில்
உள்ள தலைவர்களுக்கும் பொருந்தும் மொழிகளாக உள்ளன. (ப.77)” என மு. வரதராசன் அவர்கள்
வள்ளுவரின் அரசியல் தொலைநோக்குப் பார்வையை குறிப்பிடுகிறார்.
நிறைவுரை
அரசியல் உட்கூறுகளான
நாடு, நாட்டின் அரசு, அரசின் ஆட்சிமுறை, அமைச்சு, இவற்றின்கீழ் வாழும் குடிமக்கள் என
அரசியலுக்குள் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே சொல்லப்பட்ட அறநெறிமுறைகளைப்
பார்க்கும்பொழுது எந்நாட்டவருக்கும் உகந்தவையாக இருக்கின்றன. திருக்குறள் கூறும் அரசியல்
கருத்துக்கள் செவ்வியல் தன்மையால் உயர்ந்து நிற்கின்றன.
துணைநூல்கள்
1.
இலக்கியத்தில் மனித
உரிமைகள், 2008, இராஜமுத்திருளாண்டி, குமரன் பதிப்பகம், தி.நகர், சென்னை-17.
2.
க்ரியாவின் தற்காலத்
தமிழ் அகராதி, 2008, சென்னை.
3.
தமிழ் இலக்கிய வரலாறு,
2010, மு.வரதராசன், சாகித்ய அகாதெமி, புதுதில்லி-1.
4.
திருக்குறள் (பரிமேலழகர்
உரை)
5.
நர்மதாவின் தமிழ் அகராதி,
2005, நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, தி.நகர், சென்னை-600017.
6.
பண்பாட்டு மானுடவியல்,
பக்தவத்சலபாரதி, 2009, மெய்யப்பன் பதிப்பகம்,
சிதம்பரம்-608001.
7.
பதினெண்கீழ்க்கணக்கும்
தமிழர் வாழ்வும், 2007, சாமிசிதம்பரனார், அறிவு பதிப்பகம், சென்னை-14.
-ச. தமிழரசன்
விரிவுரையாளர் (சுயநிதிப்பிரிவு)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக