வெள்ளி, 11 செப்டம்பர், 2015

P 111 இக்கால இலக்கியம் (கூறு 3)

அ) அப்துல் ரகுமான்
1960 க்கு பின் தமிழ்க் கவிதை உலகுக்கு வந்தவர் கவிஞர் அப்துல் ரகுமான், வாணியம்பாடி  இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார். ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.
அப்துல் ரகுமான் மதுரையில் வைகை ஆற்றின் தென்கரையில் 1937 நவம்பர் 2 ஆம் நாள் உருதுக் கவிஞர் மஹி என்னும் சையத் அஹமத் – ஜைனத் பேகம் இணையருக்கு மகனாகப் பிறந்தார். தனது தொடக்கக் கல்வியையும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் மதுரையில் உள்ள பள்ளிகளில் பெற்றார். பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில்
சேர்ந்து இடைநிலை வகுப்பில் தேறினார். தொடர்ந்து அக்கல்லூரியிலேயே பயின்று
இளங்கலை, முதுகலை பட்டங்களைப் பெற்றார்.
சென்னை  தரமணியில்  அமைந்துள்ள  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்  அதன் இயக்குநராகப் பணியாற்றிய
ச. வே. சுப்பிரமணியத்தை வழிகாட்டியாகக் கொண்டு புதுக்கவிதையில் குறியீடு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றதும் தியாகராசர் நடத்திய தமிழ்நாடு என்னும் நாளிதழில் மெய்ப்பு திருத்துநராகச் சிலகாலம் பணியாற்றினார். அப்பொழுது தமிழகத்தில் இருந்த ஐந்து இசுலாமியக் கல்லூரிகளுக்கு விரிவுரையாளர் பதவிக்காக விண்ணப்பித்தார். அவற்றுள் வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் பணியாற்ற அவருக்கு 1961 ஆம் ஆண்டில் வாய்ப்புக் கிடைத்து. அங்கே சிற்றுரையாளர், விரிவுரையாளர், பேருரையாளர், பேராசிரியர், எனப் படிப்படியாக உயர்ந்து 1991ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வுபெற்றார். இதில் 20 ஆண்டுகள் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியாற்றினார். கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர். 
படைப்புகள் சில: பால் வீதி, நேயர் விருப்பம், ஆலாபனை, பித்தன், கண்ணீர்த்துளிகளுக்கு முகவரி இல்லை, பாலை நிலா போன்ற கவிதைத் தொகுப்புக்ளையும் விதைபோல் விழுந்தவன், முத்தமிழின் முகவரி, இறந்ததால் பிறந்தவன் உள்ளிட்ட கவியரங்கக் கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.






கலியுக இதிகாசம்
(தொகுப்பு: பால்வீதி)
தீபங்கள்
தலைகீழாய்த் தொங்கும்
இந்த யுகத்தில்.

அவதார வாசல்தோறும்
சிவப்பு முக்கோணக்
கம்சர்கள்.
காமத்தின்
தர்மார்த்த மோட்சங்களை
உபதேசிக்கும்
‘புத்தலை’த் தொடர்கதையை
உலோகத் தந்தம்
பொறித்துவர
வாய்மலர்ந்தருளுகிறார்
வியாச பகவான்.

பெயர்துறந்த இளங்கோக்கள்
பத்தினிப்பெயர் அணிந்து
சிவப்பு விளக்கு வீதியெங்கும்
சீத்தலைச் சாத்திகளை
மோப்பம் பிடித்து அலைகின்றனர்.

கண்ணபெருமான்களின்
பொன்மாளிகைச் சுலோகங்களில்
மயங்கி
இருக்கும் அவலையும்
பறிகொடுக்கிறார்கள்
குசேலர்கள்.

எண்ணிக்கையே தர்மமாகிய
குருஷேத்திரத்தில்
வெற்றிகளெல்லாம்
கௌரவர்களுக்கே
போய்ச் சேர்கின்றன. 
அவர்கள் விருந்து மண்டபத்தில்
‘காபரே’ ஆடுகிறாள்
பாஞ்சாலி.

பாரங்களைத் தானே துறந்து
சுய ஆரண்யங்களில்
சூர்ப்பனகைகளுடன்
அம்மணமாய்த் திரியும்
இராமர்கள்.

மாயமான்களின் மோகத்தில்
இராவணர்களிடம்
சோரம்போகும்
சீதைகள்.

விற்க ஏதும் இல்லாததால்
கண்ணகிகளைப்
பேரம் பேசும்
கோவலர்கள்
கோவலரின் படுகொலையை
மூடிமறைக்க
உயிரோடு கொளுத்தப்படும்
கண்ணகிகள்.

உதயகுமாரர்களுக்குத்
தங்கள் உடல்களையே
அட்சய பாத்திரமாக்கித்
தம்வயிற்றுப் பசியைத்
தனித்துக்கொள்ளும்
மணிமேகலைகள்.
இவர்களே
இந்த யுகத்தின்
இதிகாசப் பாத்திரங்கள்.


ஆ) கவிஞர் சிற்பிபாலசுப்ரமணியன்

கோவை மாவட்டம்பொள்ளாச்சி வட்டம், ஆத்துப்பொள்ளாச்சி கிராமத்தில் பிறந்தவர். கேரளத்தில் பள்ளிக் கல்வி பயின்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., ஆனர்ஸ் (தமிழ் இலக்கியம்) கற்று, 1958 முதல் பொள்ளாச்சி நல்லமுத்து மகாலிங்கம் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தவர். 1989-இல் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்று 1997 வரை சிறப்புறப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். லலிதாம்பிகா அந்தர்ஜனத்தின் ‘ அக்னி சாட்சி’ நாவலைத் தமிழில் மொழிபெயர்த்தமைக்காகவும் (2001), ‘ஒரு கிராமத்து நதி’ என்ற  கவிதைத் தொகுப்பிற்காகவும் (2003) இருமுறை சாகித்ய அகாதமி விருது பெற்றவர். தமிழக அரசின் பாவேந்தர் விருது, குன்றக்குடி ஆதீனம் கபிலர்விருது, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க மகாகவி உள்ளூர் விருது, மூத்த எழுத்தாளருக்கான லில்லி தேவசிகாமணி விருது எனப் பலவிருதுகள் பெற்றவர். வானம்பாடி கவிஞர்களுள் ஒருவர்.
படைப்புகள்: நிலவுப் பூ, சிரித்த முத்துக்கள், ஒளிப்பறவை, சர்ப்ப யாகம், புன்னகை பூக்கும் பூனைகள், மௌன மயக்கங்கள், சூரிய நிழல், இறகு, ஒரு கிராமத்து நதி, பூஜ்யங்களின் சங்கிலி, பெருமூச்சுகளின் பள்ளத்தாக்கு, பாரதி - கைதி எண் : 253 போன்ற கவிதைத் தொகுப்புகளையும் ஆதிரை என்னும் கவிதை நாடகத்தினையும் வெளியிட்டுள்ளார்.

இது எங்கள் கிராமம்
(கவிதைத் தொகுப்பு: புன்னகை பூக்கும் பூனைகள்)

வலம்புரியாய்
வளைந்து வளைந்து
ஊரைச் சுற்றி வலம்வரும்
ஒரு நீலக் குதூகலம்
எங்கள் கிராமத்து நதி.


கிழக்கில் தொடுவானம் வரை
பச்சை சதுரங்கப்
பலகை வயல்கள்.

நெளியும் நதியின்
இடுப்புக் குழந்தையாய்
அடம் பிடிக்கும் கரையோர
நாணல் கோணல்கள்!
நடுவே ஒரு
அத்திமர இறுமாப்பு.

செல்ல நாய்க்குட்டி போல்
காலை நக்கிக் கழுவும்
நதிக்கரை ஏறினால்
எங்கள் கிராமம்.

ஆடி மழைக்கத்தி முகம் கிழிக்க
ஐப்பசியின் சாரல் ஒத்தடம் கொடுக்க
அசையாத எருமைகளாய்க்
கரும்பாறை படுத்திருக்கும்
ஊர்த் தெருக்கள்
அங்கு
நவக்கிரகங்கள் போல்
ஒருவாசல் மறுவாசல்
பார்க்காத வீடுகள்.

பன்றிகள் மேய்ச்சலிடும்
பக்கத்தில் உருக்குலைந்து
கற்பூரம் எரிந்தெரிந்து கரிந்த
பெருச்சாளி முகம் பார்த்து
நொந்து
ஆற்றுத் துரையில்
நீராடிக் கரையேறும்
ஈர உலாக் கண்டபடி
விழித்திருக்கும்
விநாயகப் பெருமான்.

செட்டியார் கடையிருக்கும்
தெற்கு ‘வளைவு’ ஓரத்தில்
பகலிரவு தெரியாமல்
காலம் மரணித்த
சாக்குப் படுதா மறைப்பில்
காதுகளில் காசு செருகியபடி
முனகி முணுமுணுத்து
சிறிதாக விசிலடித்துத் தவம் புரியும்
சீட்டாட்டச் சித்தர்கள்

இங்கு
தவறாமல் ‘வருகை’ப் பதிவு செய்யும்
பெரிய ‘கை’
சுப்புக்குட்டி வாத்தியாருக்கு
‘சோக்கர்’ வந்த பரபரப்பில்
ஆனந்த காலாட்டம்.

தேர்தல் கால வாக்குறுதிகளாய்
இன்னும் கட்டி முடிக்கப்படாது
மண்குதிரை காவல் செய்யும்
மதுரை வீரன் கோயில்
அங்கு
துருப்பிடித்த வேல்களைச்
சுற்றி விளையாடுகின்ற
சப்பைக்கால் மாறுகண்
சளிமூக்குச் சோகைகள்
அரிசனக் குழந்தைகள்!


குருவிகளைச் சரம் கோத்துத்
தெருவோரம் நின்றலுக்கும்
மின்சாரக் கம்பங்கள்
பகலில் தெரிவதுண்டு
இரவில் கிராமத்து இருட்டுக்கு
இவை மௌன சாட்சிகள்
எரிவதில்லை – காரணம்
தெரிவதில்லை.
மயானத்துப் பாதை
வெயிலின் போதையில்
சொகம் சுமந்த பூவரசு நிழலில்
ஒரு சந்தோஷ அலைக் குலுங்கல்.

தாள லயத்தோடு
மாட்டுக்கு லாடமடிக்கும் தருணம்
கயிறவிழ மாடு உதற
சாணத்தில் கவிழ்ந்து விழும்
உருமாலைக் கவுண்டருக்கு
சிறுவர் சிரிப்பு அபிஷேகம்.

ஆற்றின் பாறையிடுக்குகளில்
நீளக் குச்சிகளால் துழாவி
விலாங்கு மீன் பிடிப்பவரின்
லாவகத்தை அலட்சியப்படுத்தியபடி
ஈரமணல் நீர்க்கசிவில்
உயிரோடு பூத்திருக்கும்
கோரைக்கால் நாரைகள்

பனையடி விசிறி நிழல்களில்
அணிவகுத்த தூக்குச் சட்டிகளைப்
பசிப்பொழுது நினைவூட்ட
சூரியன் முதுகில்
அறைந்தறைந்து கருமை பூச
அரிவாளாய்க் கூனி
களையெடுக்கும் பெண்கள்
தலை நிமிரும் நேரம் . . .
ஒரு வனதேவதை போல
ஆற்றங்கரை நாணல் புதரிலிருந்து
மீசை அரும்பாத இளவட்டம்
ஒருவனுடன்
வெள்ளைச் சேலையை ஒதுக்கியபடி
வெளியேவரும்
சின்னத் தாஜ்மகால்
கிராமத்து இளம் விதவை.

கீரைக் கடைசலும்
பருப்புத் துவையலும்
விழுது நெய்யும்
வெட்டியெடுத்த கட்டித் தயிரும்
நாரத்தை ஊறுகாயும்
‘ராக் கூடை’ யில் சுமந்தபடி
‘சூ . . . சூ’ என்று காகத்தை விரட்டி
மச்சானுக்குச் சாப்பாடு
எடுத்துக்கொண்டு போகும்
சின்ன நடைக்காரி தேவாத்தாளை
இட்டேரிக் கள்ளிகளில் பதுங்கி
ஓணான்கள் வேவு பார்க்கும்

கன்னங்கள் உப்ப
உப்புக் கடலையை மென்றபடி
வண்ணான் துறையில்
அழுக்குப் பொதியோடு வந்த
சலவைக்கார ராமன்
தண்ணீரில் துணிகள் மிதக்கவே
சாராய நெடியுடன் கர்ஜிக்க

பாறையில் வர்ண ஓவியம்
விரித்த சேலை அழகில் சொக்கி
கருப்புச் சிலையாய்ச் சமைத்த
செல்லமகள் சீரங்காள்
திடுக்கிட்டு உயிர்ப்பாள் . . .

பஞ்சுத் தலை நடுங்க
ராட்டை சுற்றும் குருட்டுத்தாய்
தொணதொணப்பு கேளாமல்
யந்திரமாய்த்
தறிநெய்யும் கண்ணப்பன்
புரட்டாசி மாலை
சவுண்டம்மன் கொலுவில்
‘அம்மா நீசிக்கோ’ என்று
வாளெடுத்து நாக்கில்
அலகு போட்ட ஞாபகத்தில்
கண்கள் சொருகுவான்.

மேற்கே
ஆறாம் நம்பர் டவுண் பஸ்
புழுதிகிளப்பும் சாலையோரம்
வெள்ளிக்கண் மாரியாத்தா
கோவிலில்
அன்னக்காவடி சாமியார்
குட்டிப் பாம்புச் சடைத்தலை
சிலிர்க்க
கஞ்சாக் கிறுகிறுப்பில்
பெட்டிக்கடை திருமாத்தாள்
அம்மைத் தழும்பு முகத்தின்
நிலாச் சுகச் சுவடுகள்
வர்ண நினைவுக் கோலாகலமிட
தியானத்தில் மூழ்குவார்.

உழைப்பாளிகள்
தோட்டக் காடுகளில்
உருகிக் கருகிப்போய் விட்டதால்
பகலெல்லாம்
உயிரற்ற மௌனத்தில்
உறைந்து சயனித்த கிராமம்
பம்பை குமுகுமுக்க
தப்பட்டை தடதடக்க
ஆபாசச் சைகையுடன்
கரகத்தாட்டம் திமுதிமுக்க
சாராயக் கும்பங்கள்
பரிமளிக்க
கறிக் குழம்பு கமகமக்க
மாரியம்மன் திருவிழாவில்
வருஷத்துக்கு
ஒருமுறை மட்டும்
உயிர் பெற்று விழிக்கும்
எங்கள் கிராமம்.

கண்ணீர்த் துளித் தீவு
(தொகுப்பு:  புன்னகை பூக்கும் பூனைகள்)
முன்னை இட்ட தீ
அடிமை வாழ்விலே
பின்னை இட்ட தீ
தேயிலைத் தோட்டத்திலே
இன்னும் இட்ட தீ
இன வெறுப்பிலே
அன்னை லங்கையின்
ஆத்மா வேகுதே . . .
புத்தம் கரணம் கச்சாமி
தருமம் மரணம் கச்சாமி
சங்கம் வரணும் கச்சாமி

இ) ஆத்மநாம்
ஆத்மநாம் (1951 - 1984) தான் ஒரு கவிஞர் என்கிற அடையாளத்தை விட ஒரு இலக்கியவாதி என்று அழைக்கப்படுவதையே விரும்பினார். அதற்கிணங்க மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர், விமர்சகர் என விரிவாக இயங்கியவர். ‘ழ’ என்னும் கவிதை இதழின் ஆசிரியராகவும் இருந்தார். ஓவியத்திலும் இசையிலும் ஈடுபாடு கொண்டவர். தமிழ்நாட்டின் சமகால ஓவியர்களுடன் தொடர்பில் இருந்தார். இருண்மைக் கவிதைகள் புனைவதில் ஆத்மநாமிற்குத் தனித்த இடமுண்டு. இலக்கியவாதிகள் முதல் தீவிர இடசாரிகள்வரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்.1984 இல் தனது 33ஆம்வயதில் தம்மை இவ்வுலக வாழ்விலிருந்து நீத்துக் கொண்டார்.

சுதந்திரம்
(தொகுப்பு: ஆத்மநாம் கவிதைகள்)
எனது சுதந்திரம்
அரசாலோ தனிநபராலோ
பறிக்கப்படுமெனில்
அது என் சுதந்திரம் இல்லை
அவர்களின் சுதந்திரம்தான்

உனக்கொரு அறை
உனக்கொரு கட்டிலுண்டு
உனக்கொரு மேஜை உண்டு
உனக்கொரு ஒரே உரிமை
சிந்திப்பது மட்டும்தான்

மாற்றானைத் துண்டும் உன் எழுத்து
எப்படிச் சமூகம் அனுமதிக்கும்

மலைகளைப் பார்
மரங்களைப் பார்
பூச்செடிகளைப் பார்
இடையறாது ஓடும்
ஜீவ நதிகளை பார்
பரந்த கடலைப் பார்
இதமூட்டும்
கடற்கரையைப் பார்
எவ்வளவு இல்லை நீ பார்க்க

ஏன் அக்கசடர்களைக் குறித்து
வருந்துகிறாய்
குமுறுகிறாய்
எழுத்துக் கூடங்களைச் சேர்க்கிறாய்

உன் வேலை
உன் உணவு
உன் வேலைக்குப் போய்வரச் சுதந்திரம்
இவற்றுக்கு மேல்
வேறென்ன வேண்டும்

சாப்பிடு தூங்கு மலங்கழி
வேலைக்குப் போ
உன் மீது ஆசையிருந்தால்
குறுக்கிடாதே.

ஈ) கவிஞர் கலாப்பிரியா
1950 – ஆம் ஆண்டு சூலை 30 – ஆம் நாள் பிறந்த,  கவிஞர் கலாப்ரியா தமிழின் நவீன  கவிஞர்களில்  குறிப்பிடத்தக்கவர்.  எழுபதுகளில்  எழுதத் தொடங்கியவர்.
கலாப்ரியாவின் இயற்பெயர் சோமசுந்தரம். அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் கவிதை (இரங்கற்பா) எழுதிய சோமசுந்தரம், வண்ணநிலவனின் கையெழுத்து இதழான  பொருநையில் கவிதை எழுதும் போது தனக்குத் தானே 'கலாப்ரியா' என்று பெயர் சூட்டிக்கொண்டார். பின்னர் கசடதபறவில் கவிதைகள் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார். கசடதபறவிற்குப் பின்  வானம்பாடிகணையாழிதீபம்  ஆகிய இதழ்களில் எழுதினார்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வங்கிப் பணிகளுக்கு இடையில் தன்னைச் சுற்றி நிகழும் விஷயங்களைக் கவிதைகளில் பதிவு செய்து வருகிறார் 'கலாப்ரியா'.
படைப்புகள்: வெள்ளம், தீர்த்தயாத்திரை, மற்றாங்கே, சுயம்வரம் மற்றும் கவிதைகள், அனிச்சம், வனம் புகுதல், எல்லாம் கலந்த காற்று, நான், நீ, மீன், உளமுற்ற தீ, தண்ணீர்ச் சிறகுகள் உள்ளிட்ட கவிதைத்தொகுப்புகள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். 

அறிந்தவைகளால் அறியப்பட்டிருக்கிறார்கள்
(தொகுப்பு: சுயம்வரம் மற்றும் கவிதைகள்)

1.    தக்கார் தகவிலாரென்பது
      அவரவர் எச்சத்தாற் காணப்படும்
      நாம் இந்தியர்கள்,
      அறியப் பட்டிருக்கிறோம்
      இரந்தும் உயிர்வாழ
      நேர்ந்தது.

2.    ஜலதாரை முதிர்ச்சியாலும்
      சுட்ட செங்கலாலும்
      அறியப்படும்
      மொகஞ்ச தாரோ
      நாகரீகம் – ‘மணல்
      பேப்பர் வெயிட்’டால்
      அறியப்படும்
      பார்லிமெண்டரி நாகரீகம்.

3.    ஐந்தாண்டு, மற்றும்
      உருளைத் திட்டங்களின்
      பயன்கள்
      ஐ. எம். எஃப் ஆல் அறியப்படும்.

4.    அக்காவின் கல்யாணம்
      அப்பாவின் கிராஜுவிட்டியை
      விழுங்கப்போகும் பி. எஃப் லோன்
      அம்மாவுக்கு இன்னும் வராத
      மெனோபாஸ்,
      சமயக் காத்திருக்கிற
      சிரிக்கிற
      தங்கச்சிகள் . . .
      சிவனை வணங்க மறந்தும்
      இவளைக் கூறு போடும்
      கூட்டுக் குடும்பம் . . .
      ஆபீஸில்
      இதே தலைவலிகளுடன்
      (ஆனாலும் உதடு மடித்துச் சிரிக்கும்)
      சுமாராயிருக்கும்
      இவளின் காவியத் தலைவி . . .
      கவலைப்படுவதும் – ஒரு
      கவிதை எழுதச் சிந்திப்பதும்
      ஒன்றேயென்றன் – நடுத்தர வர்க்க
      கதை நாயகனால்
      அறியப்படும்
      இந்திய சகோதரத்துவம்.

5.    ஜோல்னாச் சுமந்து
      சார்மினர் / பீடியில் புகைந்து,
      இயக்கங்களில்
      (விடுதலை வேண்டி) அமிழ்ந்து
      சி.ஐ.ஏ. லிஸ்டில் (முதலில்) பதிந்து
      அறிவு ஜீவிகளென,
      அறியப்படுவார்
      கொஞ்ச இளைஞர்கள்.

6.    மிச்சமுள்ளோர் . . .
      டி ஷர்ட்களில்;
      காதலிக்கான புதுக்கவிதைகளில்;
      கஞ்சாவில்; டிஸ்கோவில்;
      கல்லூரி வளைவுக்குள்
      சாதிச் சண்டைகளில்;
      எம்ப்ளாய்மெண்ட் எக்சேஞ்சின்
      குப்பைத் தொட்டிகளில்
      அறியக் கிடப்பார்.

7.    பொறுப்பற்ற குடிமக்களும்
      புண்ணியம் செய்த
      அரசியல்வாதிகளும்
      பாரத தேசமென்றே
      அறியப்படுவார்.

8.    பரந்து கெடப்போவதால்
      அறியப்படுவான்
      உலகியற்றியான்.

உ) பிரமிள்
பிரமிள் என்ற பெயரில் எழுதிய தருமு சிவராம், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலைப் பகுதியில் 1939 – ஆம் ஆண்டு, ஏப்பிரல் மாதம் 20 – ஆம் நாள் பிறந்தார்.  எழுபதுகளின் ஆரம்பத்திலேயே தமிழ்நாடு வந்து விட்டார். பிறகு தம் பெரும்பாலான வாழ்நாளைச்  சென்னையிலேயே கழித்தார்.  பாரதி, புதுமைப்பித்தனுக்குப் பிறகு தோன்றிய ஒரு இலக்கிய மேதை. தமிழின் முதன்மையான கவிஞர், விமர்சகர், சிறுகதையாசிரியர்.புதுக்கவிதை முன்னோடிகளுள் முக்கியமான ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவர் பானுசந்திரன், அரூப் சீவராம், பிரமிள் போன்ற பல புனைபெயர்களில் எழுதினார். அடிக்கடி தம் பெயரை மாற்றிப் புதுப்பித்துக் கொண்டேயிருந்தவர். ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர்.
சி.சு.செல்லப்பாவின் எழுத்து பத்திரிகையில், தமது இருபதாவது வயதில் எழுதத் துவங்கிய பிரமிள், நவீனத் தமிழ்க் கவிதையுலகில் தனி அடையாளம் கொண்டவர்.  ஓவியம், சிற்பம், நாடகம், மொழியாக்கம், விமர்சனக்கட்டுரைகள் என விரிந்த தளங்களில் இயங்கிய பிரமிள், நவீன தமிழ் இலக்கியம் குறித்துக் கூர்மையான விமர்சனமும் பார்வையும் கொண்டவர்.
ஆரம்பக் கல்வி மட்டும் ராமகிருஷ்ணமடம் நடத்திய இரவுப்பாடசாலையில் கிடைத்தது. தமிழின் மாமேதை என்று தி.ஜானகிராமனாலும், உரைநடையின் அதிகபட்ச சாத்தியத்தை நிறைவேற்றியவர் என்று சி.சு.செல்லப்பாவாலும் பாராட்டப்பட்டவர் பிரமிள். இளம் வயதிலேயே மெளனியின் கதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதிய பெருமை இவருக்கு உண்டு.
"கவிதைக் கோட்பாடுகளும் பாரதி கலையும்" என்ற தலைப்பில் பாரதியை மதிப்பீடு செய்து மிகச் சிறந்த கட்டுரை ஒன்றை ‘எழுத்து’வில் எழுதினார்.
படைப்புகள்: கண்ணாடியுள்ளிருந்து, கைபிடியளவு கடல், மேல்நோக்கிய பயணம், பிரமிள் கவிதைகள் என்னும் தலைப்புகளில் இவரது கவிதைத்தொகுப்புகள்  வெளிவந்துள்ளன; சிறுகதைகள் லங்காபுரி ராஜா, பிரமிள் படைப்புகள் என்னும் தலைப்புகளிலும் வெளியிடப்பட்டுள்ளன.
கவிஞர் 1997 – ஆம் ஆண்டு ஜனவரி மாதம்  6 – ஆம் நாள் காலமானார்.

வண்ணத்துப்பூச்சியும் கடலும்
(தொகுப்பு: பிரமிள் கவிதைகள்)

சமுத்திரக் கரையின்
பூந்தோட்டத்து மலர்களிலே
தேன்குடிக்க அலைந்தது ஒரு
வண்ணத்துப்பூச்சி

வேலை சரிய
சிறகின் திசைமீறி
காற்றும் புரண்டோட
கரையோர மலர்களை நீத்து
கடல் நோக்கிப் பறந்து
நள்ளிரவு பாராமல்
ஓயாது மலர்கின்ற
எல்லையற்ற பூ ஒன்றில்
ஓய்ந்து அமர்ந்தது.
முதல் கணம்
உவர்ந்த சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது.


ஊ) மலைச்சாமி
1964இல் விருதுகர் அருகேயுள்ள திம்ம நாயக்கன் பட்டியில் பிறந்தார். இவருடைய ‘முனி’ என்ற நாடகம் சங்கீத நாடக அகாதெமியின் இளம்நாடக ஆசிரியர்களுக்கான போட்டியில் சிறந்த தமிழ் நாடகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. கவிஞராக மட்டுமல்லாமல் நாடகக் கலைஞரான இவர் கூத்தர் உதயம், சுதேசிகள் ஆகிய நாடகக் குழுக்களில் பங்கேற்றிருக்கிறார். இவருடைய முதல் கவிதை தொகுப்பு “ஒதுங்கிய தெருவிலும் சோடியம் விளக்கு’ ஆகும். இக்கவிதை நூலே சற்று விரிவு படுத்தப்பட்டு ‘விலக்கப்பட்ட திருடன்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. உன்மத்தமும் அமைதியின்மையும் கொண்ட மலைச்சாமியின் கவிதைகள் உக்கிரமான படிமங்களால் தனதுகவி மொழியைக் கட்டமைத்துக் கொண்டவை.
காடு
(தொகுப்பு: விலக்கப்பட்ட திருடன்)

சிறுநெருஞ்சிக் காட்டில்
பனி கசிகிறது
தெள்ளிய வரகாய்ப்
பூக்கள் சிரிப்பன
நெருஞ்சிக் காடறியும்
பின்வாங்கிய இயற்கையின் கதை
முற்றங்களிலிருந்து விலகிச்சாடி
முத்துமுத்தாய்க்
காட்டில் சிதைந்தது நிலவு
காடுகள் பனியுண்டு
உயிர் தப்பின
பனியால் இனம் செழித்தது
அருகம்புல்
அருகம்புல் காடு ஊரை நோக்கி
முன்னேறிவரும்

சம்சாரி காடு கொண்டாடிய
மஞ்சணத்தியொடு போராடினான்
சூலிக்காடு ஒன்பது குழந்தைகளையும்
வெள்ளம் பெருக்கெடுத்த
மழைநாளொன்றில்
நிலம்பிளந்து வெளித்துள்ளிய
இளம்கன்றையும் ஈன்றாள்
ஊரோடு இயைந்தது மழை

மேற்கு மலைத்தொடர்
சமுத்திர வளைவு
கரிப்பான குணம் காட்டுக்கில்லை
ஆழவாய்க் கிணறுகளினுள்
தேனூற்று குமிழியிடும்
உப்புத் தேன் சவட்டுத் தேன்
அசலான கன்று
ரகசியங்கள் நிறைந்த
ஊர்த் தெருவெல்லாம்
அலைந்து திரிந்தது
அசலான ஒன்பது குழந்தைகளும்
அதன் வாய்க்குள் அவிந்தன
ஊர் முழுக்காடியிருந்தது
ஒருபோதும் சென்றடைய முடியாத
வழியென்று ஏதுமில்லை

ரகசியங்கள் பெருகி அதன்
வாழ்வொழுங்கைக் குலைத்தன
ரகசியங்களின் ஈட்டிவெயில்
தெருவெல்லாம்
குத்திப் புரட்டியது
காடுகள் சரசரத்தன
ஊரின் மேல் அனல் பதுமை
பறந்தது
மஞ்சணத்தி விரட்டச்
சம்சாரி காடுகளிலிருந்து
பின்னடைகிறான்
ஆலும் வேம்பும்
இலையுதிர்க்கும்
இலைகளின் இடத்தில்
ஆட்டுத்தோல் தைக்கும் ஊர்

காவி நிறச் சுவரை அண்டிக்
குழுமுகிறார்கள்
இளமை மாறாத சம்சாரிகள்
சுவர் மின்னலடித்தது
சுவரில் ஏய்த்த மழையின்
சித்திரங்கள் அழைத்தன
ரகசியங்களின் அடைமழை
அவர்களைச்
சுவரில் ஒடுக்கியது
எண்களின் ஊக்கில்
சம்சாரி தொழிலாளியாய்த்
தொங்கினான்

ஒப்பந்தத் தொழிலாளி
சவுக்கந் தோப்பில்
அயல் பறவைகள்
கூடுகட்டின
தோப்பிடம் செல்லும் பாதையில்
புளியமரங்கள் பூத்துக்குலுங்கின
கண்மாய்களின் வயிற்றில்
கருவேலத் தேக்கஙள்
தோப்புகளோ பால்வெறி கொண்டவை
சவுக்கையின் வேரில்
எந்திரங்கள் உறுமின

வெளிரிய தெருக்களில்
நடந்துபோனார்கள்
முகம் அழிந்துவரும் காட்டில்
கரிமருந்துப் புகை கவிந்தது
கூரைகளின் மேலமர்ந்து
சங்கொலி ஆணையிடும்
சந்தொஷமான சிரிப்பலையாய்க்
கிளர்ந்தது புகை
எந்திரம் நரம்பில் முறுக்கி இறுகியது

ஏரோடு களித்த
காலத்தின் பின்னணியில்
பூப்படைந்த ஒருவன் ஓர் இரவில்
எந்திரத்தின் காலடியில்
மாண்டான்

முதல் தேதி
தூக்கத்தை எழுபி வந்தது
நெஞ்சு பதற
அடித்துப் புரண்டவள் அம்மா
இருளிலிருந்து ஒழுகியது அழுகை
வீதி விளக்குகளில்
இறந்தவை போக
மீதமிருந்தவை விதிர்த்தன
இரவு கிழிய
விழித்தது கிராமம்.

எ) உமாமகேஸ்வரி
கவிஞர் உமாகேஸ்வரி தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர்.  1985 – ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார். கவிதைகளில் தொடங்கி சிறுகதை, நாவல் என்று  பரந்து எழுதி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தற்பொழுது, ஆண்டிபட்டியில் வசித்து வருகிறார்.
படைப்புகள்: நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பொழுது, கற்பாவை போன்ற கவிதைத் தொகுதிகளையும்; மரப்பாச்சி, தொலை கடல், அரளி வனம் போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும்; யாரும் யாருடனும் இல்லை என்னும்நாவலையும் வெளியிட்டுள்ளார்.

வெறும் பொழுது
(தொகுப்பு: வெறும் பொழுது)

வெளிவாசல் வழியே
சலித்த மதியம்
சாக்கடை நீரருந்தும் குருவி
உதிர்கிற மென்மையும்
உடைபடாக் கடினமும்
விசித்திரமாய் முடைந்த மௌனம்.
திரும்பவும் நெஞ்சுறுத்தும்
விரும்பாத நினைவின் துரு
குனிந்து நூல் உருவி
வளைத்துப் பின்னல்களைத்
தொடுகிறது ஊசி, சிரத்தை பிசகாமல்,
உண்ணாமலையக்காவின் அங்கலாய்ப்பில்
ஆச்சியின் பெட்பான் அவஸ்தைகள்,
முருகேஸ்வரிக்குப் பிறந்ததும் நெறிபட்ட
மூன்றாவது பெண் குழந்தை
மீன்காரம்மாவின் மகள்
பதினான்கிலேயே தாலியறுத்த கதை
அடுத்த தெரு வளைகாப்பு
அம்மாவின் மூட்டுவலி
என்றிவ்வாறு செய்திகள்
மிதந்து நெளியும் சூழ்ந்து
பின்னல்கள் தொடரத் தொடர
உருண்டு, சிறுத்து
கரைந்து காணாமலாகும்
கம்பளி நூற்கண்டு,
எதையோ உருவகிப்பதாக
எனக்குப் பிரமை காட்டி



இவையன்றி
காரணமற்ற உற்சாகத்தோடு
கருஞ்சாம்பல் அணிலொன்று
களித்துத் திரியும் தனித்து.

ஏ) ஜனமித்திரன்

கவிஞர் ஜனமித்திரனின் இயற்பெயர் மு. இளங்கோவன் என்பதாகும். இவர் மதுரை, தியாகராசர் கல்லூரியின் ஆங்கிலத்துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். தமிழ் நவீன இலக்கியங்களிலும் ஆங்கில இலக்கியங்களிலும் நல்ல பயிற்சியுடைய இவரது கவிதைகள் சிற்றிதழ்களில் வெளிவந்துள்ளன. வெவ்வேறு காலங்களில் இவர் எழுதிய சிறுகதைகள் ‘விரிய திறந்த சிறகுகள்’ என்னும் தலைப்பில் தொகுப்பாக்கப்பட்டிறுக்கிறது. இவரது இச்சிறுகதைகள்  பெரும்பாலும் கணையாழி இதழில் வெளிவந்தவை.
நேற்று
(தொகுப்பு: ஜனமித்திரன் கவிதைகள்)

        நேற்று
                        உதிர்ந்து விழுந்த
                        ஒற்றை நட்சத்திரம்
                        நீரில் மிதக்கிறது
                        ஓடை மீன்களுடன்
            நேற்று
                        மலர்ந்து மணந்த
                        தோட்டத்துப் பூ
                        வானில் கிடைக்கிறது
                        நிலவுக்குப் பக்கத்தில்
            நேற்று
                        எழுதிப் படித்த
                        கானல்வரிப் பாடல்
                        காற்றில் அலைகிறது
                        இறந்து போன
                        குழந்தையின் உயிருடன்
            நேற்று
                        பார்த்த எல்லாமும்
                        அதனதன் இடத்தில்
                        இன்னமும் இடம் சேராமல்
                        ஒற்றைவரிப் பாடலுடன்
                        அலைந்து கொண்டிருக்கிறது
                        அந்த இறந்தகாலப்

                        பாடல்களின் புல்லாங்குழல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக