வெள்ளி, 11 செப்டம்பர், 2015

P 111 இக்கால இலக்கியம் (கூறு 2)

அ) கவிஞர் கண்ணதாசன்
கவிஞர் கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா.  சிறுகூடல்பட்டியில் தன வணிகர் மரபில் தாய் விசாலாட்சி ஆச்சி, தந்தை சாத்தப்பனார் ஆகியோருக்கு 1927 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் நாள் பிறந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதி புதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையும் படித்தார். பின்னர்  திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.
திரைப்படத்துறைக்குக் கதை எழுதுவதற்காக வந்த இவர், பாடல்களை எழுதத் துவங்கினார். 1949 ஆம் ஆண்டு வெளிவந்த கள்வனின் காதலி என்னும் திரைப்படத்திற்காக எழுதிய ‘கலங்காதிரு மனமே’ என்ற பாடல்வழி திரைத்துறைக்கு அறிமுகமானார்.
33 ஆண்டுகள் திரைத்துறையில் பாடலாசிரியராக இருந்த இவர் ஐந்தாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.  பாடலாசிரியராக மட்டுமல்லாது திரைக்கதை ஆசிரியராகவும், படத்தயாரிப்பாளராகவும், இதழாசிரியராகவும் திகழ்ந்தார். தென்றல், கண்ணதாசன் என்ற இலக்கிய இதழ்களை வெளியிட்டார்.
இந்து மதத்தில் பிறந்தவராயினும் மதவேற்றுமை கருதாமல்  இயேசுகாவியம்  பாடியவர்.  கம்பரின் செய்யுளிலும்,பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர்.
அண்ணாவின் திராவிட கழகத்தில் முதலில் தன்னை இணைத்துக்கொண்ட கண்ணதாசன், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து வெளியேறினார்.
உடல்நிலை காரணமாக சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 இல் மருத்துவம் பலனளிக்காமல் இறந்தார். அக்டோபர் 20 இல்  அமெரிக்காவிலிருந்து  அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன்  அக்டோபர் 22 இல் எரியூட்டப்பட்டது.

திரைப்படம்: ஆண்டவன் கட்டளை

 ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு


ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் அமைத்த நியதி

சொல்லுக்கு செய்கை பொன்னாகும் வரும் இன்பத்தில் துன்பம் பட்டாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்

உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்

உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்

ஆசை கோபம் களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித உருவில் தெய்வம்

இதில் மிருகம் என்பது கள்ள மனம் உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்


திரைப்படம்: குழந்தைக்காக

ராமன் என்பது கங்கை நதி
அல்லா என்பது சிந்து நதி
யேசு என்பது பொன்னி நதி
நதிகள் பிறக்குமிடம் பலவாகும்
எல்லா நதிகளும் கலக்குமிடம் கடலாகும்.
தேவன் வந்தான், தேவன் வந்தான்
குழந்தை வடிவிலே - என்னைத்
தேடித் தேடி காவல் கொண்டான்
மழலை மொழியிலே!

பாப்பா தெய்வப் பாப்பா
பாசம் கொஞ்சும் பாப்பா
அன்னை மேரி தெய்வ பாலன்
எங்கள் யேசு தேவ தூதன்
ராஜசபை ஜோதி கண்டேன்
ஞானக் கோயில் தீபம் கண்டேன்.

பாப்பா தெய்வப் பாப்பா
பாசம் கொஞ்சும் பாப்பா
அல்லாஹ் அக்பர் என்றேன்
ஆண்டவனே அடிமை என்றேன்
பிள்ளை ஒன்றைப் பேசச் சொன்னான்.
எல்லாமும் இதுதான் என்றான்.

பாப்பா தெய்வப் பாப்பா
பாசம் கொஞ்சும் பாப்பா
வேணுகான ஓசை கேட்டேன்
விஜயன் கேட்ட கீதை கேட்டேன்
நேரில் வந்த கண்ணன் கண்டேன்
கண்ணனென்னும் ராமன் கண்டேன்
பாப்பா தெய்வப் பாப்பா
பாசம் கொஞ்சும் பாப்பா

ஆ) உடுமலை நாராயணகவி
கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள பூவிளைவாடி என்னும் பூளைவாடிச் சிற்றூரில் கிருஷ்ணசாமி முத்தம்மாள் இணையருக்கு 1899 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் நாள் மகனாகப் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் நாராயணசாமி என்பதாகும்.
உடுமலைச் சரபம் முத்துசாமிக் கவிராயர் என்பவர் 'ஆரிய கான சபா' என்னும் நாடக மன்றத்தின் ஆசிரியராக இருந்தார். நாராயண கவி தனது பன்னிரண்டாம் வயது முதல் இருபத்தைந்தாம் வயது வரை முத்துசாமிக் கவிராயர் செல்லுமிடம் எல்லாம் உடன்சென்று நாடகம் நடித்தும், எழுதியும், பாடியும் அதன் நுட்பங்கள் அனைத்தையும் அறிந்தார். பின்னர் மதுரை சங்கரதாஸ் சுவாமிகளைச் சென்றடைந்தார். அவரிடம் முறையாக யாப்பிலக்கணம் முழுதும் ஐயந்திரிபறக் கற்றுணர்ந்தார். நாடக மன்றங்கள் நிறைந்த மதுரை இவருக்கு உதவியாய் இருந்தது.
மதுரையில் நாராயணசாமி பல நாடகங்களுக்கு உரையாடல்களும் பாடல்களும் எழுதினார். அதே சமயத்தில் தேசத்தில் சுதந்திர வேள்வித்தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியிருந்தது. தன் பங்காக ஏராளமான தேசிய உணர்வுப் பாடல்களை எழுதி அன்றைய மேடைகள் தோறும் முழங்க வைத்தார்.
தொடர்ந்து திரையிசைப்பாடல் உலகிலும் நுழைந்தார். முதன்முதலாகப் பாடல் எழுதிய திரைப்படம் "சந்திர மோகனா அல்லது சமூகத்தொண்டு" ஆகும். "கவிராயர்" எனத் திரையுலகத்தினரால் அழைக்கப்பட்ட இவரிடம் பாடல்களைப்பெற அந்நாளில் திரைப்படத் தயாரிப்பாளர்கள் நடையாய் நடந்தார்கள். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் கண்ணதாசன் போன்றோர் இவருக்குப் பின்னர் வந்தவர்கள். உழைப்பாளர்களைப் பற்றியும் ஏராளமான பாடல்களை எழுதியுள்ளார். 1981 ஆம் ஆண்டு மே 23 ஆம் நாள் இயற்கை எய்தினார்.

திரைப்படம்: விவசாயி

நல்ல நல்ல நிலம் பார்த்து
நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே
நாணயத்தை வளர்கண்ணும்

பள்ளி என்ற நிலங்களிலே
கல்விதனை விதைக்கணும்
பிள்ளைகளை சீர்திருத்தி
பெரியவர்கள் ஆக்கணும்
கன்னியர்க்கும் காளையர்க்கும்
கட்டுப்பாட்டை விதைத்து
கற்பு நிலை தவறாது
காதல் பயிர் வளர்த்து
அன்னை தந்தை ஆனவர்க்கு
தம் பொறுப்பை விதைத்து
பின் வரும் சந்ததியை
பேணும் முறை வளர்த்து
இருப்பவர்கள் இதயத்திலே
இரக்கமதை விதைக்கணும்
இல்லாதார் வாழ்க்கையிலே
இன்பப் பயிர் வளர்க்கணும்
பார் முழுதும் மனிதக்குலப்
பண்புதனை விதைத்து
பாமரர்கள் நெஞ்சத்திலே
பகுத்தறிவை வளர்த்து
போர் முறையை கொண்டவர்க்கு
நேர்முறையை விதைத்து
சீர் வளர தினமும் வேகமதை வளர்த்து
பெற்ற திருநாட்டினிலே
பற்றுதனை விதைக்கணும்
பற்றுதனை விதைத்துவிட்டு-
நல்ல ஒற்றுமையை வளர்க்கணும்

திரைப்படம்:

விஞ்ஞானத்த வளர்க்கப் போறண்டி – மேனாட்டாரை
விருந்துக் கழைச்சுக் காட்டப் போறண்டி

தஞ்சாவூரு ஏத்தம் எறச்சு
தலைகீழாப் பாடம் படிச்சு
பொஞ்சாதி புருஷன் இல்லாமெ
புள்ளையும் குட்டியும் பொறக்குறாப்புல                           (விஞ்ஞானத்த)         

விஞ்ஞானத்த வளர்க்கப் போறண்டி – மேனாட்டாரை
அஞ்ஞானத்தை அழிக்கப் போறண்டி
அடுத்த நாட்டுக்காரன் போல ஆளக்கொல்லாம
ஊரப் பாழு பண்ணாம                                                         (விஞ்ஞானத்த)

அது மட்டுமா?
புஞ்ச நெலத்துப் பருத்திச் செடியில்
பொடவ ரவிக்கை வேட்டி காய்க்கப்
பஞ்சைக் கிழவன் தன்னை வாழப்
பருவ மாக்கி நாட்டைக் காக்க                                            (விஞ்ஞானத்த)


கைத் திறமையைக் காட்டப் போறண்டி – ஒரு கவியப் பாடிக்
காத்து மழையும் காட்டப் போறண்டி
மாட்டு வண்டிக்குச் சூச்சத்த வச்சு
ஏம் மாமியாருக்கு ஓட்டி ஓட்டிக் காட்டப் போறண்டி
அதுல ஒன்னையும் ஏத்திக்கிட்டுப் போகப் போறண்டி

வீட்டுக் கென்ன செய்யப் போறீங்க – அதையும்
கொஞ்சம் விபரமாக விளக்கிப் போடுங்க
வீட்டுக்கா?
ஆமா
என்ன வேணும்?
கேட்டுக்கோ
நெல்லு குத்த மாவரைக்க
நீரெறைக்க மிசுனு
அல்லும் பகலும்
ஆக்கி அரிக்க அதுக்கொரு மிசுனு
அடச்சே
பள்ளிக் கூடத்துக்குப் புள்ளங்க போகாம
முடிஞ்சுதா?
ஒன்ன
மறந்துட்டேன்
என்னம்மா?

பட்டனத் தட்டி விட்டா ரெண்டு தட்டுல
இட்லியும் காபியும் நம்ம
பக்கத்தில் வந்துடணும்
கட்டுலுக்கு மேல பேனு காத்து சுத்தோணும்
காலங் காட்டும் கருவியும் வேணும்

இம் . . . வேணும் வேணும் அடி பைத்தியம் – நம்ம நாட்டிலே
வீட்டு வேலையச் செஞ்ச பொம்மனாட்டியப் பாரு
மேனாட்டு நாகரீகம் கொண்ட மேனியப் பாரு
அவ காட்டுக்குப் போவா களையெடுப்பா
காரியம் பாப்பா கஞ்சி குடிப்பா
இவ காரிலே போவா ஊரச் சுத்துவா
காப்பி குடிப்பா கண்ணாடிய பாப்பா.


இ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கம்படுத்தான்காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் - விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 13.04.1930-இல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். பள்ளிப்படிப்பு மட்டுமே எட்ட முடிந்த கல்யாணசுந்தரம் திராவிட இயக்கத்திலும், பொதுவுடமை இயக்கத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.

பத்தொன்பதாவது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர். இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை. பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும், அந்தரங்க சக்தியுடன் பாடல்களாக இசைத்தார். இவர் இயற்றி வந்த கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டு வந்தது. 1955ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார்.

இளம் வயதிலேயே விவசாய சங்கத்திலும், பொதுவுடைமை இயக்கத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தான் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை உயர்த்திப் பிடிக்கும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது ஈடுபட்டார்.நாடகக் கலையில் ஆர்வமும், விவசாய இயக்கத்தின் பால் அசைக்கமுடியாத பற்றும் கொண்டிருந்தார். விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்க்கத் தீவிரமாகப் பங்கெடுத்தார். தமது 29 ஆண்டு வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர், என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டு இறுதியில் கவிஞராக உருவானவர்.

திரைப்படம்: நாடோடி மன்னன்

சும்மா கிடந்த நிலத்தை கொத்தி
சோம்பல் இல்லாம ஏர் நடத்தி
கம்மா கரையை ஒசத்தி கட்டி
கரும்பு கொல்லையில் வாய்க்கால் வெட்டி
சம்பா பயிரை பறிச்சு நட்டு
தகுந்த முறையில் தண்ணீர் விட்டு
நெல்லு விளஞ்சிருக்கு வரப்பும் உள்ள மறஞ்சிருக்கு -
அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலும் தானே மிச்சம்
கையும் காலும் தானே மிச்சம்

அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
கையும் காலுந்தானே மிச்சம்
இப்போ காடு விளையட்டும் பொண்ணே
நமக்கு காலமிருக்குது பின்னே
காலமிருக்குது பின்னே

மண்ணை பொளந்து சொரங்கம் வச்சு
பொண்ணை எடுக்க கனிகள் வெட்டி
மதிலு வச்சு மாளிகை கட்டி
கடலில் மூழ்கி முத்தை எடுக்கும்
வழிகாட்டி மரமான தொழிலாளர் வாழ்க்கையிலே
பட்ட துயரினி மாறும் -
ரொம்ப கிட்ட நெருங்குது நேரம்
அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
கையும் காலுந்தானே மிச்சம்
இப்போ காடு விளையட்டும் பொண்ணே
நமக்கு காலம் இருக்குது பின்னே
நமக்கு காலம் இருக்குது பின்னே

மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே -
பசி வந்திடக்காரணம் என்ன மச்சான்
அவன் தேடிய செல்வங்கள் வேறு இடத்திலே
சேர்வதினால் வரும் தொல்லையடி
பஞ்ச பரம்பரை வாழ்வதற்கே இனி
பண்ண வேண்டியது என்ன மச்சான்
தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது
சிந்திச்சு முன்னேற வேணுமடி
வாடிக்கையாய் வரும் துன்பங்களை
இன்னும் நீடிக்க செய்வது மோசமன்றோ
இருள் மூடிக் கிடந்த மனமும் வெளுத்து
சேகரித்தால் இன்பம் திரும்புமடி
நல்லவர் ஒன்றாய் இணைந்துவிட்டால்
மீதம் உள்ளவரின் நிலை என்ன மச்சான்
நாளை வருவதை எண்ணி எண்ணி
அவர் நாழிக்கு நாழி தெளிவாரடி

அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
கையும் காலுந்தானே மிச்சம்
நானே போடப்போறேன் சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்

திரைப்படம்: அரசிளங்குமரி

ஏற்றமுன்னா ஏற்றம்
இதிலே இருக்கு முன்னேற்றம்
எல்லாரும் பாடுபட்டா -
இது இன்பம் விளையும் தோட்டம்
எல்லாரும் பாடுபட்டா -
இது இன்பம் விளையும் தோட்டம்

கிணற்று நீரை நிலத்துக்கு தான் எடுத்து தரும் ஏற்றம்
கிளைவெடிக்கும் பயிர்களுக்கு உயர்வளிக்கும் ஊட்டம்
தந்தனத் தானே
ஏலேலோ .....
தந்தனத் தானே
ஏலேலோ .....

எறும்பு போல வரிசையாக
எதிலும் சேர்ந்து உழைக்கணும்
இடுப்பே வளையா மனிதர்
எதிர் பார்த்து பொழைக்கணும் -
நம்மை எதிர் பார்த்து பொழைக்கணும்

உடும்பு போல உறுதிவேனும்
ஓணான் நிலைமை திருந்தனும்
உடைஞ்சு போன நமது இனம்
ஒன்னா வந்து பொருந்தனும்
தந்தனத் தானே
ஏலேலோ .....
தந்தனத் தானே
ஏலேலோ .....

ஓதுவார் தொழுவாரெல்லாம் உழுவார் தலைக்கடையிலே
உலகம் செழிப்பதெல்லாம் ஏர் நடக்கும் நடையிலே
ஆதிமகள் அவ்வை சொல்லை அலசி பாத்தா மனசிலே
ஆதிமகள் அவ்வை சொல்லை அலசி பாத்தா மனசிலே
நீதிஎன்ற நெல் விளையும்
நெருஞ்சி படர்ந்த தரிசிலே
போடு .... தந்தனத் தானே
ஏலேலோ
தந்தனத் தானே ஏலேலோ

விதியை எண்ணி வீழ்ந்து கிடக்கும்
வீணரெல்லாம் மாறனும்
வேலை செஞ்சா உயர்வோமென்ற
விபரம் மண்டையில் ஏறனும்
விதியை எண்ணி வீழ்ந்து கிடக்கும்
வீணரெல்லாம் மாறனும்
வேலை செஞ்சா உயர்வோமென்ற
விபரம் மண்டையில் ஏறனும்
நிதியை எண்ணும் பெரியவங்க
நெஞ்சில் அன்பு சேரனும்
நிரந்தரமா சகலருமே சுதந்திரமா வாழனும்
தந்தனத் தானே ஏலேலோ .....
தந்தனத் தானே ஏலேலோ .....


ஈ) கவிஞர் மருதகாசி
திருச்சிராப்பள்ளி மாவட்டம் மேலக்குடிகாடு கிராமத்தில் பிறந்தவர் மருதகாசி. தந்தை பெயர் அய்யம்பெருமாள், தாயார் மிளகாயி அம்மாள். உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றபின், கும்பகோணம் அரசுக் கல்லூரியில் சேர்ந்து, உயர் கல்வி கற்றார். 
மருதகாசி, சிறு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றலைப் பெற்றிருந்தார். கல்லூரிப் படிப்புக்குப் பிறகு, குடந்தையில் "தேவி நாடக சபை"யின் நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதி வந்தார். மு. கருணாநிதி எழுதிய மந்திரிகுமாரி போன்ற நாடகங்களுக்குப் பாடல் எழுதினார். கவிஞர் கா. மு. ஷெரீபின் நாடகக் குழுவுடன் இணைந்து பணியாற்றினார். இக்குழுவில் இசையமைத்த திருச்சி லோகநாதனின் மெட்டுகளுக்கும் பாடல்கள் எழுதிவந்தார். 
1949 இல்  பெண் எனும் மாயப் பேயாம்… பொய் மாதரை என் மனம் நாடுமோ… என்று தொடங்கும் பாடலை மாயாவதி என்ற படத்திற்காக மருதகாசி எழுதினார். இதுவே இவரது முதல் திரையிசைப் பாடலாகும்.  திரைக்கவித்திலகம், கலைமாமணி போன்ற பட்டகளைப் பெற்றவர்.

திரைப்படம்: தாய்க்குப்பின் தாரம்

பாலும் தேனும் பெருகி ஓடுது
பறந்த சீமையிலே நாம்
பொறந்த சீமையிலே ஆனா
பாடுபடுறவன் வயிறு காயுது
பாதி நாளையிலே - வருசத்தில்
பாதி நாளையிலே
                        ஓ என்னடா தம்பி நேராப்போடா
மனுசன மனுசன் சாப்பிடுறான்டா தம்பிப் பயலே - இது
மாறுவதெப்போ வாழுவதெப்போ நம்மக் கவலே

மனுசன மனுசன் சாப்பிடுறான்டா தம்பிப் பயலே - இது
மாறுவதெப்போ வாழுவதெப்போ நம்மக் கவலே

வானம் பொழியுது பூமி வௌயுது தம்பிப் பயலே - நாம்
வாடி வதங்கி வளப்படுத்துறோம் வயலே - ஆனா
தானியமெல்லாம் வலுத்தவனுடைய கையிலே - இது
தகாதுன்னு எடுத்து சொல்லியும் புரியலே - அதாலே
                                                                                                (மனுசன)
தரையைப் பார்த்து நிக்குது நல்ல கதிரு – தன்
குறையை மறந்து மேலே பாக்குது பதரு – அது போல்
அறிவு உள்ளது அடங்கிக் கிடக்குது வீட்டிலே – எதுக்கும்
ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் பண்ணுது நாட்டுலே - அதாலே
                                                                                                (மனுசன)

ஆணவத்துக்கு அடிபணியாதே தம்பிப் பயலே – எதுக்கும்
ஆமாம்சாமி போட்டுவிடாதே தம்பிப் பயலே
பூனையைப் புலியாய் எண்ணி விடாதே தம்பிப் பயலே – ஒன்னை
புரிஞ்சுக்காம நடக்காதேடா தம்பிப்பயலே  - டேய்
                                                                                                (மனுசன)

திரைப்படம்: வண்ணக்கிளி

ஆண்: ஆத்திலே தண்ணி வர
                        அதில் ஒருவன் மீன் பிடிக்க
                        காத்திருந்த கொக்கு அதைக்
                        கவ்விக் கொண்டு போவது ஏன்? கண்ணம்மா - அதைப்
                        பாத்து அவன் ஏங்குவதேன்? சொல்லம்மா

            பாத்தி கட்டி நாத்து நட்டு
            பலனெடுக்கும் நாளையிலே
            பூத்ததெல்லாம் வேறொருவன்
            பாத்தியமா போவது ஏன்? கண்ணம்மா - கலப்பை
            புடிச்சவனும் தவிப்பது ஏன்? சொல்லம்மா

பெண்: நன்னானே னானே னானே
          னானே நன்னானே
          நன்னானே நன்னானே னானே நன்னானே

ஆண்: பஞ்செடுத்து பதப்படுத்தி
            பக்குவமா நூல் நூற்று
            நெஞ்சொடிய ஆடை நெய்வோன் கண்ணம்மா – இங்கு
            கந்தலுடை கட்டுவதேன்? சொல்லம்மா

            காத்திருக்கும் அத்தை மவன்
            கண் கலங்கி நிற்கையிலே
                        நேத்து வந்த ஒருவனுக்கு
            மாத்து மாலை போடுவதேன்? கண்ணம்மா – அவன்
            நேத்திரத்தை பறிப்பது ஏன்? சொல்லம்மா?                                 (ஆத்திலே)

பெண்: நன்னானே னானே னானே
          னானே நன்னானே
          நன்னானே நன்னானே னானே நன்னானே

ஆண்: கண்ணம்மா! சொல்லம்மா!
கண்ணம்மா! சொல்லம்மா!

கண்ணம்மா! வ . . .   . . . வண்ணம்மா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக